அன்பானவர்களே, "என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்" (யோவான் 15:11) என்று வேதம் கூறுகிறது. ஆம், ஆண்டவர் உங்களை தம்முடைய சந்தோஷத்தினால் நிரப்புவதற்கு விரும்புகிறார். சந்தோஷமான மனதுடன் நீங்கள் எல்லாவற்றையும் அனுபவித்து மகிழவேண்டும் என்றும், உங்கள் வாழ்வில் ஆனந்தம் நிரம்பி வழியவேண்டும் என்றும் ஆண்டவர் விரும்புகிறார். அதற்காகவே, அவர் தம்முடைய சந்தோஷத்தை உங்கள் இருதயத்திற்குள் ஊற்றுகிறார்; கர்த்தரின் மகிழ்ச்சியே உங்களுக்குப் பெலனாயிருக்கும்.
"அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்" (செப்பனியா 3:17) என்றும், "அவர்கள் வெட்கம் அநுபவித்த சகல தேசங்களிலும் அவர்களுக்குப் புகழ்ச்சியும் கீர்த்தியும் உண்டாகச்செய்வேன்" (செப்பனியா 3:19) என்றும் வேதம் கூறுகிறது. உங்கள் வாழ்வில் விளங்கும் தேவனுடைய சந்தோஷம் அவ்வளவு வல்லமை கொண்டது! ஆகவே, "இயேசு என்பேரில் களிகூருகிறார்" என்று மகிழ்ச்சியோடு கூறுங்கள். தேவன், அவரது பரிபூரண ஆசீர்வாதங்களை நீங்கள் அனுபவித்து மகிழும்படி செய்வார். ஏன் தேவன் உங்கள்பேரில் களிகூருகிறார்? "என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள்" (3 யோவான் 4) என்று வேதம் கூறுகிறதுபோல, நீங்கள் சத்தியத்திலே நடப்பது முதலாவது காரணமாகும். இதனால், ஆண்டவர் உங்கள்பேரில் களிகூருகிறார்; அவரது சந்தோஷம் உங்களுக்குள் நிரம்பி வழிகிறது; இவ்வுலகில் தெய்வீக ஆனந்தத்தை அனுபவிக்கச் செய்கிறது.
இரண்டாவதாக, நீங்கள் இயேசுவை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்கிறீர்கள். இயேசு தம் சீஷர்கள்பேரில் களிகூர்ந்தார் என்று வேதம் கூறுகிறது (லூக்கா 10:21). அவர்கள் எங்கும் சென்று தமது நாமத்தை பிரசித்தம் பண்ணினபடியினால் அவர் மகிழ்ச்சியடைந்தார். ஜனங்கள் கிறிஸ்துவின் செய்தியை ஏற்றுக்கொள்ளும்போது, சமாதானம் அவர்கள் இல்லங்களுக்குள் பிரவேசிக்கிறது; அவர்கள் உள்ளங்களை நிரப்புகிறது; அவர்களை அலைக்கழிக்கும் பிசாசுகளை துரத்துகிறது. அவ்வாறே நீங்கள் இயேசு அழைக்கிறார் ஊழியத்துடன் இணைந்து நின்று, மற்றவர்களுக்கு இயேசுவைக் குறித்த சாட்சியாக விளங்கும்போது, பிசாசுகள் ஓடும்; இயேசு உங்கள்பேரில் களிகூருவார். அவரது சந்தோஷம் உங்களை நிரப்பும்; அவரது சமுகத்தினால் உங்கள் இல்லத்தினுள் சந்தோஷம் காணப்படும்.
மூன்றாவதாக, உங்கள் ஜெபங்களுக்கு தாம் பதில் அளிப்பதினால் அவர் களிகூருகிறார். "நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்" (யோவான் 16:24) என்று வேதம் கூறுகிறது. ஆம்! உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி, நீங்கள் வேண்டியவை எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ளவேண்டுமென்பதே தேவனுடைய விருப்பமாயிருக்கிறது. இயேசுவின் நாமத்தினால் நீங்கள் தேவனிடம் கேட்பீர்களா? சென்னையைச் சேர்ந்த ஜெயலலிதா என்ற சகோதரியின் சாட்சியை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். அவர்களுக்குத் திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் கடந்தும் குழந்தை பாக்கியம் இல்லாமல் வேதனை அனுபவித்தார்கள். பல இடங்களில் நிந்திக்கப்பட்டார்கள்; அவமானப்படுத்தப்பட்டார்கள். இந்த சகோதரியை விட்டுவிட்டு இன்னொரு திருமணம் செய்துகொள்ளும்படி, இவர்கள் கணவரை அவரது குடும்பத்தினர் வற்புறுத்தினர். குழந்தையில்லாததினால் இல்லறத்தில் கடும் போராட்டம் நடந்தது.
