அன்பானவர்களே, "உன்னை நித்திய மாட்சிமையாகவும், தலைமுறை தலைமுறையாயிருக்கும் மகிழ்ச்சியாகவும் வைப்பேன்" (ஏசாயா 60:15) என்ற வாக்குத்தத்த வசனத்தை நாம் தியானிக்கிறோம். இது, எவ்வளவு அருமையான வாக்குத்தத்தம்! உலகம் உங்களை புறக்கணிப்பதாக நீங்கள் நினைக்கலாம். 'நீ பிரயோஜனமற்றவன்(ள்). ஆகவே, உனக்கு எதிர்காலமே இல்லை', என்று உங்கள் நண்பர்கள், தோழியர் கூறலாம். அன்பானவர்களே, தேவன் உங்களை தலைமுறை தலைமுறையாக நித்திய மேன்மையாகவும் மகிழ்ச்சியாகவும் வைப்பார் என்பதை மறந்துபோகாதிருங்கள். ராகாபின் வாழ்வில் இப்படியே நடந்தது. நாம் வேதத்தில் ராகாப் என்ற விபசார பெண்ணை குறித்து வாசிக்கிறோம் (யோசுவா 2ம் அதிகாரம்). அக்கம்பக்கத்தில் வசித்தவர்கள் அவளைப் புறக்கணித்திருக்கலாம். ஆனால், இஸ்ரவேலராகிய வேவுகாரர்களுக்கு அவள் உதவி செய்து, தேவ ஜனங்களை காப்பாற்றியபடியினால் தேவன் அவளை நினைவுகூர்ந்தார். அவளுடைய பெயர் இயேசுவின் வம்ச வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது; அவள் தலைமுறை தலைமுறையாக நித்திய மேன்மையும் மகிழ்ச்சியுமாக விளங்கும்படியாக வைக்கப்பட்டாள். அன்பானவர்களே, அவள் தேவனை நம்பி, அவருடைய ஜனங்களுக்கு உதவி செய்தபடியினால், அவளுக்கு சரித்திரத்தில் விசேஷித்த இடம் கொடுக்கும் தேவன் தெரிந்துகொண்டார். அவ்விதம், நீங்களும் புறக்கணிக்கப்பட்டதாக நினைத்தால், நீங்கள் தேவனை நம்புகிறபடியினால், நித்திய மேன்மையும் மகிழ்ச்சியுமாக உங்களை வைப்பதற்கு தேவன் தெரிந்துகொண்டுள்ளார் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
ஒடிசா மாநிலத்திலுள்ள கந்தமால் என்ற ஊரைச் சேர்ந்த உத்தம் குமார் நாயக் என்ற அன்பு சகோதரரின் சாட்சி எனக்கு நினைவுக்கு வருகிறது. சிறுவயதில் அவர் இயேசுவை அறியாதவராக இருந்தார். 1990ம் ஆண்டு அவரது குடும்பத்தை பில்லிசூனிய வல்லமை பயங்கரமாக தாக்கியது. அதன் காரணமாக அவர் குடும்பத்தில் மூன்று பேர் மரித்துப்போனார்கள். அவரும் அதிகமாய் நோய்வாய்ப்பட்டு, அடைக்கலம் தேடி புவனேஸ்வரத்துக்கு ஓடிப்போனார். அங்கே அவர் தேவ ஊழியர் ஒருவரை சந்தித்தார். அவர் உத்தம் குமாருக்காக ஜெபித்தார். உத்தம் குமார், அற்புதவிதமாக சுகம் பெற்றார். இந்த அனுபவத்தின் மூலம் அவர் இயேசுவண்டை வழிநடத்தப்பட்டார். உடல் நலம் பெற்ற பிறகு அவர் தன் கிராமத்துக்கு திரும்பி, வியாபாரம் செய்ய ஆரம்பித்தார். அவருக்கு திருமணம் நடைபெற்றது. அவருக்கு நான்கு பிள்ளைகள் பிறந்தனர். 1995ம் ஆண்டில் ஒருவர் உத்தம் குமாருக்கு இயேசு அழைக்கிறார் பத்திரிகையை ஒன்றை கொடுத்துள்ளார். அதிலிருந்த சாட்சிகளையும் செய்திகளையும் வாசித்த அவருக்கு தேவனுக்கு ஊழியம் செய்யவேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளது. தன் வாழ்க்கையைக் குறித்த தேவ சித்தத்தை அறியும்படி அவர் சகோ.