அன்பானவர்களே, "நீதிமானுடைய வேர் கனி கொடுக்கும்" (நீதிமொழிகள் 12:12) என்று வேதம் கூறுகிறது. பொதுவாக, மரங்களின் கிளைகளில் கனிகள் பழுப்பதையே கண்டிருக்கிறோம். ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்னர், என் தந்தை வானொலியில் பிரசங்கித்துக்கொண்டிருந்தபோது வித்தியாசமான ஒரு காரியம் நடந்தது.

தன்னுடைய விவசாயத்தில் பலன் கிடைக்கவில்லை என்று மனம்நொந்துபோயிருந்த ஒரு விவசாயி, கையில் சிறு ரேடியோவை தூக்கிக்கொண்டு வயலுக்குள் நடந்துகொண்டிருந்தார். அன்று என் தந்தை, பலன் கொடுக்கும் என்று நீங்கள் நினைக்கும் நிலத்தில் மட்டுமல்ல, அநேகர் பயன்பெறும்படி தேவனுடைய ராஜ்யத்திலும் உங்கள் விதையை விதைத்திடுங்கள். அப்போது தேவன் உங்களுக்கு பெருத்த அறுவடையைக் கொடுப்பார். நீங்கள் வாழ்வில் கனி கொடுக்கும்படி செய்வார் என்ற சத்தியத்தை பகிர்ந்துகொண்டார். அந்த விவசாயி, அந்த வார்த்தைகளை நம்பி அதன்படி செயல்பட்டார். அவர் இணைந்து ஜெபித்ததோடு, விசுவாசத்துடன் காணிக்கையை விதைத்தார். அந்த ஆண்டு அறுவடையில் அவர் ஓர் அற்புதத்தைக் கண்டார். செடிகளின் கிளைகளில் மாத்திரமல்ல, வேர்களிலும் காய்கள் காணப்பட்டன. அது ஏலக்காய்த் தோட்டம். விளைச்சல் அமோகமாக இருந்தது. சந்தையில் விலையும் ஏறியது. ஆகவே, அவருக்கு எதிர்பார்த்திராத பொருளாதார ஆசீர்வாதம் கிடைத்தது. ஆகவே, அவர் பெரிய ஏலக்காய் மாலையை செய்து, என் தந்தைக்கு அணிவித்து, "எனக்கு இயேசுவை காண்பித்ததற்கு நன்றி. அவர் என் பிரயாசம் பலன் கொடுக்கும்படி செய்ததுடன், நான் ஆவிக்குரிய கனியையும் கொடுக்கும்படி செய்தார்," என்று கூறினார். ஆம், உங்களையும் கனிகொடுக்கச் செய்ய ஆண்டவர் விரும்புகிறார். யாருக்கு அவர் இப்படிச் செய்வார்? நீதிமான்களையே அவர் கனிகொடுக்கப்பண்ணுவார். நாம் நீதியில் நடக்கும்போது, தேவனுக்குக் கீழ்ப்படியும்போது, நம்முடைய இருதயத்தைச் சுத்தமாய்க் காத்துக்கொள்ளும்போது, அவருடைய ராஜ்யத்தில் விதைக்கும்போது, அவருடைய ஊழியத்தைத் தாங்கும்போது, ஏழைகளை பராமரிக்கும்போது, நம்மை பூரணமாய் ஆசீர்வதிக்கிறார். வாழ்வில் ஏதோ ஒருவிதத்தில் மட்டுமல்ல, தலை முதல் பாதம் வரை, நாம் செய்யும் எல்லாவற்றிலும் கனிகொடுக்கும்படி செய்கிறார்.

புதுச்சேரியை சேர்ந்த அனிதா என்ற சகோதரி ஓர் அருமையான சாட்சியை பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ரோகன், ரோகித் என்று இரு மகன்கள். இளைய மகன் ரோகித், படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் திண்டாடினான். அவன் பத்தாம் வகுப்பு படித்ததால், அவனுடைய எதிர்காலம் எப்படி அமையுமோ என்று பெற்றோர் மிகவும் கவலையுற்றனர். வேதனையாக இருந்த காலத்தில், இருவரையும் அழைத்து வந்து இயேசு அழைக்கிறார் இளம் பங்காளர் திட்டத்தில் சேர்த்தனர். நாங்கள் அவர்களுக்காக ஜெபிக்க ஆரம்பித்தோம்; ஜெப கோபுரத்தில் ஜெப வீரர்களும் ஜெபித்தனர். பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய ரோகித்துக்கு 485/500 மதிப்பெண்கள் கிடைத்தது; பள்ளியில் முதல் மதிப்பெண் அதுவே ஆகும். அவனுடைய அண்ணன் ரோகனுக்கு தேவனுடைய தயவு கிடைத்தது. பன்னிரண்டாம் வகுப்பை முடித்த அவன், மருத்துவ நுழைவுத் தேர்வை (NEET) எழுதினான். ஜெப கோபுரத்தில் அவனுக்காக பிரார்த்தனை ஏறெடுக்கப்பட்டது. தேவன் அவனுக்கு பூரண ஆசீர்வாதத்தைக் கொடுத்தார்; நுழைவுத் தேர்வில் உயர்ந்த இடத்தைப் பிடித்து, புகழ்வாய்ந்த மருத்துவ கல்லூரியில் படிப்பதற்கு இடமும் கிடைத்தது. "இயேசு அழைக்கிறார் ஊழியமும் இளம் பங்காளர் திட்டமும் இல்லாதிருந்தால் நாங்கள் என்ன செய்திருப்போம்?" என்று அவன் அம்மா கூறி, ஊழியத்தைக் குறித்து சந்தோஷப்பட்டார்கள். தன்னுடைய பிள்ளைகளுக்காக ஜெபித்ததற்காக எங்களுக்கு நன்றி தெரிவித்தார்கள். அன்பானவர்களே, தேவன் உங்கள் பிள்ளைகளுக்கும் இப்படியே செய்வார். உச்சியிலிருந்து வேர்வரை நீங்கள் கனிகொடுக்கும்படி செய்வார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நீதிமானின் வாழ்க்கை எப்பக்கத்திலும் கனி கொடுக்கும் என்று நீர் அளித்திருக்கும் வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உமக்குக் கீழ்ப்படிந்து நடக்கவும், என்னுடைய இருதயத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளவும் உம்முடைய ராஜ்யத்தில் விசுவாசத்தோடு விதைக்கவும் எனக்கு உதவி செய்யவேண்டுமென்று ஜெபிக்கிறேன். நான் உச்சியிலிருந்து வேர் வரைக்கும் கனிகொடுக்கும்படி உம்முடைய பரிபூரண ஆசீர்வாதத்தை என்மேல் பொழிந்தருளும். ஏழைகளை பராமரிக்கவும் உம்முடைய ஊழியத்தின்மேல் வாஞ்சையாய் அதை தாங்கவும் என் கரங்களை பெலப்படுத்தும். உம்முடைய தயவுக்கும் மாறாத ஆசீர்வாதத்திற்கும் என் வாழ்க்கை சாட்சியாக விளங்க கிருபை செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.