அன்பானவர்களே, இன்றைக்கு, "தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக" (1 பேதுரு 5:10) என்ற வசனத்தை தியானிப்போம். ஆண்டவர் தாம் வாக்களித்தபடியே உங்கள் வாழ்க்கையை கட்டியெழுப்புவார். உங்களைச் சுற்றிலும் அனைத்தும் அசைந்து குலுங்கிக்கொண்டிருப்பதாக நீங்கள் உணரலாம். ஒருவேளை, மக்கள் உங்களுக்கு எதிராக திரும்பியிருக்கலாம். ஆண்டுக்கணக்கில் நீங்கள் கடினமாய் உழைத்து சேமித்தவற்றை இழந்திருக்கலாம். கடன்பாரத்தினால் அழுந்தி, குடும்பத்தில் வெட்கத்தினால் தலைகுனிந்திருக்கலாம். "இந்த சமுதாயத்தில் எப்படி பிழைக்கப்போகிறேன்?" என்று நீங்கள் திகைக்கலாம். அன்பானவர்களே, ஆண்டவர்தாமே உங்களைச் சீர்ப்படுத்துவார். அவர் உங்களை கட்டியெழுப்பி, மீண்டும் பெலப்படுத்துவார்.

சென்னையைச் சேர்ந்த சத்திய ஷீலா என்ற அன்பு சகோதரியின் வாழ்வில் இப்படியே நடந்தது. ஒரு வீட்டை குத்தகைக்கு எடுத்து அவர்கள் குடியிருந்தனர். பெரிய வீட்டுக்குச் செல்வதற்கு அவர்கள் ஆயத்தமாகிக்கொண்டிருந்தனர். அவர்கள் இருந்த வீட்டின் சொந்தக்காரர் அவர்களுக்கு ஒன்றரை லட்ச ரூபாய் கொடுக்கவேண்டியதிருந்தது. ஆனால் அவர் பணத்தை திருப்பிக் கொடுக்க மறுத்துவிட்டார். அதைக் கண்ட சகோதரி சத்திய ஷீலா மனமுடைந்துபோனார்கள். காவல்துறையில் புகார் அளித்து, தனக்கு சேர வேண்டிய பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று அவர்கள் நம்பினார்கள். அந்த மனவேதனையின் மத்தியிலும் சென்னையிலுள்ள இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்தில் தேவனை தேடி, தன் இருதயத்தை அவர் முன்பு ஊற்றினார்கள். அவர்களுடைய சகோதரி, அவர்களுக்கு அற்புத உபவாச ஜெபத்தைக் குறித்துக் கூறினார்கள். அந்த உபவாச ஜெபத்தில் என் தந்தை Dr. பால் தினகரனும், குடும்பத்தினராகிய நாங்களும் வரும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே ஜெபிப்போம். சகோதரி சத்திய ஷீலா மிகுந்த விசுவாசத்துடன் அற்புத உபவாச ஜெபத்தில் கலந்துகொண்டு, Dr. பால் தினகரனோடு இணைந்து ஊக்கமாய் ஜெபித்து, தன் பாரங்களை ஆண்டவர் பாதத்தில் இறக்கினார்கள். கூட்டம் நடைபெற்றபோது, Dr. பால் தினகரன் ஜெபித்து, தீர்க்கதரிசனம் கூறினார். அவர் குறிப்பிட்ட பெயர்களையும் பிரச்னைகளையும் கூறினார். சத்திய ஷீலா, இருதயத்தில் வாஞ்சையுடன், "ஆண்டவரே, என் பிரச்னையை கூறி, என்னை விடுவித்தருளும்," என்று ஜெபித்தார்கள். அவர்கள் ஜெபித்தவண்ணமே, Dr. பால் தினகரன், "இங்கே ஒரு பெண்மணி இருக்கிறார்கள். அவர்களுக்கு பணம் திரும்பி வரவேண்டியதிருக்கிறது. தேவன் அதை அவர்களுக்குத் திரும்ப அளிக்கிறார்," என்று தீர்க்கதரிசனமாக கூறினார். சில நாட்களுக்குள், முன்பு பணத்தை திரும்ப கொடுக்க மறுத்த அதே நபர், திடீரென அவர்களை அழைத்து முழு பணத்தையும் கொடுத்தார். நம்பிக்கையற்றதாக, சிதைந்துபோனதாக தோன்றிய சூழ்நிலை தேவனால் முழுவதுமாய் திரும்ப கட்டப்பட்டது. அவர்களுடைய வாழ்க்கையை அவர் மறுபடியும் ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்தினார்.

ஆம், அன்பானவர்களே, இன்றைக்கு நீங்களும் இதேபோன்ற போராட்டத்தை கடந்துசென்றுகொண்டிருக்கலாம். நிந்தையை, பொருளாதார நெருக்கத்தை எதிர்கொண்டிருக்கலாம்; எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்று நிச்சயமில்லாமல் இருக்கலாம். உங்கள் வாழ்க்கை விழுந்து நொறுங்கிப்போய்விட்டதென எண்ணி, என்ன செய்வதென்று தெரியாமலும் இருக்கலாம். திடன்கொள்ளுங்கள். தேவன், உங்களை கட்டியெழுப்புவார். ஆண்டவர்தாமே உங்களைச் சீர்ப்படுத்துவார். அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவார். அவர் உங்கள் வாழ்க்கையை ஸ்திரப்படுத்துவார். இன்றைக்கு இந்த வாக்குத்தத்தத்தை சுதந்தரித்துக்கொள்வோமா?

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, விசுவாசமும் அர்ப்பணிப்பும் நிறைந்த இருதயத்துடன் உம்மிடம் வருகிறேன். என்னைச் சுற்றிலுமிருப்பவை அசைந்து குலுங்கிக்கொண்டிருந்தாலும், நீரே எனக்கு உறுதியான அஸ்திபாரமாயிருக்கிறீர். ஆண்டவரே, என்னை சீர்ப்படுத்தும்; உம்முடைய பூரண சித்தத்திற்கேற்றபடி என் வாழ்க்கையை கட்டியெழுப்பும். பெலவீனமான தருணங்களில் என்னை பெலப்படுத்தும்; விசுவாசத்தில் நான் உறுதியாயிருக்கும்படி செய்யும். நிந்தை, கடன் ஆகிய பாரங்களையும், என்னை அழுத்தும் குழப்பத்தையும் அகற்றிப்போடும். உம்முடைய தெய்வீக ஆசீர்வாதங்கள்பேரில் நம்பிக்கையாயிருப்பதால் கிடைக்கும் சமாதானத்தினால் என்னை நிரப்பும். "தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக" (1 பேதுரு 5:10) என்ற உம்முடைய வாக்குத்தத்தம் என் வாழ்வில் இன்று நிறைவேறட்டும். எல்லா உபத்திரவத்தின் மத்தியிலும் என்னை பலப்படுத்தி, ஸ்திரப்படுத்தும். நீர் என் வாழ்க்கையை நிலைப்படுத்தி, என்னை பூரணமாய் ஆசீர்வதிப்பீர் என்று விசுவாசித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.