டி.ஜி.எஸ். தினகரனுக்கு கடிதம் எழுதினார். அவர், "ஜெபித்து, ஆண்டவருக்காக காத்திருங்கள். ஊழியம் செய்வதற்கு உங்களுக்குக் கதவுகள் திறக்கும்," என்று பதில் எழுதினார். 1998ம் ஆண்டு தேவன் அவரை முழு நேர ஊழியத்திற்கு அழைத்தார். பணக்கஷ்டத்தின் மத்தியிலும் அவர் ஆண்டவருக்கு உண்மையாய் ஊழியம் செய்தார். ஆனால், 2008ம் ஆண்டு அவருடைய கிராமத்தில் கலவரம் வெடித்தது. அநேகர் கொல்லப்பட்டனர்; வீடுகள் அழிக்கப்பட்டன. உத்தம் குமார் எல்லாவற்றையும் இழந்தார்; எப்படியோ தப்பித்து, குடும்பத்துடன் புவனேஸ்வரத்துக்கு ஓடினார். அங்கு, தங்குவதற்கு இடமில்லாமல் குடும்பமாய் தெருவில் வசித்து வந்தார். 2009ம் ஆண்டு, ராஞ்சியிலுள்ள போதகர் ஒருவர், தன் வீட்டுக்கு வந்து தங்கும்படி அழைத்தார். அங்கு இருந்தபோது, ராஞ்சியில் பிரார்த்தனை திருவிழா நடக்க இருப்பதையும் Dr. பால் தினகரன் ஊழியம் செய்ய இருப்பதையும் குறித்து அறிந்தார். மிகுந்த எதிர்பார்ப்புடன் அந்தக் கூட்டத்திற்கு வந்தார். Dr. பால் தினகரன், திடீரென, "இங்கே ஒரு மனிதர் இருக்கிறார். நீங்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டீர்கள். ஆண்டவர் உங்களுக்கு ஒரு வீட்டை தருவார்; மறுபடியும் உங்களை கட்டுவார்," என்று கூறினார். அந்த தீர்க்கதரிசனம் தனக்கானது என்று சகோதரர் உத்தம் குமார் உணர்ந்தார். அந்தக் கூட்டத்தின்போதே, Dr. பால் தினகரன், சகோதரர் உத்தம் குமார்மேல் கைகளை வைத்து அவருக்காக ஜெபித்தார். விரைவிலேயே பெரிய அற்புதம் நடந்தது. அவர் எந்த போதகர் வீட்டில் தங்கியிருந்தாரோ அந்த போதகருடைய தாயார், ஒரு வீடு வாங்க தேவையான பெரும்தொகையை உத்தம் குமாருக்குக் கொடுத்தார்கள். அவர் மிகுந்த நன்றியுடன் தன் கிராமத்துக்குத் திரும்பி, முன்பே தீர்க்கதரிசனத்தில் கூறப்பட்டபடி, ஒரு வீட்டை வாங்கினார். கடந்த 15 ஆண்டுகளாக அவர் அந்த வீட்டில் வசித்தபடி, தொடர்ந்து ஆண்டவருக்கு ஊழியம் செய்து வருகிறார். 2016ம் ஆண்டில் அவர் புவனேஸ்வரத்தில் ஒரு சபையை ஸ்தாபித்தார். அங்கு 200க்கும் மேற்பட்ட மக்கள் ஆண்டவரை ஆராதித்து வருகின்றனர். அவருடைய குடும்பத்தினர் அனைவருமே ஊழியத்தில் ஈடுபட்டுள்ளனர். கணக்கற்ற மக்கள் சுகமும் ஆசீர்வாதமும் பெற உதவுகின்றனர். அவரது ஜெபத்தின் மூலம் புற்றுநோயிலிருந்து மக்கள் சுகம் பெறுகின்றனர்; குழந்தையில்லாமல் தவிக்கும் தம்பதியர் குழந்தை பாக்கியம் பெறுகின்றனர். குடும்பமாய் ஆண்டவருக்கு ஊழியம் செய்வது அவருக்கு எவ்வளவு சந்தோஷம்!
