அன்பானவர்களே, "தவனமுள்ள ஆத்துமாவைக் கர்த்தர் திருப்தியாக்கி, பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறார்" (சங்கீதம் 107:8) என்று வேதம் கூறுகிறது. இன்றைக்கு நிச்சயமாகவே ஆண்டவர் உங்கள் தாகத்தை முழுமையாய் திருப்தியாக்குவார்.

உலகம், எப்போதும் இன்னும் கூடுதலாக வேண்டும் என்று விரும்பும். இவ்வுலகின் காரியங்கள் கவர்ச்சிகரமாக தோன்றும்; ஆனால், கடைசியில் அவை உங்களை கைவிடும். மெய்யான திருப்தியானது ஆவிக்குரியதாயிருக்கிறது. உங்கள் ஆத்துமா வாழ்வதுபோல நீங்கள் சரீரபிரகாரமாகவும் வாழ்ந்திருப்பீர்கள் என்று வேதம் கூறுகிறது (3 யோவான் 2).

நாம் தேவனை இன்னும் அதிகமாய் விரும்புவோம். "ஆண்டவரே, கடந்த காலத்தில் நான் சாதித்த காரியங்கள் எனக்கு திருப்தியை தரவில்லை. எனக்கு நீர் இன்னும் அதிகமாய் தேவை," என்று சொல்லுவோம். நாம் அப்படிச் சொல்வதை ஆண்டவர் விரும்புகிறார். "கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது" (சங்கீதம் 34:10) என்று வேதம், இதையே கூறுகிறது. தேவனிடத்தில் இருக்கிற ஒரு நன்மையும் உங்களுக்குக் குறைவுபடாது. நீங்கள் ஆண்டவருக்கு பிரியமானவராய் இருக்கிறபடியினால், அவர் உங்கள் வாஞ்சைகள் எல்லாவற்றையும் திருப்தியாக்குவார். அன்பானவர்களே, மனங்கலங்காதிருங்கள். இன்றைக்கு அப்படி நடக்கும்.

மனுக்குலத்தின் ஆவிக்குரிய தேவைகளை தேவனால் மாத்திரமே திருப்தியாக்கமுடியும். இவ்வுலகில் வாழ்வதற்கு லௌகீக ஆஸ்திகள் முக்கியம். தேவனுடைய சமுகத்தை முதலாவது தேடுவது, வாழ்வின் எல்லா ஆசீர்வாதங்களையும் நோக்கி நம்மை நடத்தும். ஆனாலும், நாம் ஒருவரை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது என்பது முக்கியம்.  

நான் இளம்வயதில் பிரசங்கித்தபோது, தேவனிடம், "ஆண்டவரே, நீர் என்னை என் கணவரை பயன்படுத்துவதுபோல பயன்படுத்தவேண்டும். அவர் தைரியமாயிருக்கிறார். பிரசங்கிக்கும்போது, கையை இப்படி அசைக்கிறார். நானும் அப்படியே இருக்கவேண்டும்," என்று ஜெபிப்பேன். ஆனால், எங்கள் வீட்டுக்கு வந்த ஒரு தீர்க்கதரிசி, "இவாஞ்சலின், உன் கணவரைப் போல உன்னை பயன்படுத்தவேண்டும் என்று தேவனிடம் கேட்காதே. தேவன் உன்னை விசேஷித்தவண்ணம் பயன்படுத்துவார். நீ மெதுவாக பேசலாம்; ஆனால், உன் முணுமுணுப்பைக் கூட ஆண்டவர் கேட்பார். அநேக பெண்களுக்கு போதிக்கும்படியாக ஆண்டவர் உன்னை பயன்படுத்துவார்," என்று கூறினார்கள். அவர்கள் இன்னும் அநேக காரியங்களைக் கூறி என்னை தைரியப்படுத்தினார்கள்.

அன்பானவர்களே, உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள். தேவன் ஒருபோதும் உங்களை கைவிடமாட்டார். அவரே உங்களுக்கு ஜீவத்தண்ணீராக இருப்பார்; உங்கள் தாகத்தைத் தீர்ப்பார் என்று வேதம் கூறுகிறது  (யோவான் 4:10). ஆகவே, நிச்சயமாகவே அவர் உங்களை திருப்தியாக்குவார். "ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான்" (யோவான் 6:35) என்றும் வேதம் கூறுகிறது. இன்றைக்கு அவர் உங்களை திருப்தியாக்குவார். தவனமுள்ள உங்கள் ஆத்துமாவை, பசியாயிருக்கும் உங்கள் ஆத்துமாவை அவர் திருப்தியாக்கி, உங்களை வர்த்திக்கப்பண்ணுவார்.

ஜெபம்:
பரம தகப்பனே, நீர் உண்மையாய் கொடுத்திருக்கும் வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் மாத்திரமே என் ஆத்துமாவை திருப்திப்படுத்தும் மெய்யான ஊற்றாகவும், என் இருதயத்தின் வாஞ்சைகளை நிறைவேற்றுகிறவராகவும் இருக்கிறீர்.  என்னுடைய ஆவிக்குரிய தாகத்தை உம்மால் மாத்திரமே தீர்க்க முடியும் என்று அறிந்து, உம்முடைய ஜீவத்தண்ணீரை தேடி உம்மிடம் வருகிறேன். உம்முடைய ஆவி, வெட்டாந்தரையிலும் வனாந்தரத்திலும் ஓடும் ஆறுகள்போல எனக்குள் பாய்ந்துசென்று, உவர்நிலத்தில் ஜீவன் உண்டாகச் செய்யட்டும். "நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்" என்று நீர் வாக்குப்பண்ணியிருப்பதுபோல, உம்முடைய நீதியினால் என்னை நிறைத்து, உம்முடைய வசனத்தினால் என்னை போஷித்தருளும். வாழ்வின் வனாந்தரமான சூழலிலும், நீர் ஜீவத்தண்ணீரை நதிபோல ஓடிவரும்படி செய்து, என்னுடைய தாகத்தையெல்லாம் தணித்து, நான் நிரம்பி வழியும்படி என்னை நிறைத்தருளுவீர் என்று நம்பி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.