எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்று வேதத்திலிருந்து, "நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து, அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்" (எபேசியர் 2:19,20) என்ற அருமையான வாக்குத்தத்தத்தை தியானிப்போம். நீங்கள் இனிமேல் அந்நியரல்ல!  

அன்பானவர்களே, வேண்டாத அடிமைத்தன பழக்கங்களோடு நீங்கள் போராடிக்கொண்டிருக்கலாம். உலக இச்சை உங்களை புறம்பே இழுத்து, உங்கள் உள்ளத்தையும் மனதையும் பட்சித்துக்கொண்டிருக்கலாம். தேவனுடைய வார்த்தை கூறுவதுபோல நீங்கள் உலகத்தின் இச்சையிலும் கண்களிலும் இச்சையிலும் பல்வேறு சோதனைகளிலும் அகப்பட்டிருக்கலாம். ஆனால் இன்றைக்கு தேவன் தாம் வாக்குப்பண்ணியுள்ளபடி, உங்களை மறுரூபமாக்குவதற்கு ஆயத்தமாயிருக்கிறார். நீங்கள் அந்நியரும் பரதேசியுமாயிராமல் தேவனுடைய வீட்டாராயிருக்கிறீர்கள்.

வேதாகமத்தில் சவுல் என்ற பெயருள்ள மனுஷனை பார்க்கிறோம். அவன் இயேசு கிறிஸ்துவுக்கு முற்றிலும் எதிரானவனாக வாழ்ந்தான்; அவரைப் பின்பற்றினவர்களை அவன் துன்புறுத்தினான். ஆனால் ஒருநாள், இயேசு தம்முடைய எல்லையற்ற அன்பினால், தமஸ்குவுக்கு செல்லும் பாதையில் சவுலை சந்தித்தார். அந்தத் தருணத்தில், சவுல், தேவனின் மெய்யான அன்பை கண்டுகொண்டான்; அவன் வாழ்க்கை முற்றிலும் மாறியது. தன்னை முற்றிலுமாக ஆண்டவருக்கு அர்ப்பணித்தான். இயேசு கிறிஸ்து அவன் வாழ்க்கைக்குள் வந்து அவனை புது மனுஷனாக மாற்றினார். பழையவை கழிந்தன. அவன் தேவனுடைய பிள்ளையாக மாறினான்; மட்டுமல்ல, ஆண்டவரின் தெரிந்தெடுக்கப்பட்ட ஊழியனாகவும் மாறினான்.

அன்பானவர்களே, தேவனால் இன்றைக்கு உங்கள் வாழ்க்கையையும் மாற்ற முடியும். உலகப்பிரகாரமான ஆசை மற்றும் சோதனைகளில் அகப்பட்டிருக்கிறீர்களா? அவை தேவனிடமிருந்து உங்களை நித்தியமாய் பிரித்துவிடும்; ஆகவே, உங்கள் ஆத்துமாவை அழித்துப்போட அவற்றை அனுமதிக்காதீர்கள். இன்றைக்கு, மறுபடியும் தம்மிடம் வரும்படியாய் இயேசு கிறிஸ்து உங்களை அழைக்கிறார். சவுலை பவுலாக அவர் மாற்றியதுபோல, உங்கள் வாழ்க்கையையும் முற்றிலும் மாற்றுவார். தமக்குச் சொந்தமான பிள்ளையாக்குவார். தேவனின் வீட்டில் என் உடன் பிரஜையே, இயேசு, அன்பும் இரக்கமும் நிறைந்தவராய் கரங்களை விரித்து உங்களுக்காய் காத்திருக்கிறார். உங்களுக்கு புதுவாழ்வை தருவதற்கு அவர் வாஞ்சிக்கிறார். இப்போதே இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்வீர்களா? ஜெபித்து, இன்றைக்கு இந்த தெய்வீக ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வீர்களா?

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, நான் இனி அந்நியமானவன்(ள்) இல்லை; உம்முடைய வீட்டாரில் ஒருவன்(ள்) என்று வாக்குப்பண்ணுவதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். ஆண்டவரே, உம்மை விட்டு என்னை புறம்பே இழுக்கின்ற போராட்டங்கள், சோதனைகள், பாரங்கள் அனைத்தையும் உம்மிடம் ஒப்படைக்கிறேன். பாவமான என் கடந்த காலத்தை கழுவும்; என் உள்ளத்தை புதுப்பியும்; உமக்குள் என்னை புதுச்சிருஷ்டியாக மாற்றும். என்னை உம்முடைய பரிசுத்த ஆவியினால் நிறைத்து, உம்முடைய சத்தியத்திலும் நீதியிலும் நான் செல்லும்படி வழிநடத்தும். என் வாழ்வில் நீர் வேண்டும் என்பதால், உம்மை என் இரட்சகராக ஏற்றுக்கொண்டு, என் வாழ்வை ஆளுகை செய்யும்படி அழைக்கிறேன். உம்முடைய மாறாத அன்புக்காகவும் நீர் என்னை உம்முடைய குடும்பத்துக்குள் வரும்படி அழைக்கிறதற்காகவும் நன்றி செலுத்துகிறேன். உம்முடைய வாக்குத்தத்தங்களை நம்புகிறேன்; உமக்குள்ளான புதுவாழ்வில் களிகூர்ந்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.