அன்பானவர்களே, தேவனுடைய வாக்குத்தத்தத்தம் இன்று நம் ஆவியை உயிர்ப்பித்து, அவருடைய ஆசீர்வாதங்களை நம்மீது பொழியப்பண்ணும். என் அன்பு தங்கை ஷேரன் ஏஞ்சலுக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இன்று அவளுக்காக அனைவரும் ஜெபிப்போம். "கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள்" (சங்கீதம் 125:1) என்பதே இன்றைய வாக்குத்தத்தமாகும். நம் வாழ்வில் எதிர்பாராமல் உபத்திரவங்கள் புயலென வரும்போது, நம்முடைய அச்சாணியையே அவை அசைத்துவிடுகின்றன. பெரும்பாலும், முதலாவதாக, நம்முடைய ஆண்டவர்மேல் வைத்திருக்கும் விசுவாசத்தை நாம் இழந்துபோகிறோம். அவர்மேல் நம்பிக்கை வைப்பதற்குப் பதிலாக, "எனக்கு என்ன நடக்கும்? இதை என்னால் மேற்கொள்ள முடியுமா?" என்றெல்லாம் நாம் கேட்கிறோம். நம் முன்னே இருக்கும் பாதை இருளாய்த் தோன்றும்போது, சந்தேகங்கள் எழும்போது, நம்முடைய விசுவாசம் அசைக்கப்படுகிறது. ஆனால், கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருப்பவர்கள் சீயோன் பர்வதத்தைப்போல இருப்பார்கள் என்று இந்த வசனம் நினைவுப்படுத்துகிறது. அவர்களை அசைக்க இயலாது.
அன்பானவர்களே, விசுவாசம் மிகவும் முக்கியமானது. மனச்சோர்வோடு இருப்பவர்களை பார்த்தால், பயமும் கவலையும் அவர்கள் இருதயத்தை அடிக்கடி ஆட்கொள்வதை காணலாம். சார்ந்துகொள்வதற்கு, நம்புவதற்கு யாருமில்லாமல், நம்பிக்கையான எதிர்காலத்தை அடைவதற்கான பாதையை காண இயலாமல் அவர்கள் தவிப்பார்கள். இந்த பாரம் பெரும்பாலும் அவர்களை ஆழமான கலக்கத்திற்குள் தள்ளிவிடும். ஆனால், நமக்கோ விசுவாசம் உறுதியான கேடகமாக விளங்கி, அசைக்கமுடியாதவர்களாக நம்மை உறுதியாக நிற்க வைக்கிறது. விசுவாசம் நமக்கு எப்படி வருகிறது? "விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்" (ரோமர் 10:17) என்று வேதம் கூறுகிறது. நாம் தேவனுடைய வார்த்தையை அனுதினமும் கேட்டு, தியானித்து, அதை ஏற்றுக்கொள்ளும்போது, விசுவாசம் நம் இருதயங்களில் வேரூன்றும். உபத்திரவங்கள் எழும்பும்போது, நாம் ஏற்றுக்கொண்ட வார்த்தை நேரடியாக நம்முடன் பேசும்; "தேவனை நம்பினால் நீ அசைக்கப்படமுடியாதவனா(ளா)ய் இருப்பாய்" என்ற வல்லமையான சத்தியத்தை நமக்கு ஞாபகப்படுத்தும். இந்த தெய்வீக வாக்குத்தத்தம் நாம் என்றென்றைக்கும் நிலைத்திருப்போம் என்று உறுதியாய்க் கூறுகிறது. இருளான சூழல்களிலும், இயற்கைக்கு அப்பாற்பட்டவிதத்தில் தேவனால் இடைப்பட முடியும் என்ற திடநம்பிக்கையை அது தருகிறது. அதனால் நம்முடைய இருதயங்கள் உறுதியாகின்றன; நம்பிக்கையில் நிலைபெறுகின்றன; வல்ல தேவனை விசுவாசிக்கின்றன. மனிதனால் தர இயலாததை, உலகம் தருவதற்கு தவறியதை தேவனால் மாத்திரமே பரிபூரணமாக அளிக்க முடியும். நாம் அவரை நம்பும்போது, நம்முடைய இருதயங்கள் ஸ்திரமாகவும் அசைக்க இயலாதவையாகவும் இருக்கும்.
இன்றிலிருந்து, தேவனுடைய வசனத்தின் மூலம் பெலனை பெற்றுக்கொள்வோம்; அவர்மேல் அசைக்க இயலாத நம்பிக்கை வைப்போம். இந்த ஈவை பெற்றுக்கொண்டு, அவருடைய வாக்குத்தத்தத்தில் தைரியமாக நடப்போமா?
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்முடைய பெலத்தின்மேலும் வழிகாட்டுதலின்மேலும் வாஞ்சை கொண்ட இருதயத்துடன் உம்மிடம் வருகிறேன். உம்மேல் நம்பிக்கையாயிருப்பவர்கள் சீயோன் பர்வதத்தைப்போல உறுதியாயிருப்பார்களென்ற வாக்குத்தத்தத்தை தந்ததற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். உபத்திரவங்களின் மத்தியில் உம்மை முற்றிலும் நம்புவதற்கு எனக்கு போதித்தருளும். உம்முடைய வார்த்தை என் இருதயத்திற்குள் வேரூன்றி, அனுதினமும் என்னை புதுப்பிக்கட்டும். எல்லா பயத்தையும் சந்தேகத்தையும் மேற்கொண்டு, அற்புதங்களைச் செய்யும் உம் வல்லமையில் நான் ஸ்திரமாக நிற்பதற்கு உதவி செய்யும். வாழ்க்கைக்குத் தேவையானவற்றை நீர் பூரணமாக தந்தருளுவீர் என்ற திடநம்பிக்கையை எனக்கு அளித்திடும். நீர் மாத்திரமே எப்போதும் என்னை தாங்கக்கூடியவர் என்பதை அறிந்து என் இருதயம் உறுதியாயிருப்பதாக. என்னுடைய கவலைகள் யாவற்றையும் உம்மிடம் ஒப்படைக்கிறேன்; உம்முடைய பூரண சமாதானத்தையும் சந்தோஷத்தையும் பெற்றுக்கொள்ளும்படி என் இருதயத்தை திறக்கிறேன். உம்முடைய வாக்குத்தத்தம் தரும் உறுதியான நம்பிக்கையில் தைரியமாக நடக்கின்ற எனக்கு நீரே வழிகாட்டவேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.