அன்பானவர்களே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு, "உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்" (சங்கீதம் 128:2) என்ற அருமையான வசனத்தை தியானிக்கப்போகிறோம். யார் இந்த ஆசீர்வாதங்களையெல்லாம் பெற்றுக்கொள்வார்கள்?
"கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்" (சங்கீதம் 128:1) என்று வேதம் கூறுகிறது. இந்த வசனத்தில் 'எவனோ’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு, யாராக இருந்தாலும் கர்த்தருடைய பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதே பொருள். "கர்த்தருக்குப் பயப்படுகிற பெரியோரையும் சிறியோரையும் ஆசீர்வதிப்பார்" (சங்கீதம் 115:13) என்றும் சங்கீதம் கூறுகிறது. அன்பானவர்களே, உங்கள் குடும்பம் முழுவதுமே தேவனுடைய பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்? நம் முழு இருதயத்தோடும் ஆண்டவரை தேட வேண்டும். தாவீது, கர்த்தரை மிகவும் அதிகமாய் நேசித்தான். "கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்" (சங்கீதம் 23) என்று அவன் கூறுகிறான். தேவன் எல்லாவற்றையும் நேர்த்தியாக அருளிச்செய்கிறார். இது ஆறு வசனங்கள் மட்டுமே கொண்ட சிறிய சங்கீதம்தான். ஆனால், ஒவ்வொரு வசனமும் ஆசீர்வாதங்களால் நிறைந்ததாயிருக்கிறது. 23ம் சங்கீதத்தை வாசியுங்கள்; அதை மனப்பாடம் செய்யுங்கள்; மனதில் வைத்துக்கொள்ளுங்கள்; அதில் கூறப்பட்டுள்ள ஆசீர்வாதங்களை அனுதினமும் கேளுங்கள்; உங்கள் வாழ்வில் காண்பியுங்கள். தேவன் உண்மையிலேயே உங்களுக்கு மேய்ப்பராயிருக்கிறாரா? உண்மையிலேயே அவரை உங்கள் மேய்ப்பராக கொண்டிருந்தீர்களானால், ஒருபோதும் ஒன்றிலும் குறைவுபடமாட்டீர்கள். தாவீது, தேவனை தன்னுடைய மேய்ப்பராக்கிக் கொண்டான்; அவருடைய அன்பை, வழிகாட்டுதலை, பரிபூரண ஆசீர்வாதங்களை அனுபவித்தான். தாவீதின் வாழ்க்கை எப்படி நிறைவுற்றது? "அவன் தீர்க்காயுசும் ஐசுவரியமும் மகிமையுமுள்ளவனாய், நல்ல முதிர்வயதிலே மரணமடைந்தபின்..." (1 நாளாகமம் 29:28) என்று வேதம் கூறுகிறது. தாவீது எளிமையானவன். ஆனாலும் அவன் ராஜாவாகும்படி தேவன் அவனை ஆசீர்வதித்தார். அன்பானவர்களே, அவ்வாறே நீங்களும் தேவனை தேடி, அவரை உங்கள் மேய்ப்பராக்கிக்கொள்ளுங்கள். அப்போது உங்கள் கைகளில் பிரயாசத்தை சாப்பிடுவீர்கள்; உங்கள் வாழ்க்கையில் எப்போதும் ஆசீர்வாதங்களும் செழிப்பும் நிறைவாக காணப்படும்.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, நீர் கொடுக்கும் வாக்குத்தத்தங்களையும் ஆசீர்வாதங்களையும் குறித்து நன்றியறிதலுள்ள இருதயத்துடன் உம்மிடம் வருகிறேன். எனக்கு மேய்ப்பராக இருந்து, என்னுடைய தேவைகள் எல்லாவற்றையும் பரிபூரணமாக அருளிச்செய்வதற்காக உமக்கு நன்றி. உம்முடைய வழிகளில் நடக்கவும் முழு இருதயத்தோடும் உமக்கு பயந்திருக்கவும் எனக்கு உதவி செய்யும். நாங்கள் அனுதினமும் உம்மை தேடுவதால் என்னையும் என் குடும்பத்தினரையும் ஆசீர்வதித்தருளும். எங்கள் வாழ்க்கையை உம்முடைய சமாதானத்தினாலும், செழிப்பினாலும், தெய்வீக தயவினாலும் நிரப்பும். எங்களை நீதியின் பாதையில் வழிநடத்தும். தாவீதைப்போல உம்மை நம்பவும், உம்முடைய அன்பையும் கரிசனையையும் அனுபவித்து மகிழவும் எங்களுக்கு போதித்தருளும். பிரயாசத்தின் பலனையும் உம்முடைய உச்சிதமான ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழ எங்களுக்கு உதவும். உம்முடைய பரிபூரண கிருபை இப்போதும் எப்போதும் எங்களை சூழ்ந்திருக்கவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.