அன்பானவர்களே,
"இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது" (ஏசாயா 49:16) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்தமாயிருக்கிறது.

தேவன் தம்முடைய உள்ளங்கையில் உங்களை வரைந்திருப்பது ஆச்சரியமான காரியமல்லவா? நாம் எப்போதும் அவர் பார்வையில் இருக்கிறோம் என்பதே இதன் பொருளாகும். நீங்கள் தேவனுக்கு சொந்த சம்பத்தாயிருக்கிறீர்கள். அவர் எப்போதும் உங்கள்பேரில் நினைவாயிருக்கிறார்.

"நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்" (உன்னதப்பாட்டு 8:6) என்று வேதம் கூறுகிறது. இதேவண்ணமாக தேவனுடைய கரங்களில் நீர் வரையப்பட்டிருக்க விரும்புகிறீர்களா? இயேசு அன்பாகவே இருக்கிறார். அவரது கரங்களில் ஆணிகள் கடாவப்பட்டதினால் உண்டான தழும்புகள் அவர் உங்கள்மேல் வைத்திருக்கும் அன்புக்கு ஆதாரமாயிருக்கின்றன. அந்தத் தழும்புகளை பார்க்கும்போதெல்லாம் அவர் உங்களை நினைவுகூர்கிறார். அவரது கரங்களில் வரையப்பட்டிருக்கும் உங்கள் பெயரை யாராலும் அகற்ற முடியாது. அவரது உச்சமான அன்புக்கு அடையாளமான இந்த ஆதாரத்திற்காக நீங்கள் எப்போதும் நன்றியுடன் இருக்கவேண்டும். தேவன் எப்போதும் உங்களை தம் மனதில் வைத்திருக்கிறார். அவர் உங்களை நினைக்கும்போது, உங்களை ஆசீர்வதிப்பார்.

உங்களை வாழ்த்தும்படி உங்கள் பெற்றோர் எப்போதும் உங்களை நினைத்துக்கொண்டிருப்பார்களல்லவா? உங்கள் எதிர்காலத்தைக் குறித்த காரியங்களை அவர்கள் திட்டம்பண்ணுவார்கள். பிள்ளைக்கு திருமணம் நடைபெறும்போது, பெற்றோர் தங்கள் முழு மனதையும் அதில் செலுத்தி, அவர்களுக்கானவற்றை திட்டம்பண்ணுவார்கள். இதுவும் தேவனுடைய உள்ளமாயிருக்கிறது. "இதோ, நான் உங்கள் பட்சத்திலிருந்து, உங்களைக் கண்ணோக்குவேன்; நீங்கள் பண்படுத்தப்பட்டு விதைக்கப்படுவீர்கள்" (எசேக்கியேல் 36:9) என்று வேதம் கூறுகிறது. உங்களை ஆசீர்வதித்து செழிக்கப்பண்ணும்படி தேவன் உங்கள்பேரில் நினைவாயிருக்கிறார். நீங்கள் எப்போதும் அவரது மனதில் இருக்கிறபடியினால், உங்கள் வேண்டுதல்களோடு எந்த நேரமும் அவரிடம் செல்லலாம்.

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, உம்முடைய உள்ளங்கைகளில் என்னை வரைந்திருப்பதற்காகவும், உம் பார்வையில் எப்போதும் எங்களை வைத்திருப்பதற்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்முடைய அநாதி அன்புக்காகவும், இயேசு என்மேல் தாம் கொண்டிருக்கும் ஆழமான அன்பை நிரூபிக்கும்வண்ணம் சுமந்த தழும்புகளுக்காகவும் நன்றி செலுத்துகிறேன். உம்முடைய பிரசன்னமும் ஆசீர்வாதமும் எப்போதும் என்னோடிருக்கிறதை எனக்கு நினைவுப்படுத்தும். நீர் எனக்கு எப்போதும் ஆதரவாயிருப்பீர் என்பதையும், என்னை வர்த்திக்கப்பண்ணும்படி நீர் நினைக்கிறீர் என்பதையும் நான் அறிந்து உமக்கு உண்மையாயிருக்கவும் எப்போதும் உம்மை தேடவும் எனக்கு உதவி செய்யும். உம்முடைய வாக்குத்தத்தத்தின் மீதும், அநாதி அன்பின் மேலும் நம்பிக்கையாயிருக்கிறேன் என்று அறிக்கையிட்டு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.