அன்பானவர்களே, இன்றைக்கு, "அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது" (யோவான் 1:14) என்ற வசனத்தை நாம் தியானிப்போம். இதுவே கிறிஸ்துமஸின் அருமையான சரித்திரமாக இருக்கிறது. இயேசு, மாம்சத்தில் வந்த தேவனாயிருக்கிறார். பழைய ஏற்பாட்டுக் காலத்தில் மோசே, தேவனிடம், "உம்முடைய நாமம் என்ன?" என்று கேட்டபோது, கர்த்தர், "இருக்கிறவராகவே இருக்கிறேன்," என்று கூறினார். அதுவரைக்கும் கர்த்தர் தம் ஜனங்களுக்கு காணக்கூடாதவராகவே இருந்தார். ஆனால் இன்று, நாம் காணக்கூடிய வார்த்தையாக இயேசு வந்திருக்கிறார்.
வார்த்தை என்பது என்ன? வேதம், "விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்" என்று கூறுகிறது. தேவனுடைய வசனத்தினால் மாத்திரமே நாம் விசுவாசம் பெறுகிறோம். "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது" (யோவான் 1:1) என்று வேதம் கூறுகிறது. வார்த்தை என்பது, இயேசு கிறிஸ்துவே! "சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை" (யோவான் 1:3) என்றும் வேதத்தில் வாசிக்கிறோம். இயேசுவே வார்த்தையாக இருக்கிறார்; அவர் மூலமாக நாம் தேவ மகிமையை காண்கிறோம். இந்த மகிமை, பழைய ஏற்பாட்டுக் காலத்தில் வனாந்தரத்தில் இருந்த ஆசரிப்புக் கூடாரத்தை நினைவுப்படுத்துகிறது. இஸ்ரவேல் ஜனங்களுக்கு மேக ஸ்தம்பமாகவும், அக்கினி ஸ்தம்பமாகவும் தேவ சமுகம் காணப்பட்டது. "ஒரு மேகம் ஆசரிப்புக் கூடாரத்தை மூடினது; கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பிற்று" (யாத்திராகமம் 40:34) என்று வேதம் கூறுகிறது.
புதிய ஏற்பாட்டில், தேவ சமுகமானது ஜீவ வசனமாக வெளிப்பட்டது. இயேசு, ஒரு நபராக நம் நடுவே ஆசரிப்புக் கூடாரமாக விளங்கினார். ஆகவேதான், அவரை, இம்மானுவேல், தேவன் நம்மோடிருக்கிறார் என்று அழைக்கிறோம். இயேசு, தம் சீஷர்களான பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் முன்னர் மறுரூபமானபோது, அவரது வஸ்திரங்கள் வெளிச்சத்தைப்போல வெண்மையாயின என்று வேதம் விவரிக்கிறது (மத்தேயு 17:2). அவரது தோற்றம், மகிமையான வெளிச்சமாக தோன்றும்வண்ணம் மறுரூபமடைந்தார். "நாங்கள்...அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே... உங்களுக்கு அறிவித்தோம்" (2 பேதுரு 1:16) என்று பின்னர் சாட்சி கூறுகிறான்.
நீங்களும் இயேசுவை அவரது மகிமையில் காண்பீர்கள். தேவனுடைய வார்த்தையை ஆழமாக வாசிப்பீர்களென்றால், தேவனாகிய இயேசு, நம் மத்தியில் வாசம்பண்ணுகிறார்; நாம் மகிமையின்மேல் மகிமையை அடைகிறோம். அப்போது, இயேசுவை காண்கிறோம். இதற்காகவே இயேசு மனுவுருவில் உலகத்தில் வந்தார். இயேசுவே வார்த்தையாக இருக்கிறார். "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்," என்று அவர் கூறுகிறார். இயேசுவே சத்தியமாயிருக்கிறார். சத்தியமாகிய அவர் வரும்போது நம்மை விடுவிக்கிறார். அவர் எவ்வளவு அன்புள்ளவராக இருந்தால், இவ்வுலகிற்கு வருவார்; நமக்குள்ளே வாசம்பண்ணுவார்; தம்முடைய மகிமையே நம்முடன் பகிர்ந்துகொள்வார்! இன்றிலிருந்து இயேசு உங்கள் இருதயத்தில் வீற்றிருக்க அவருடன் இணைந்து கிறிஸ்துமஸை கொண்டாடுங்கள். அன்பானவர்களே, தேவன்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக; இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, எங்களிடையே வாசம்பண்ணுவதற்காக மாம்சத்தில் வரும்படி இயேசு கிறிஸ்துவை ஈவாக கொடுத்ததற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஜீவ வசனமாகிய அவர் மூலமாக உம்முடைய மகிமையையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்முடைய வசனத்தை நான் தியானிக்கும்போது, என் இருதயத்தை விசுவாசத்தினால் நிறைத்து, மகிமையின்மேல் மகிமையடையும்படி என்னை மறுரூபமாக்கும். இயேசுவை அவரது மகத்துவத்தில் காணவும், அனுதின வாழ்வில் அவரது பிரசன்னத்தை அனுபவிக்கவும் எனக்கு உதவி செய்யும். உம்முடைய சத்தியம் என்னை விடுவித்து, ஜீவ பாதையில் என்னை நடத்துவதாக. இந்த கிறிஸ்துமஸ், என் இருதயத்தில் உம்முடைய அன்பை, கிருபையை, மகிமையை கொண்டாடும் வேளையாக அமையட்டும். என்னை உம்மிடமாய் கிட்டிச்சேர்த்து, உம் வசனத்தை ஆழமாய் அறிந்துகொள்ளும்படி செய்யும். நீர் பாராட்டும் தயவுக்காகவும், நித்திய உண்மைக்காகவும் உம்மை கனப்படுத்தி, உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.