அன்பானவர்களே, இந்த புதிய நாளிலே ஆண்டவர் உங்களுக்கு புதிய நம்பிக்கையை அருளுகிறார். "உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்;...நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்" (ஏசாயா 46:4) என்று வாக்குத்தத்தம் சொல்கிறதுபோல, அவரது நம்பிக்கை உங்களை தாங்கும். "உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்" என்று ஆண்டவர் எவ்வளவு நிச்சயமாய் கூறுகிறார்! அன்பானவர்களே, நாம் அவரது கரங்களால் பாதுகாக்கப்பட்டு சுகமாய் இருக்கிறோம்.

நீங்கள், "என் நிலை அப்படியல்ல. புற்றுநோய் கடைசி கட்டத்தில் இருக்கிறது; என்னுடைய சிறுநீரகங்கள் செயலிழந்துவிட்டன; கடன்காரர்களின் தயவில் வாழ்கிறேன்; என் வாழ்க்கை முடியப்போகிறது," என்று நினைக்கிறீர்களா? "சூழ்நிலை இப்படி இருக்கும்போது தேவனால் எப்படி என்னை சுமக்கமுடியும்?" என்று கேட்கிறீர்களா? என் தாத்தா பெலவீனப்பட்டிருந்தபோது, உறுப்புகள் செயலிழக்க ஆரம்பித்தபோது, மருத்துவர்கள் நம்பிக்கையில்லாமல் இருந்தபோது, அவர் என் பாட்டியை அழைத்து, "வீட்டு காரியங்களை ஒழுங்குப்படுத்து; நம் பிள்ளைகளை பார்த்துக்கொள்; நான் அதிக காலம் இருக்கமாட்டேன்; ஆனால் தேவன் உங்களை பராமரிப்பார்," என்று கூறினார். ஆனால், என் பாட்டி விசுவாசத்துடன், "இல்லை. நீங்கள் சாகமாட்டீர்கள். உங்கள் மூலமாக வல்லமையான பெரிய காரியங்களைச் செய்வதாக தேவன் வாக்குப்பண்ணியிருக்கிறார். நீங்கள் எங்களைக் கைவிட்டுச் செல்லமாட்டீர்கள்," என்று கூறினார்கள். அவ்வாறே, தேவன் தாத்தாவின் உயிரை காப்பாற்றினார்; தம் வாக்குத்தத்தங்களை நிறைவேற்றினார்.

ஆம், அன்பானவர்களே, தேவன் உங்களை கைவிடமாட்டார். இன்று, "உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் உங்களைச் சுமப்பேன்," என்று கூறுகிறார். நம்முடைய தகப்பன் அன்புள்ளவர். அவர் இப்போது புதுஜீவனை உங்களுக்குள் ஊதுகிறார். தம்முடைய இரக்கமான கரங்களில் உங்களை ஏந்துகிறார். நீங்கள் பயப்பட தேவையில்லை.

"என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன். நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்" (சங்கீதம் 91:14,16) என்று அவர் கூறுகிறார். ஆம், கர்த்தர், தம்முடைய நாமத்தை தேடுகிறவர்களை, தம்மை உறுதியாய்ப் பற்றிக்கொள்கிறவர்களை, நீடித்த ஆயுள் வரைக்கும் சுமந்து செல்வார்; தம்முடைய சித்தத்தை நிறைவேற்றும்படி அவர்களை பாதுகாத்து, தாங்குவார். இன்றே இயேசுவின் அரவணைப்புக்குள் வாருங்கள். இன்றைக்கு உங்களை அவருக்கு அர்ப்பணித்து, அவரது ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வீர்களா?

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என்னுடைய முதிர்வயது வரைக்கும் என்னைச் சுமந்து செல்வதாக நீர் வாக்குக்கொடுப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். மூழ்கிப்போவதுபோன்ற சூழ்நிலை வாழ்க்கையில் தோன்றும்போது உம்முடைய வல்லமையுள்ள கரங்கள் என்னை காத்துக்கொள்ளும் என்பதை நினைவுப்படுத்தும். என் பயத்தை உம்மிடம் ஒப்படைக்கிறேன்; உம் அன்பு என்னை தாங்கும் என்று நம்புகிறேன். என் இருதயத்தினுள் புதுஜீவனை ஊதும்; உம்முடைய இரக்கத்தினால் என்னில் உள்ளான உயிர்த்தெழுதல் நடக்கும்படி செய்யும். உம்முடைய நாமத்தை நான் அறிந்துகொண்டு, நீர் என்னை பாதுகாப்பீர் என்று புரிந்து உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொள்ள உதவும். என் வாழ்க்கையை சமாதானத்தினால் நிறைத்து, உம்முடைய கிருபையினால் என்னை தாங்கும். வாழ்வின் எல்லா தருணத்திலும் நீர் என்னை சுமப்பீர் என்று நம்புகிறேன். அன்றாடம் எனக்குத் தேவையான நம்பிக்கையையும் பெலனையும் தந்தருளவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.