அன்பானவர்களே, மத்தேயு 9:22, என்ற வேத பகுதியில் இயேசு பெரும்பாடுள்ள பெண்ணிடமாய் திரும்பி, "மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது," என்று கூறினார். இன்றைக்கு, உங்கள் வேதனையின் சூழலில் இயேசு உங்கள் பக்கமாய் திரும்பி பார்க்கிறார். இந்தப் பெண் 12 ஆண்டுகளாகிய நீண்ட காலம், இரத்தப்போக்கினால் அவதிப்பட்டாள். அவள் அநேக வைத்தியர்களிடம் சென்று, தன்னுடைய பணம் எல்லாவற்றையும் செலவிட்டும், சுகம் கிடைக்கவில்லை. அவள் 12 ஆண்டு காலம் சகித்ததால், ஒருவேளை பெலவீனமும் சோர்வும் அடைந்திருக்கலாம்; வெட்கத்தையும் அனுபவித்தும், அவளால் எதுவும் செய்ய இயலவில்லை. ஆனால், இயேசு அவள் பக்கமாய் திரும்பி அவளைப் பார்த்தார். ஒருவேளை இன்றைக்கு நீங்களும் அதேபோன்று எல்லாவற்றையும் இழந்த சூழ்நிலையில் இருக்கலாம். ஆனால், இப்போது இயேசு உங்களை பார்க்கிறார் என்பதை அறிந்துகொள்ளுங்கள். ஜீவனை தருகிறவர் உங்கள் பக்கமாய் திரும்புகிறார். சீர்ப்படுத்துகிறவரின், மனதுருக்கம் கொண்டவரின் கண்கள் உங்கள் பக்கமாய் திரும்புகின்றன. அவர், "என் மகனே, மகளே, தைரியமாயிரு, உற்சாகமாயிரு, ஆறுதலை பெற்றுக்கொள். உன் விசுவாசம் உன்னை குணப்படுத்தியது," என்று கூறுகிறார். உங்கள் பெலவீனம், வெட்கம், இழப்பு, சாபங்கள், இருளின் தாக்குதல்களின் மத்தியிலும் நீங்கள் விசுவாசத்துடன் இயேசுவிடம் வந்திருக்கிறீர்கள். "உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது," என்று அவர் கூறுகிறார். இயேசு இந்த வார்த்தைகளைக் கூறியதுமே, அந்தப் பெண் குணம் பெற்றாள்; புது ஜீவன் அவளுக்குள் பாய்ந்தது. இன்றைக்கு ஆண்டவர் அதே கிருபையை உங்களுக்கும் தருகிறார். உங்கள் விசுவாசத்தின்படி, இயேசுவின் நாமத்தில் சுகம் பெறுங்கள்.

தேவனுடைய சுகமளிக்கும் வல்லமையை குறித்து ஓர் அருமையான சாட்சியை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். ஜெனிதா என் பெண்மணிக்கு கருப்பையில் பிரச்னை இருந்ததால், நெடுங்காலமாக இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. மருத்துவர், "எல்லோருக்கும் கருப்பை ஏழு நாட்கள்தான் திறக்கும். உங்களுக்கு அது எப்போதும் திறந்திருக்கிறது. அதனால்தான் உங்களுக்கு வேதனை," என்று கூறியுள்ளார். அறுவைசிகிச்சை செய்துகொள்ளும்படியாய் அவர்கள் சென்னை வந்துள்ளார்கள். உறவினர் வீட்டில் தங்கியிருந்தபோது, அவர்கள், "நாம் இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்திற்கு போவோம்," என்று கூறியுள்ளார்கள். அவர்கள் சென்னையில் தாம்பரத்தில் அமைந்துள்ள ஜெப கோபுரத்திற்குச் சென்றிருக்கிறார்கள். அங்கு ஜெப வீரர்கள் அவர்களுக்கு எண்ணெய் பூசி ஜெபித்துள்ளார்கள். இயேசுவின் இரத்தத்தைக் குறிக்கும் அந்த எண்ணெயை அவர்கள் விசுவாசத்தோடு பயன்படுத்தியுள்ளார்கள். ஆச்சரியவிதமாக இரத்தப்போக்கு நின்றுபோனது; அவர்கள் குணம் பெற்றார்கள். இன்று, அறுவைசிகிச்சை தேவைப்படாமலே அவர்கள் பூரண சுகத்தோடு இருக்கிறார்கள். இயேசுவுக்கே ஸ்தோத்திரமுண்டாவதாக. அன்பானவர்களே, உங்கள் விசுவாசம் உங்களை இரட்சித்தது.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, பெரும்பாடு கொண்ட பெண்ணைப் போல நானும், நீர் என்னுடைய வேதனையையும் பாடுகளையும் பார்க்கிறீர் என்று அறிந்து இன்று உம் முன்னே வருகிறேன். நீர் ஜீவன் தருகிறவராகவும் சீர்ப்படுத்துகிறவராகவும் இருக்கிறீர். இப்போது உம்முடைய கருணை கண்களினால் என்னை பார்ப்பீர் என்று விசுவாசிக்கிறேன். 12 ஆண்டுகளுக்குப் பிறகு நீர் அந்தப் பெண்ணை குணமாக்கியதுபோன்றே, உம்முடைய சுகமாக்கும் வல்லமை என் ஆரோக்கியத்தை திரும்பப்பண்ணும் என்று நம்புகிறேன். என்னுடைய பெலவீனம், வெட்கம், இழப்பின் மத்தியிலும் உம்மேல் விசுவாசம் வைக்கிறேன். உம்மேல் நான் வைக்கும் விசுவாசம் என்னை சுகமாக்கும் என்று அறிந்து உம்முடைய வாக்குத்தத்தத்தை பற்றிக்கொள்கிறேன். என் வாழ்வில் உம்முடைய கிருபையும் இரக்கமும் பாய்ந்தோடுவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்முடைய சுகமளிக்கும் தொடுதலை இன்று நான் அனுபவிக்கவேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.