அன்பானவர்களே, இந்த அருமையான டிசம்பர் மாதத்திலும் ஆண்டவர் உங்களை ஆசீர்வதித்து வருவார் என்பதை அறிந்திருக்கிறேன். இது கிறிஸ்துமஸ் காலம்; ஆண்டவர் உங்களுக்கென்று விசேஷித்த காரியங்களை திட்டம்பண்ணியுள்ளார்; தினமும் ஒரு புதிய ஈவை உங்களுக்கு அருளுகிறார். "சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்" (சங்கீதம் 30:5) என்ற வாக்குத்தத்த வசனம் நமக்கு நம்பிக்கை தருவதாக. ஒரு மகத்தான, பூரணமான, நிரம்பி வழியக்கூடிய சந்தோஷம் உங்கள் வாழ்வில் வெளிப்படப் போகிறது. ஆம், அழுகிற நாட்கள் கடினமானவையாக இருக்கலாம். இரவுப் பொழுதில், எதிர்காலமே இல்லாததுபோல், அந்தகாரம் எங்கும் நம்மைச் சூழ்ந்திருப்பதுபோல தோன்றலாம். இழப்புகளையும் நம்பிக்கையற்ற சூழலையும் மாத்திரமே பார்த்துக்கொண்டிருப்பது எளிதான விஷயமல்ல. ஆனாலும், அன்பானவர்களே, இதுபோன்ற நேரங்களிலும் தேவன் உங்களுக்கென்று விசேஷித்த நன்மையை திட்டம்பண்ணி வைத்துள்ளார். சந்தோஷத்தின் நாட்கள் நிச்சயமாய் வரும் என்று இந்த வசனம் உறுதியளிக்கிறது. ஆகவே, நீங்கள் துக்கத்தில் அமிழ்ந்துபோகாதபடிக்கு, இந்த வாக்குத்தத்தத்தைப் பற்றிக்கொண்டு சந்தோஷத்தை எதிர்பார்த்திருங்கள். "இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்ல" (ரோமர் 8:18) என்று வேதம் நமக்கு நினைவுப்படுத்துகிறது. வரப்போகும் மகிமையானது நீங்கள் சகித்துக்கொண்டிருக்கும் பாடுகளைப் பார்க்கிலும் பெரிதாயிருக்கிறது. "தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக" என்று வேதம் கூறுகிறது. இதையே நாங்கள் 2022ம் ஆண்டு 'சீர்ப்படுத்துவார்' என்று இயேசு அழைக்கிறார் வாக்குத்தத்த பாடலாக பாடினோம்.

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் குளிர்காலத்தில் மரங்களை பார்த்திருக்கிறேன். அவை இலைகளை உதிர்க்கும்; இலைகள் தரையில் கிடக்கும்; மரமோ அழகிழந்து காணப்படும். ஆனால், அடுத்து ஆண்டு வரும்போது, வேனிற்காலம் தொடங்கும்போது, மரங்களில் வண்ணமயமான புதிய, இலைகள் தளிர்த்து அழகாக காட்சியளிக்கும். மரங்களைப் பார்ப்பவர்கள், நிழலில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளத் தூண்டுமளவுக்கு மிகவும் அழகிய தோற்றம் அவற்றுக்கு உண்டாகும்.

அன்பானவர்களே, அவ்வாறே, உங்கள் வாழ்விலும் மகிமையான காலம் வருகிறது. வறண்ட காலம், அழுகையின் காலம் நீடித்திருக்காது. மனந்தளராதிருங்கள். நிச்சயமாகவே உங்களுக்குக் கிடைக்க இருக்கும் சந்தோஷத்தை தருமாறு ஆண்டவரிடம் கேளுங்கள். நன்மையான நாட்கள் இனிமேல் வரும்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, இரவு எவ்வளவு அந்தகாரமாக இருந்தாலும், காலையில் சந்தோஷம் உண்டாகும் என்று நீர் வாக்குப்பண்ணுவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உங்கள் அழுகையின் மத்தியிலும் பாடுகளின் மத்தியிலும், உம்முடைய வார்த்தையைப் பற்றிக்கொள்ளவும், உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கவும் எனக்கு உதவும். நான் இப்போது அனுபவிக்கும் உபத்திரவங்கள் நீர் எனக்கென்று ஆயத்தம்பண்ணி வைத்திருக்கும் மகிமையோடு ஒப்பிடத்தக்கவை அல்ல என்பதை எனக்கு நினைவுப்படுத்தும். உபத்திரவப்பட்ட பிறகு நீர் என்னை ஸ்திரப்படுத்துவீர் என்பதை அறிந்து, இதை சகித்துக்கொள்ளும்படி என்னை பெலப்படுத்துவீராக. என் வாழ்வை நீர் சீர்ப்படுத்துவீர் என்று நம்புகிறேன். என் வாழ்வில் சந்தோஷமும் ஆசீர்வாதமும் வரும் என்று நம்பிக்கையோடு எதிர்பார்த்திருக்க உதவும். இக்கட்டு காலத்திலும் நன்மையை ஆயத்தம்பண்ணுவதற்காக, பரிபூரண சந்தோஷத்தை தரப்போவதற்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.