அன்பானவர்களே, நீங்களும் நம்பிக்கையற்ற நிலையில் இருக்கலாம்; பில்லிசூனியம், பணக்கஷ்டம் ஆகிய இக்கட்டுகளின் மத்தியில் இருக்கலாம்; வீட்டை இழந்திருக்கலாம். ஆனால், நீங்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டு, அவருக்கு முழு மனதுடன் ஊழியம் செய்யும்போது, தேவன் உங்களை ஆசீர்வதித்து, தலைமுறை தலைமுறையாக உங்களை நித்திய மேன்மையாகவும் மகிழ்ச்சியாகவும் வைப்பார். இந்த சகோதரரின் குடும்பத்தினர், ஆண்டவருக்கு ஊழியம் செய்யும்படி ஆசீர்வதிக்கப்பட்டதுபோல், உங்கள் குடும்பமும் ஆசீர்வதிக்கப்படும். அவருடைய ஆசீர்வாதங்கள், உங்களுக்கு மட்டுமல்ல; உங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மற்றும் சந்ததியினருக்குள்ளும் பாய்ந்து வரும்.
ஆகவே, ஆண்டவருக்குக் காத்திருங்கள். அவரை ஏற்றுக்கொண்டு, முழு இருதயத்துடன் அவருக்கு ஊழியம் செய்யுங்கள். உங்களுக்கு இருக்கும் பொறுப்புகள், இக்கட்டுகளின் மத்தியிலும் உங்களைச் சுற்றிலுமிருக்கிறவர்களுக்கு இயேசுவின் நாமத்தில் ஊழியம் செய்யுங்கள். தேவன், தம்முடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவார்; தலைமுறை தலைமுறையாக உங்களை நித்திய மேன்மையாகவும் மகிழ்ச்சியாகவும் வைப்பார். இந்த வாக்குத்தத்தத்தை பெற்றுக்கொண்டு, அவருடைய உண்மைக்காக தேவனை ஸ்தோத்திரிப்போமா?
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, தலைமுறை தலைமுறையாக என்னை நித்திய மேன்மையாகவும் மகிழ்ச்சியாகவும் வைப்பதாக வாக்குப்பண்ணுவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இந்த உலகம் என்னை புறக்கணித்து, நம்பிக்கையற்றவன்(ள்) என்று கூறினாலும், உம்முடைய கிருபையின்மேலும் உண்மையின்மேலும் நான் இன்னமும் நம்பிக்கையாயிருக்கிறேன். புறக்கணிக்கப்பட்டிருந்த ராகாபை கனத்துக்குரிய இடத்துக்கு உயர்த்தியதுபோல, நீர் என்னை தெரிந்துகொண்டிருக்கிறீர்; உம்முடைய திட்டத்தில் விசேஷித்த இடம் கொடுத்திருக்கிறீர் என்று விசுவாசிக்கிறேன். ஆண்டவரே, என்னுடைய தத்தளிப்புகள் எல்லாவற்றையும் உம்முடைய கரங்களில் தருகிறேன். வாழ்வின் இக்கட்டுகளின் மத்தியிலும் முழு இருதயத்துடன் உமக்கு ஊழியம் செய்வதற்கு எனக்கு உதவும். உம்முடைய ஆசீர்வாதங்கள் என்மேலும், என் வீட்டார்மேலும், என் பிள்ளைகள், வரப்போகிற சந்ததிமேலும் பாய்ந்து வரவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.