அன்பானவர்களே, "நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்" (யோவான் 14:18) என்று இன்றைக்கு ஆண்டவர் உங்களிடம் கூறுகிறார். ஆம், கர்த்தராகிய பரிசுத்த ஆவியானவர், திரியேக தேவனாயிருக்கிறார். ஆண்டவராகிய இயேசுவும் பரிசுத்த ஆவியானவரும் ஒருவரே.

சீஷர்கள் மூன்று ஆண்டுகள் இயேசுவுடன் இருந்து, அவருடன் ஊழியம் செய்தபோது, சுவிசேஷத்தை பிரசங்கிக்கும்படி அவர்களை பெலப்படுத்தினார். வியாதியுற்றோரை சுகப்படுத்தவும், பிசாசுகளை துரத்தவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். இயேசு, தேவ ராஜ்யத்தை குறித்து அநேக காரியங்களை அவர்களுக்கு போதித்தார்; அவருடன் அவர்கள் மிகுந்த அந்நியோந்நியமானார்கள். இயேசுவை விட்டு பிரிய வேண்டும் என்பதை அவர்களால் தாங்க இயலவில்லை. குறிப்பாக, இயேசு தம் மரணத்தைக் குறித்தும், உயிர்த்தெழுதலைக் குறித்தும் விளக்கியதை அவர்களால் தாங்க இயலவில்லை. அவரது பிரசன்னத்தை இழந்துவிடுவோம் என்று அறிந்து வருந்தினார்கள். ஆனால் இயேசு, அவர்கள் எண்ணங்களை அறிந்து, "நான் உங்களை திக்கற்றவர்களாக விடமாட்டேன். திரும்பவும் உங்களிடத்தில் வருவேன்," என்றார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, இயேசு தாம் செல்வது அவர்களது நன்மைக்காகவே என்று விளக்கினார். "நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்" (யோவான் 16:7) என்று கூறினார். ஆம், தாம் செல்வது நல்லது என்றும், அப்போதுதான் தாம் புதிதான, வல்லமையானவிதத்தில் திரும்ப வந்து அவர்களுக்குள் வாசம்பண்ண முடியும் என்று இயேசு கூறினார். "அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்" (அப்போஸ்தலர் 17:28) என்று வேதம் கூறுகிறது. தேவனுடைய பரிபூரணம் நம் இருதயங்களை நிரப்புவதை நாம் அனுபவிக்கும்போது, அனாதையாக உணரமாட்டோம். தேவ அன்பு நமக்குள் வழிந்தோடும்; கர்த்தருடைய சந்தோஷம் நம்மை முற்றிலுமாய் நிரப்பும். ஆகவேதான் வேதம், "ஜீவமார்க்கங்களை எனக்குத் தெரியப்படுத்தினீர்; உம்முடைய சந்நிதானத்திலே என்னைச் சந்தோஷத்தினால் நிரப்புவீர்" (அப்போஸ்தலர் 2:28) என்று கூறுகிறது. ஆகவே, அன்பானவர்களே, இனிமேல் ஒருபோதும், நான் ஒரு அனாதை என்று சொல்லாதிருங்கள்.

நான் என் பெற்றோரை இழந்தபோது, அடிக்கடி மற்றவர்களிடம் நான் ஒரு அனாதை என்று சொல்லுவேன். ஒருநாள் என் கணவர் எனக்கு ஆலோசனை கூறி, "இவாஞ்சலின், இனி நீ அனாதை அல்ல. இந்த உலகில் நாம் அனாதைகள் அல்ல. இவாஞ்சலின், இயேசு உனக்குள் இருக்கிறார். பரிசுத்த ஆவியானவரின் வரங்கள் உனக்குள் இருக்கின்றன; ஆண்டவர் உன்னை ஊழியத்தில் வல்லமையாக பயன்படுத்தி வருகிறார். உனக்குள் இருக்கும் தேவ பிரசன்னம், உனக்கு சந்தோஷத்தை அளிக்கும் என்று நினைக்கவில்லையா?" என்று கேட்டார். அதன்பிறகு, நான் அனாதை என்று சொல்வதை நிறுத்திவிட்டேன்.

இன்றைக்கு இதை நீங்கள் வாசிக்கும்போது, அனாதையாக இருப்பதைபோல உணரலாம். இப்படி நீங்கள் சொன்னால், தனிமையுணர்வு உங்களை பாரப்படுத்த தொடங்கும்.  அன்பானவர்களே, ஒருபோதும் உங்களை அனாதை என்று எண்ணாதிருங்கள். இன்றைக்கு தேவனை நோக்கிக் கூப்பிடுங்கள். அவர் வந்து உங்களுக்குள் வாசம்பண்ணுவார்; தமது பிரசன்னத்தினாலும் சந்தோஷத்தினாலும் உங்களை நிரப்புவார். "நான் உனக்குள் அமர்ந்திருப்பேன்; கெம்பீரமாய் பாடுவேன்," என்று வேதத்தில் கர்த்தர் கூறுகிறார். ஒருபோதும் தனிமையாய் இருப்பதாக எண்ணாதிருங்கள். ஆண்டவர் இன்றைக்கு உங்களிடம் வருவார். ஒருவேளை, அபிஷேகத்தை இழந்துபோய்விட்டதாக நீங்கள் நினைக்கலாம். இன்றைக்கு திடன்கொள்ளுங்கள். ஆண்டவர் அதை திரும்ப தருவார். ஆண்டவருக்கு செய்யும் ஊழியத்தில், நீங்கள் இழந்துவிட்டதாக நினைக்கிற எல்லா வரங்களும், அபிஷேகமும் உங்களுக்குத் திரும்ப கொடுக்கப்படும். அன்பானவர்களே, ஆண்டவர் திரும்பவும் உங்களிடமாய் வருகிறார்.

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, உம்முடைய வார்த்தை என் வாழ்வில் நிறைவேற வேண்டும் என்று ஜெபிக்க உம் முன்னே வருகிறேன். என்னை திக்கற்றவனா(ளா)க விட்டுவிடாமல், உம்முடைய வல்லமையினாலும் பிரசன்னத்தினாலும் நிரப்பும். உம்முடைய சீஷர்களை நீர் பெலப்படுத்தியதுபோல, பட்சிக்கிற அக்கினிபோன்ற உம்முடைய அபிஷேகத்தை என்மேல் பொழிந்தருளும். உம்முடைய சந்தோஷம் என் உள்ளத்தை நிரப்பட்டும்; உம் பிரசன்னம் என்னுள் தங்கியிருக்கட்டும். ஆண்டவரே, நீர் வாக்குப்பண்ணியபடியே, நீர் திரும்பவும் என் பக்கமாய் வந்து, என்னை மீண்டும் மீண்டும் நிரப்பியருளும். நான் வெறுமையாகவோ, உடைந்துபோன நிலையிலோ காணப்படாதபடி, என் பாத்திரம் நிரம்பி வழியத்தக்கதாக ஆசீர்வாதத்தை பொழிந்தருளும். பரிசுத்த ஆவியானவரே, நான், உம்முடைய திடநம்பிக்கை, சந்தோஷம், அன்பு நிறைந்தவனா(ளா)ய் இருக்கும்படி என்மீது நீர் இறங்கி, என்னை மறுரூபப்படுத்தும். ஆண்டவரே, என்னுடன் வந்து, நான் செய்கிற எல்லாவற்றையும் ஜெயமாக மாற்றுவதற்காக நன்றி செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன்.