அன்பானவர்களே, இன்றைக்கு நாம் தேவனுடைய பிரசன்னத்தில் இருக்கிறோம்; ஆகவே, கவலைப்பட தேவையில்லை. தேவன் நம்மோடு பேசுகிறதை, "அவன் சந்ததி பூமியில் பலத்திருக்கும், செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும்" (சங்கீதம் 112:2) என்ற வசனத்தின் மூலம் அறிந்துகொள்வோம். இந்த வசனம் கூறுகிற காரியம், உண்மையாயிருக்கிறது! நாம் தேவனுக்கு முன்பாக நீதிமானாக, உத்தமனாக இருக்க முயற்சிக்கும்போது, நம் சந்ததி தேசத்தில் பெலம் பெற்று விளங்கும்படி நம் சந்ததியின்மேல் 'பெலத்த ஆசீர்வாதம்' வரும். இதை தேவன் நீங்கள் போதிக்கும் உங்கள் ஆவிக்குரிய பிள்ளைகள் மற்றும் உங்களுக்குக் கீழே பணிபுரிவோர் உள்பட அனைத்து பிள்ளைகளுக்கும் நிறைவேற்றும்படி ஜெபிக்கிறேன். அவர்கள் அனைவரும் தேசத்தில் பெலத்திருப்பார்களாக, ஆமென்.
பிள்ளைகள் கர்த்தரால் கிடைக்கும் பலன் என்று வேதம் கூறுகிறது (சங்கீதம் 127:3). நீங்கள் நீதிமானாவதற்கு, விசுவாசத்தில் பாடுகளை சகித்து, பொறுமையாய், இயேசுவின்மேல் நம்பிக்கையை விட்டுவிடாமல் இருக்கக்கூடும். நீதியை அடைவதற்கு நீங்கள் உறுதியாய் தொடர்ந்து முயற்சித்துக்கொண்டிருக்கலாம். "கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்," ஆகவே, நீங்கள் செய்வது பெறுமதிமிக்கதாயிருக்கிறது. நீங்கள் விதைக்கும்போது சிந்தும் கண்ணீர், உங்கள் பிள்ளைகள் வாழ்வில் சந்தோஷத்தையும் ஆசீர்வாதங்களையும் கொடுக்கும். அவர்கள் பெலவான்களாய் மாறுவார்கள்; அவர்கள் வாழ்வில் நீங்கள் சகல ஆசீர்வாதங்களையும் காண்பீர்கள். மிகவும் ஏழையாயிருக்கும் பெண்களும் இயேசு அழைக்கிறார் ஊழியத்திற்கு வந்து இயேசுவுக்கு காணிக்கை கொடுக்கிறார்கள். தங்கள் குறைவின் மத்தியிலும் தேவன் தங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பார்கள் என்றும், தங்கள் பிள்ளைகள் மகா உயரங்களுக்கு எழும்புவார்கள் என்றும் அவர்கள் விசுவாசிக்கிறார்கள். அற்புதவிதமாக அவர்கள் பிள்ளைகள் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புகளை படித்து, உயர்ந்த ஊதியம் பெறும் வேலைகளில் அமர்ந்து, மகா உயரங்களுக்கு எழும்புகிறார்கள்.
நீங்கள் இயேசுவுக்காக பட்ட எல்லா பாடுகள், செய்த தியாகங்களுக்காக தேவன் உங்கள் பிள்ளைகளை நினைத்தருளுவார். என் மகள் கேட்டியின் வாழ்க்கை ஆசீர்வதிக்கப்படும்படி, நான் என்னை தாழ்த்தி, இன்னும் பரிசுத்தமாய் வாழ்ந்து, இயேசுவுக்கு ஏற்ற காரியங்களை செய்யவேண்டுமென்று தேவன் எனக்கு கற்றுக்கொடுத்துள்ளார். நான் இதைச் செய்வதற்கு எவ்வளவு அதிகமாய் முயற்சிக்கிறேனோ அவ்வளவு அதிகமாய் தேவ கிருபை அவள் வாழ்வில் பெருகிறதை காண்கிறேன். ஆகவே, அன்பானவர்களே, உங்கள் பிள்ளைகள் வழிவிலகி போயிருந்தாலும், தாமதமாகிவிடவில்லை. நம்மை தாழ்த்துவோம்; பரிசுத்தமாய் இருக்க முயற்சி செய்வோம்; நம்மை தேவனுக்கு அர்ப்பணிப்போம். நாம் எந்த அளவுக்கு தேவனுக்காக காரியங்களைச் செய்கிறோமோ, அந்த அளவுக்கு அவர் நம் பிள்ளைகள் வளரவும், செழிக்கவும், மாற்றம் பெறவும் உதவுவார். இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வீர்களா?
ஜெபம்:
ஆண்டவரே, என் சந்ததிமேல் இருக்கும் உம்முடைய பெரிதாக கிருபைக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்முடைய வல்லமையான அபிஷேகம் அவர்கள்மேல் வருவதாக. அவர்கள் வாழ்வில் விடுதலை வருவதாக. அவர்களை பிடித்து வைத்திருக்கும் எல்லா பாவமும், பிசாசின் சோதனையும், கவனத்தை சிதறப்பண்ணும் காரியமும் அகன்று போகட்டும். இவ்வுலகில் பிரகாசிக்கவும் சிறந்து விளங்கவும் ஞானத்தை, அபிஷேகத்தை, வல்லமையை, தாலந்தை அவர்களுக்கு தந்திருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். தேசத்தில் பெலத்திருக்கும்படி நீர் அவர்களை உயரப்பண்ணுவதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். அவர்களுக்கு எதிர்ப்படும் எல்லா சவால்களையும் மேற்கொண்டு வெற்றியின்மேல் வெற்றி பெற உதவி செய்யும். உம்முடைய அன்பில் உறுதியாய் நிற்கவும், உம்முடைய பாதையில் என் குடும்பத்தை வழிநடத்தவும் நீர் எனக்கு தந்திருக்கும் பொறுமைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். என்னுடைய பிள்ளைகளுக்கும் என்னை சுற்றிலுமிருக்கிறவர்களுக்கும் உம்முடைய பரிசுத்தத்தினால் நான் பிரகாசிக்கிற ஒளியாக விளங்கும்படி உம்பேரில் நான் தொடர்ந்து அன்பாயிருக்க கிருபை செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.