அன்பானவர்களே, இன்றைக்கு சங்கீதக்காரனின் ஜெபத்தில் காணப்படும், "கர்த்தாவே, நீர் எனக்குத் துணைசெய்து என்னைத் தேற்றுகிறதை என் பகைஞர் கண்டு வெட்கப்படும்படிக்கு, எனக்கு அநுகூலமாக ஒரு அடையாளத்தைக் காண்பித்தருளும்" (சங்கீதம் 86:17) என்ற வாக்குத்தத்தத்தை தியானிப்போம்.
ஆம், ஆபத்துக்காலத்தில் தேவனே நமக்கு சகாயம் செய்து, ஆறுதல்படுத்துகிறார். "ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு. நான் வந்து உன்னை விடுவிப்பேன். உன் துக்கத்தை சந்தோஷமாக மாற்றுவேன். உன் மேன்மையைப் பெருகப்பண்ணி, உன்னை மறுபடியும் தேற்றுவேன்" என்று அவர் கூறுகிறார்.
தேவன், அநுகூலமான அடையாளத்தை உங்களுக்குக் காண்பிப்பார். உங்களை பகைக்கிறவர்கள் உங்களுக்கு முன்பாக வெட்கம் அடையும்படி செய்வார். ஆகவே, பயப்படாதிருங்கள். ஓர் அருமையான சாட்சியை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் அனில் பிரசாத் என்ற அலுவலர் பொதுப்பணித்துறையில் பணியாற்றி வருகிறார். பத்திரிகையாளர் ஒருவர் அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறினார். திரு.அனில் பிரசாத் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி, அரசு அதிகாரிகளுக்கு அந்த பத்திரிகையாளர் கடிதங்களை அனுப்பினார். ஆகவே, அநியாயமான முறையில் அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஐந்து ஆண்டு காலம் திரு. அனில் பிரசாத் கடுமையான இக்கட்டுகளை சகித்துவந்தார். இறுதியாக, கடைசி விசாரணைக்காக அவர் அதிகாரிகளால் அழைக்கப்பட்டார்.
அந்த விசாரணைக்கு அவர் ரயிலில் சென்று கொண்டிருந்தபோது, நான் SMS மூலம் அனுப்பிய, "தன் காரியங்களை நியாயமானபடி நடப்பிக்கிற மனுஷன் பாக்கியவான்" (சங்கீதம் 112:5)என்ற வாக்குத்தத்தம் அவருக்கு சென்று சேர்ந்தது. அந்த வசனம் அவருக்கு பெரிய தைரியத்தை அளித்தது. "நான் நியாயமாகவே என் வேலைகளை செய்திருக்கிறேன். ஆண்டவர் என்னை ஆசீர்வதிப்பார்," என்று அவர் மனதுக்குள் கூறிக்கொண்டார்.
ஐந்து உயர் அதிகாரிகள் விசாரணை குழுவில் இருந்தார்கள். திரு. அனில் பிரசாத், தன்னுடைய சூழ்நிலையை விவரித்தார். அதைக் கேட்ட ஓர் அதிகாரி, "இவர்மேல் குற்றமில்லை," என்று கூறினார். குழுவில் இருந்த மற்றவர்களும் ஒத்துக்கொண்டனர். அவர்மேல் சுமத்தப்பட்டிருந்த அத்தனை குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார்; மட்டுமல்ல, பழைய பதவியிலேயே மீண்டும் அமர்த்தப்பட்டார். ஆம், தேவன், திரு. அனில் பிரசாத்துக்கு அநுகூலமான ஒரு அடையாளத்தை காண்பித்தார். அவரை வெறுத்த அனைவரும் வெட்கம் அடைந்தனர். அன்பானவர்களே, தேவன் உங்களுக்கும் இப்படியே செய்வார்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, ஆபத்துக்காலத்தில் நீர் எனக்கு அநுகூலமான துணையும் என்னை தேற்றுகிறவருமாயிருக்கிறீர். என்னை எதிர்க்கிறவர்கள், தங்களை வெட்கத்துக்குட்படுத்தும்படி உம்முடைய கரம் என்மேல் இருப்பதை காண்கிறவண்ணம் எனக்கு அநுகூலமாக ஒரு அடையாளத்தை காண்பித்தருளும். துக்கத்திலிருந்தும் கலக்கத்திலிருந்தும் என்னை தூக்கியெடுத்து என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாற்றும். என் மேன்மையை பெருகப்பண்ணி, உம்முடைய அளவற்ற அன்பினால் என்னை தேற்றும். உம்முடைய வாக்குத்தத்தங்களை நம்பும்படியும், உம்முடைய விடுதலைக்காக பொறுமையோடு காத்திருக்கவும் என் விசுவாசத்தை பெலப்படுத்தும். நான் கையிட்டுச் செய்யும் வேலையை ஆசீர்வதியும்; என் பிரயாசங்கள் வாய்க்கும்படி வழிகாட்டும். உம்முடைய கிருபையால் என்னை கனத்துக்குரிய இடத்துக்கு உயர்த்தும். என் வாழ்க்கையை குறித்த உம் நோக்கங்களை நிறைவேற்றியருளும். எனக்கு அடைக்கலமாகவும் எப்போதும் எனக்கு உண்மையான பாதுகாப்பாக இருப்பதற்காகவும் உமக்கு நன்றி செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.