அன்பானவர்களே, இன்றைக்கு நாம் ஆண்டவராகிய இயேசுவில் நம்பிக்கையை கண்டடையலாம்; நம் வாழ்வில் அவர் புதுநம்பிக்கையை அளிப்பார். "என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர்... மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினீர்" (சங்கீதம் 30:11) என்ற சங்கீதக்காரனின் வார்த்தைகள் நம்பிக்கையை அளிக்கின்றன. "என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர்," என்று கூறி, சங்கீதக்காரன், கர்த்தருக்குள் எவ்வளவு களிகூருகிறான் என்று பாருங்கள். அன்பானவர்களே, உங்கள் வாழ்க்கையிலும் இது மெய்யாகக்கூடும். சந்தோஷத்தின் நாட்கள், ஆனந்தக் களிப்பின் நாட்கள் வரும். உங்களைச் சுற்றிலுமிருக்கும் காரியங்களை ஆண்டவர் முற்றிலுமாக மாற்றுவார்.
நகோமியின் வாழ்க்கையைப் பாருங்கள். கணவனையும் இரண்டு மகன்களையும் இழக்கக்கொடுத்த நிலையில் அவள் வாழ்க்கை பரிதாபமாயிருந்தது. அவள் துக்கத்தினாலும் கசப்பினாலும் நிறைந்தவளாய், "என் வாழ்க்கை முழுவதும் கசப்பாயிருக்கிறது. ஆகவே, என்னை மாரா என்று அழைத்திடுங்கள். கர்த்தர், நிறைவாக சென்ற என்னை இப்போது வெறுமையாய் திரும்பி வரப்பண்ணினார். நான் வெறுமையாயிருக்கிறேன்," என்று கூறினாள். அவள் புலம்பி, "ஏன்?" என்று கர்த்தரைக் கேட்டுக் கொண்டிருந்தாள். அன்பானவர்களே, ஆண்டவர், ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வெவ்வேறு காரியங்களுக்காக சிலவற்றை அனுமதிக்கிறார். ஆம், இந்த புலம்பலின் பாதையையும் அவர் அனுமதிக்கிறார். அன்பானவர்களே, ஆனாலும் ஆண்டவர் நம்மேல் மனதுருகி, நம்மை மறுபடியும் எழும்பப்பண்ணுகிறார். நகோமியின் இந்த வார்த்தைகளைக் கர்த்தர் கேட்டு, "இல்லை. என் மகளின் வாழ்க்கையை இப்படியே விட்டுவிடமாட்டேன்," என்று கூறி, அவள்பேரில் மனதுருகினார். அவள்பேரில் பற்றுதல் கொண்ட மருமகளான ரூத்தை அவளுக்குக் கொடுத்தார். அவள், சொந்த தாயைப் போல நகோமியை நேசித்து அவளுடனே இருந்தாள். தொடர்ந்து, ரூத்தின் வாழ்க்கையை போவாஸ் என்னும் இன்னொரு கணவரின் மூலமாக கட்டியெழுப்பினார்; நகோமியின் குடும்பம் மீண்டும் முழுமையடையும்படி செய்தார். நகோமியையும் அவளது சந்ததியையும் தேவன் ஆசீர்வதித்தார்; இந்த சந்ததியின் மூலம் ஆண்டவராகிய இயேசு பிறந்தார். நாம் சேவிக்கும் தேவன் எவ்வளவு ஆச்சரியமானவர்! நகோமியின் வாழ்க்கை முன்பு துக்கம் நிறைந்ததாக இருந்தபோதும் தேவன் அவளை ஆசீர்வதித்தார். அன்பானவர்களே, தேவன் உங்களை பொறுப்பெடுத்துக்கொள்வார். உங்கள் புலம்பலை அவர் களிகூருதலாகவும் ஆனந்த களிப்பாகவும் மாற்றுவார். இப்போதே இயேசுவிடமிருந்து இந்த அன்பை பெற்றுக்கொண்டு அவரை விசுவாசிப்போமா?
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நீர் கொடுத்துள்ள அருமையான வாக்குத்தத்தத்திற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். என்னை ஆசீர்வதிப்பதற்கு நீர் ஒருபோதும் மறப்பதில்லை. உம்முடைய உள்ளங்கையில் என்னை வரைந்திருக்கிறீர்; என் மதில்கள் எப்போதும் உமக்கு முன்பாக இருக்கிறது. நீர் என் கண்ணீரை கண்டிருக்கிறீர்; என் கூப்பிடுதலை கேட்டிருக்கிறீர்; என்னுடைய வேதனையை அறிந்திருக்கிறீர். நீர் என்னை விடுவிக்கும்படி, உம்முடைய சிங்காசனத்திலிருந்து எழும்புவீர்; எப்பக்கத்திலும் என்னை ஆசீர்வதிப்பீர். நான் துன்பத்தை கண்ட வருடங்களுக்கு தக்கதாய் நீர் எல்லாவற்றையும் திரும்ப தந்து, என் வாயை நகைப்பினாலும் ஆனந்த சத்தத்தினாலும் நிரப்புவீர். உம்முடைய வாக்குத்தத்தத்தை நான் விசுவாசித்து, என்னுடைய துக்க நாட்கள் முடிந்துபோனதென்று அறிக்கையிடுகிறேன். அற்புதங்களும் நல்ல மாற்றங்களும் மகிழ்ச்சியும் சமீபித்திருக்கிறது. உம்முடைய இரக்கங்களுக்கு நன்றி செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.