அன்பானவர்களே, இன்றைக்கு, "நீதிமானுடைய சிரசின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்" (நீதிமொழிகள் 10:6) என்ற வாக்குத்தத்தத்தை தியானிக்கிறோம். நீதிமானின் சிரசின்மீது தங்கும் ஆசீர்வாதமானது, கனத்தையும் மேன்மையையும் தெய்வீக தயவையும் குறிக்கிறது. இஸ்ரேல் தேசத்தில் யாரையாவது கனம்பண்ண விரும்பினால், அந்த மனிதரின் தலையில் அபிஷேக எண்ணெயை ஊற்றுவார்கள். அவருக்கு மரியாதையும் மேன்மையும் கொடுக்கப்படுவதை இது குறிக்கும். அவ்வாறே ஆண்டவர் உங்களையும் கனம்பண்ண விரும்புகிறார். அதைத்தான் வேதம், "கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்துகொள்வீர்" (சங்கீதம் 5:12) என்று கூறுகிறது.

தேவனுடைய காருண்யமே அவருடைய ஆசீர்வாதங்களாகும். அவர் தம் கரங்களை நம்மேல் வைத்து, நம் தலையின்மேல் ஆசீர்வாதங்களை வைப்பதுடன், காருண்யமென்னும் கேடகமும் நம்மை சூழ்ந்துகொள்ளும்படி செய்கிறார்; ஒரு தீங்கும் நம்மை அண்டாமல் பார்த்துக்கொள்கிறார். நம் பக்கத்தில் பதினாயிரம்பேர் விழுந்தாலும் நம்மை ஒன்றும் சேதப்படுத்தாது. நமக்கு எதிராக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம். கர்த்தர் யோபுவை ஆசீர்வதித்தபோது, அவனைச் சுற்றிலும் பாதுகாப்புக்காக வேலி அமைத்திருந்தார். யோபு, தேவனுக்கு முன்பாக நீதிமானாகவும், குற்றமற்றவனாகவும் இருந்தான். கர்த்தர் அவனை மாத்திரம் பாதுகாக்கவில்லை; அவன் வீட்டையும் அவனுக்குண்டான எல்லாவற்றையும் பாதுகாத்தார். ஆகவேதான் சாத்தான், தேவ சமுகத்தினுள் வந்து, "கர்த்தாவே, நீர் யோபுவைச் சுற்றிலும், அவனுடைய வீட்டைச் சுற்றிலும், அவனுக்கு உண்டான எல்லாவற்றை சுற்றிலும் வேலியடைக்கவில்லையா? நீர் அவனை வர்த்திக்கப்பண்ணவில்லையா? அவன் எவ்வளவு செல்வந்தனாக இருக்கிறான் பாருங்கள்" என்று கேட்டான்.

ஆம், தேவன் நம்மை ஆசீர்வதிக்கும்போது எந்தத் தீங்கும் நம்மை அண்டாது. மட்டுமல்லாமல், அவருடைய ஆசீர்வாதம் தலைமுறை தலைமுறைக்கும் பாய்ந்து செல்லும். ஆகவேதான் வேதம், "உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்" (ஏசாயா 44:3) என்று கூறுகிறது. ஆண்டவர் நீதிமானுக்கு இந்த பரிபூரணத்தை அளிக்கிறார் (நீதிமொழிகள் 28:20). அதேவேளையில் வேதம், "கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்" (நீதிமொழிகள் 10:6) என்றும் எச்சரிக்கிறது. துன்மார்க்கன் கர்த்தரை அறியாதவனாக இருக்கிறான். அவனுடைய பேச்சே அவனுக்கு தீமையை வருவிக்கிறது. "அவர்கள் தள்ளப்பட்டு, கீழே விழும்படி அவர்கள் நாவுகளே அவர்களைக் கெடுக்கும்" (சங்கீதம் 64:8) என்று வேதம் கூறுகிறது. ஆகவேதான் தேவ மனுஷனும் தேவ மனுஷியும் பயபக்தியுடன் இருக்கவேண்டும்; இருநாக்குள்ளவர்களாக இருக்கக்கூடாது. சிலவேளைகளில் நாவை அடக்குவது ஞானமான செயலாக இருக்கிறது (நீதிமொழிகள் 10:14). நாம் கோபப்படும்போது, அமைதியாய் இருப்பது நல்லது; அப்போது நாம் நம்முடைய சுபாவத்தால் கண்டுகொள்ளப்படுவோம்.

நாம் தேவனுக்கு முன்பாக நம்மை தாழ்த்தி, "ஆண்டவரே, என் வாய்க்குக் காவல் வையும்," என்று ஜெபிப்போம். நாம் சாந்தகுணமுள்ளவர்களாக இருக்கும்போது இயேசு கூறியுள்ளதுபோல, கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார் (மத்தேயு 5:5). "நீதிமானுடைய சிரசின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்". தேவனுடைய ஆசீர்வாதங்கள் நம் தலையின்மேல் தங்குவது எவ்வளவு சிலாக்கியம்! நீங்கள் ராஜாதி ராஜாவின் குமாரனாக / குமாரத்தியாக இருக்கிறீர்கள் என்பதை ஒருபோதும் மறந்துபோகாதிருங்கள்.

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, நீதிமான்களின் தலைமேல் உம்முடைய ஆசீர்வாதங்கள் கிரீடம்போல் சூட்டப்படுவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, கனத்தையும் மேன்மையையும் தெய்வீக தயவையும் நாடி உம் முன்னே வருகிறேன். நீர் யோபுவை பாதுகாத்ததுபோல, என்னையும் என் வீட்டையும் எனக்கு அன்பானோரையும் எந்த தீங்கும் அண்டாதவண்ணம் உம்முடைய காருண்யமென்னும் கேடகத்தினால் என்னை சூழ்ந்துகொள்ளும். எனக்கு எதிராக உருவாக்கப்படும் எந்த ஆயுதம் வாய்க்காதேபோம் என்ற உம்முடைய வாக்குத்தத்தத்தை நம்புகிறேன். உம்முடைய பரிபூரண நன்மைகளை நான் பெற்றுக்கொள்ளும்படி உம்முடைய ஆசீர்வாதங்கள் என் மூலம் பாய்ந்துசெல்வதுடன், என்னுடைய எதிர்கால தலைமுறையினருக்கும் பாய்ந்து செல்லட்டும். நீர் எனக்கென்று ஆயத்தம்பண்ணியிருக்கிற ஆசீர்வாதங்களை நான் சுதந்தரித்துக்கொள்ளும்படி சாந்தகுணத்துடன் இருப்பதற்கு எனக்கு உதவிசெய்யும். என் வார்த்தைகள் தீங்குக்கு அல்ல; ஜீவனுக்கு காரணமானவையாகவே அமையட்டும். எல்லா ஆசீர்வாதங்களாலும் நீர் என்னை முடிசூட்டியிருக்கிறீர் என்றும், என்னை சுற்றிலும் உம்முடைய தெய்வீக பாதுகாப்பை அளித்திருக்கிறீர் என்றும் விசுவாசித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.