இந்த அவல நிலையில் அவர்கள் இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்திற்கு வர ஆரம்பித்தார்கள். ஒரு வெள்ளிக்கிழமை, ஜெப கோபுரத்தில் குடும்ப ஆசீர்வாத கூட்டம் நடைபெற்றபோது, ஒரு ஜெபவீரர், இந்த சகோதரிக்காக மனதுருக்கத்துடன் ஜெபித்தார். குழந்தை பிறக்காததற்கு முன்னரே, விசுவாசத்துடன் இளம் பங்காளர் திட்டத்தில் இணைக்கும்படி வழிநடத்தப்பட்டார்கள். இளம் பங்காளர் திட்டத்தில் இணைந்திருக்கும் பிள்ளைகளின் புகைப்படங்களை 24 மணி நேர ஜெப கோபுரத்தில் தேவ சமுகத்தில் வைத்து, அவர்கள் பெயர்களை உச்சரித்து ஜெப வீரர்கள் ஜெபிப்பார்கள். அவர்களுக்குக் குழந்தை இல்லாதிருந்தும், தேவன் ஒரு குழந்தையை தந்து தன்னை ஆசீர்வதிப்பார் என்று நம்பி, பிறக்கப்போகிற குழந்தையை இளம் பங்காளராக விசுவாசத்தில் இணைத்தார்கள். தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். ஒன்பது ஆண்டுகள் குழந்தை இல்லாதிருந்த அவர்கள், அடுத்த 15 நாட்களில் கருவுற்றார்கள். இளம் பங்காளர் திட்டத்தின் மூலமாக அவர்கள் தேவ ஊழியத்தை தாங்கியதும், கர்த்தரின் மகிழ்ச்சி அவர்கள்மேல் வந்தது. தேவன், அவர்களுக்கு ஒரு மகனை கொடுத்து அவர்கள் சந்தோஷத்தை பரிபூரணமாக்கினார். அவனுக்கு சாமுவேல் என்று பெயரிட்டார்கள். தேவ ஆசீர்வாதம் அத்துடன் நின்றுவிடவில்லை. அவர்கள் மீண்டும் கருவுற்றார்கள்; பெண் குழந்தை பிறந்தது. அவளுக்கு ஷேரன் என்று பெயரிட்டார்கள். அவர்கள் நன்றியறிதலுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் சீஷாவின் மூலம் ஏழைப் பிள்ளைகளுக்கு புத்தாடை அளிப்பதாக பொருத்தனை செய்தார்கள். இப்போது அவர்கள் குடும்பம் பரிபூரணமாய் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது. தேவன், அவர்களுக்குச் செய்தவண்ணம் உங்களுக்கும் செய்வார். உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, என் இருதயத்தை உம்முடைய தெய்வீக சந்தோஷத்தால் நிரப்புவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் வாழ்வில் எல்லா தருணங்களிலும் உம்முடைய மகிழ்ச்சியே என்னுடைய பெலனாக இருக்கட்டும். ஆண்டவரே, என்பேரில் களிகூர்ந்திடும்; எல்லா நிந்தையையும் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக மாற்றும். என் வாழ்க்கை உமக்கு பிரியமானதாய் இருக்கும்படி, உம்முடைய சத்தியத்திலே நான் நடப்பதற்கு உதவி செய்யும். மற்றவர்களுடன் இயேசுவை பகிர்ந்துகொள்வதற்கான தைரியத்தால் என்னை நிரப்பிடும். உம்முடைய நாமத்தை நான் பிரஸ்தாபித்து, உமக்கு சாட்சியாய் விளங்குவதால் எல்லா இருளும் விலகிப்போகட்டும். தகப்பனே, என் இருதயத்தின் விருப்பங்களை நீர் தந்து, என்னுடைய சந்தோஷத்தை நிறைவாக்கிடவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். என்னுடைய வீடு, உம்முடைய பிரசன்னத்தினாலும், அன்பினாலும், சமாதானத்தினாலும் நிரம்புவதாக. உம்முடைய சந்தோஷம் ஒருபோதும் என்னைவிட்டு விலகாதென்று அறிந்து உம்முடைய பரிபூரண சித்தத்திற்கு என்னை ஒப்புக்கொடுத்து, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.