பிரியமானவர்களே, இன்று ஏப்ரல் மாதத்தின் கடைசியில் வந்தாலும், ஆண்டவருடைய கிருபை தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கும். நம்முடைய வாழ்க்கையில் அது ஒவ்வொருநாளும் நம்மை தேடி வந்து நிரப்பிக்கொண்டேயிருக்கும். இன்றும் ஆண்டவர் தமது கிருபையினால் அப்படிப்பட்ட நன்மைகளை உங்கள் வாழ்வில் பலனாக நிரப்புவார். நீதிமொழிகள் 13:11-ம் வசனத்தில், "பாவிகளை தீவினைத் தொடரும், நீதிமான்களுக்கோ நன்மை பலனாக வரும்" என்று நாம் வாசிக்கிறோம். பாவிகளை தீவினை விடாமல் துரத்துகிறது. அதுதான் அவர்களுடைய வாழ்க்கை. ஆனால் நீதிமான்களுக்கோ, ஆண்டவர் தமது நன்மையை பலனாக கொடுக்கிறார்.

என்னுடைய சின்ன வயதில், டாம் & ஜெரி பிடித்த கார்ட்டூன் பார்ப்பதுண்டு. அங்கே, டாம் என்ற ஒரு பூனை அந்த வீட்டில் வளர்க்கப்பட்டது. ஜெரி என்ற எலி அந்த வீட்டின் சுவர்களின் பின்னாடி ஒழிந்துகொண்டு, ஒரு சின்ன ஓட்டை வழியாக அவ்வப்போது வெளியே வரும். ஒருநாள், அந்த எலியை பிடிக்கவேண்டும் என்று பூனை ஒரு திட்டம் போட்டது. அவ்வாறே, எலியைப் பிடிக்கும் கருவி ஒன்றை அந்த ஓட்டைக்கு வெளியே வைத்து, அதன்மீது சீஸை வைத்தது. எலி வெளியே வரும்பொழுது, அதன்மீது எலியின் கை பட்டவுடன் அந்த ட்ராப்ட் வந்து கையை மூடிவிடும். அப்பொழுது எளிதில் எலியை பிடித்துவிடலாம் என்று நினைத்தது. ஆனால், பூனையின் திட்டம் அந்த எலிக்கு தெரிந்துவிட்டது. அது என்ன செய்தது தெரியுமா? இன்னொரு கனமான பொருளை அந்த ட்ராப்ட் மேலே வைத்தது. அப்படியே எலி லெகுவாக அந்த சீஸை தூக்கிக்கொண்டு ஓடிவிட்டது. அது நன்றாக ரசித்து சாப்பிடும்பொழுது, பூனை பார்த்து, ஐயய்யோ, என்னுடைய திட்ட நிறைவேறவில்லையோ என்று வீடு முழுவதும் எலியை துரத்தியது. எலியை ஓட விட்டது. ஓடஓட பிளேட் எல்லாம் தூக்கிப்போட்டது. அப்புறம், அந்த கட்டையையெல்லாம் டாம் வரும்போது தள்ளிவிடும். ஒவ்வொரு தடவையும் மண்டைல விழும். எப்படியாவது எலியை பிடிக்கவேண்டும் என்று விடாமல் துரத்தியது. வீடே குப்பையாக மாறிவிட்டது. அப்பொழுது வீட்டு எஜமான் உள்ளே வந்தார்கள். அவர்கள் வீட்டிற்குள் எல்லாம் உடைந்து கிடப்பதையெல்லாம் பார்த்து, கோபத்தில் பூனைக்கு அடி கொடுத்தார்கள். இந்த எலி இவையெல்லாவற்றையும் பார்த்து ரசித்தது.

இப்படித்தான் பாவிகளை தீவினை தொடருகிறது. ஆனால், நமக்கு பிரச்சனைகள் வரும்போதும் சரி, மோசமான ஜனங்கள் உங்களை அழிக்கும்படியாக துரத்திக்கொண்டு வரும்போதும் சரி, நீங்கள் நீதிமான்களாய் உங்களை காத்துக்கொண்டு, ஆண்டவருக்காக காத்திருந்து, பரிசுத்தத்தையும், பயபக்தியையும் காத்துக்கொண்டீர்கள். நன்மையான காரியத்தை தொடர்ந்து உங்கள் வாழ்க்கையில் செய்துகொண்டிருந்தீர்கள். அதையெல்லாம் பார்த்து ஆண்டவர் தம்முடைய நன்மையை உங்கள் வாழ்க்கையில் பலனாக தரும்படி அவரே எழுந்து வருவார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, இந்த நாளில் நீர் கொடுத்த வாக்குத்தத்தத்தின்படியே, உம்முடைய பிள்ளையாகிய என்மீது கரிசனையாயிருந்து மனதுருகியிருப்பதற்காக உமக்கு நன்றி. பாடுகளும், பொல்லாத ஜனங்களும் என்னை துரத்தினாலும், நான் பரிசுத்தத்தை விடாமல், உம்மை தேடுவதிலும், உம்மை நம்புவதிலும் உறுதியாயிருந்து, தொடர்ந்து உமக்கென்று வாழ உதவி செய்யும். எனக்கென்று நீர் வைத்திருக்கிற நன்மையான ஆசீர்வாதத்தை பலனாக என் வாழ்வில் ஊற்றுவீராக. உம்முடைய நன்மைகள் என்னை தேடி வரும்படி கிருபை செய்யும். பணக் கஷ்டத்தை நீக்கிப்போடும். பெலவீனங்களையெல்லாம் எடுத்துப்போடும். நீதிமான்கள், பரிசுத்தவான்கள் உம்மால் ஆசீர்வதிக்கப்பட்டு பலன் பெற்று நிரம்பியிருக்க செய்யும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.