எனக்கு அருமையானவர்களே, தேவன், நம்முடைய இரட்சிப்பின் தேவனாயிருக்கிறார். நம்முடைய பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டு, தேவனுடன் இணைக்கப்பட்டிருப்பதே நாம் பெற்றுக்கொள்ளக்கூடிய மிகப்பெரிய ஆசீர்வாதமாகும். இன்றைய வாக்குத்தத்த வசனம், "நானோவென்றால் கர்த்தரை நோக்கிக்கொண்டு, என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன்; என் தேவன் என்னைக் கேட்டருளுவார்" (மீகா 7:7) என்று கூறுகிறது.

சார்லஸ் என்ற வாலிபனின் சாட்சியை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். பாவத்தில் வாழும் மக்களோடு தன் 16வது வயதிலிருந்தே அவருக்குத் தொடர்பு இருந்தது. மதுப்பழக்கம், புகை பழக்கம், போதை மருந்து பழக்கம் ஆகியவற்றுக்கு அடிமையானார். எப்போதும், இவற்றுள் ஏதாவது ஒன்றின் மயக்கத்தில் இருப்பார். சிலவேளைகளில் எங்கே விழுந்துகிடக்கிறோம் என்பது கூட தெரியாமல் குப்பைத் தொட்டியின் அருகே படுத்திருப்பார். இவற்றிலிருந்து விடுபட தன்னால் முடிந்த அளவு எவ்வளவோ முயற்சித்தும் அவரால் இயலவில்லை. இதன் காரணமாக, உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் அவரை விட்டு விலகினர். அவருக்கு யாருமே ஆதரவாக இல்லை. அவருக்கு சாப்பிட எதுவுமில்லை; நோய்வாய்ப்பட்டார்; போதை பழக்கத்தினால் அவருடைய உறுப்புகள் சில சரியாக இயங்கவில்லை.

கோலார் தங்க வயல் பகுதியில் இயேசு அழைக்கிறார் கூட்டம் நடந்தபோது, சார்லஸின் உடன்பிறவா சகோதரர் அவரை அழைத்து வந்திருந்தார். பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்திருந்த அக்கூட்டத்தில் நான் தீர்க்கதரிசனமாக, அவருடைய பெயரை அழைத்தேன். "சார்லஸ் என்பவர் கூட்டத்தில் இருக்கிறார். தேவனுடைய வல்லமை உங்கள்மேல் வருகிறது.  அது உங்கள் சரீரத்தை நிரப்புகிறது. உங்கள் உறுப்புகளை புதிதாய் சிருஷ்டிக்கிறது. உங்களை ஒடுக்கிக்கொண்டிருக்கும் இருள் உங்களை விட்டு விலகுகிறது. இயேசுவின் வல்லமை அவருடைய ஊழியனாக மாறும்படி உங்களை மறுரூபப்படுத்துகிறது," என்று கூறினேன். அந்தத் தருணத்தில் தேவ வல்லமை அவர்மேல் வந்தது. அவருடைய அடிமைத்தனங்கள் எல்லாம் அகன்றன; அவர் உடனடியாக சுகத்தையும் விடுதலையையும் பெற்றுக்கொண்டார்.
தேவன் அவருக்கு புது வாழ்வை கொடுத்தார். அவர் கிறிஸ்துவுக்குள் புது மனுஷனாயிருக்கிறார். திருமணமாகி, தற்போது போதகராக இருக்கிறார். எவ்வளவு ஆச்சரியமான மாற்றம்!

அன்பானவர்களே, தீய பழக்கங்களிலிருந்து விடுபட விரும்புகிறீர்களா? பாவத்தின் ஒடுக்குதலிலிருந்து, பாவத்தின் சாபத்தினால் ஏற்படும் மனச்சோர்வு, கலக்கம் இவற்றிலிருந்து விடுதலை பெற விரும்புகிறீர்களா? இயேசு என்பதற்கு இரட்சகர் என்று அர்த்தம். ஆண்டவராகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்.  அவருக்கு மாத்திரமே, உங்கள் பாவங்கள் அனைத்திலிருந்தும் உங்களை மீட்டெடுக்கும் வல்லமை உண்டு.  அவர், "என்னிடம் வா. நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன். உனக்காக சிலுவையில் சிந்திய என்னுடைய இரத்தத்தினால் உன்னை சுத்திகரிப்பேன். உன்னை புது மனுஷனாக்குவேன். உன்னுடைய பாவங்களும் பாவ இச்சைகளும் போகும்படி கழுவுவேன். உன்னை என் பிள்ளையாக மாற்றுவேன்," என்று கூறுகிறார். ஆகவே, ஆண்டவராகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள். அவர் உங்களுக்கு இரட்சிப்பை அருளுவார்.

ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, இயேசுவின் வல்லமையான நாமத்தில் உம்முடைய சிங்காசனத்தின் முன்னே வருகிறேன். என்னுடைய பாவங்களுக்கு ஒரே பலியாக உம்முடைய குமாரனை அனுப்பியதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இப்போதும் என்னுடைய இரட்சகராகிய இயேசுவையும், அவர் தொங்கி, என்னுடைய பாவங்களுக்காக இரத்தஞ்சிந்திய சிலுவையையும் நோக்கிப் பார்க்கிறேன். என்னுடைய பாவங்களை உம்முடைய பரிசுத்த இரத்தத்தினால் கழுவி, என்னை சுத்திகரித்து, புது மனுஷனாக்கும்படி / மனுஷியாக்கும்படி ஜெபிக்கிறேன். ஜனங்கள் என்னில் உம்மைக் காணவும், உம்முடைய நாமம் மகிமைப்படவும் ஏதுவாக, போகுமிடமெல்லாம் உம்முடைய பிரசன்னத்தை சுமந்து செல்லும் பாத்திரமாக என்னை மாற்றும். "குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்," என்று உம்முடைய வசனம் கூறுகிறது. உம்முடைய பூரண விடுதலையை நான் அனுபவிக்கும்வண்ணம், என் வாழ்வை ஆட்கொண்டிருக்கும் எல்லா பாவ சுபாவங்களின் ஒடுக்குதலும், நடத்தைகளும் உம்முடைய வல்லமையான நாமத்தில் முறிக்கப்படுவதாக. ஆண்டவரே, என் ஆத்துமாவை இரட்சித்து, என்னுடைய அடிமைத்தனங்களிலிருந்து என்னை விடுதலையாக்குவதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்.  நான் உம்முடைய பிள்ளை. உம்முடைய மகிமைக்காக என்னை பயன்படுத்தவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.