அன்பானவர்களே, "என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்" (யோவான் 7:38) என்று ஆண்டவர் கூறுகிறார். யூதர்கள், தேவன் தங்களுக்கு தந்த பலனை கூடாரப்பண்டிகையாக ஏழு நாட்கள் கொண்டாடினார்கள். அப்போது, நாள்தோறும் ஆசாரியர்கள் தேவாலயத்திலிருந்து ஒரு பொற்கிண்ணத்தை சீலோவாம் குளத்திற்குக் கொண்டு சென்று, அதில் தண்ணீர் நிரப்புவார்கள். ஜனங்கள் பயபக்தியாக பின்தொடர, ஆசாரியர்கள் தேவாலயத்திற்கு திரும்பி வந்து, தண்ணீரை பலிபீடத்தில் ஊற்றுவார்கள். பண்டிகையின் கடைசி நாள் எல்லோரும் தண்ணீரைப் பார்த்துக்கொண்டிருந்தபோது இயேசு தேவாலயத்தில் எழுந்து நின்று, "ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னண்டைக்கு வாருங்கள்," என்று கூறினார். மெய்யாகவே, இயேசு ஜீவத்தண்ணீர் ஊற்றாக இருக்கிறார். இஸ்ரவேல் ஜனங்கள் அநேக தேவைகள் சந்திக்கப்படும்படி பல சடங்காச்சாரங்களை செய்கின்றனர். ஆனால், இயேசுவை கண்டுகொள்ளவில்லை. இங்கு இயேசு உங்களையும் என்னையும், "என்னிடத்தில் வாருங்கள்; என்னை விசுவாசியுங்கள்; அப்போது உங்கள் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்," என்று அழைக்கிறார். ஜீவத்தண்ணீருள்ள நதிகள் உங்கள் இருதயத்திலிருந்து பாய்ந்து செல்லட்டும். தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்.
இந்த தருணத்தில் இயேசு, "ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்" (ஏசாயா 55:1) என்று ஏசாயா தீர்க்கதரிசி கூறிய வார்த்தைகளை சொன்னார். விலையேறப்பெற்ற ஈவாகிய ஜீவத்தண்ணீரை இயேசு தருகிறார்.
ஜீவத்தண்ணீர் என்பது என்ன? அது பரிசுத்த ஆவியாகும். நாம் இயேசுவிடம் வந்தால் அவர் நம்மை தம்முடைய ஆவியினால் பரிபூரணமாக நிரப்புவார். தேவன் நம்மை தம்முடைய ஜீவத்தண்ணீரால் நிரப்பும்படி நாம் அவர்மேல் உண்மையான தாகமுள்ளவர்களாக இருக்கவேண்டும். இரட்சிப்பின் தண்ணீர் உள்பட பல்வேறு வகை தண்ணீர் உள்ளது. "நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்" (மத்தேயு 5:6) என்று இயேசு கூறுகிறார். ஆண்டவர்தாமே தம்முடைய ஜீவத்தண்ணீரால் உங்கள் இருதயத்தை நிரப்புவாராக. அவர் நம்மை நிரப்புவதுடன் மட்டுமல்லாமல், தம்முடைய ஆவியையும் நம்மேல் ஊற்றுகிறார். "நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்" (அப்போஸ்தலர் 2:17) என்று தேவன் கூறுகிறார். ஆண்டவர் தரும் தண்ணீரானது தேங்கிக்கிடக்காது. அது நதியாக பாய்ந்து மற்றவர்களுக்கும் ஆசீர்வாதத்தை கொடுக்கும். தமது ஆசீர்வாதத்தின் நதிகளால், ஜீவத்தண்ணீருள்ள நதிகளால் உங்களை ஆசீர்வதிக்கவே தேவன் விரும்புகிறார்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்முடைய ஜீவத்தண்ணீரால் நிரப்பப்படும்படி, ஆத்துமாவில் தாகத்தோடு உம்மிடம் வருகிறேன். உம்மிடம் வந்து உம்முடைய ஆவியை அளவில்லாமல் பெற்றுக்கொள்ளும்படி என்னை அழைக்கிறதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்முடைய பரிசுத்த ஆவி என் மூலமாக ஜீவத்தண்ணீருள்ள நதிகளாக பாய்ந்து சமாதானத்தையும் பெலனையும் சந்தோஷத்தையும் அளிக்கட்டும். உம்முடைய நீதியின்மேல் நான் பசி தாகமாயிருக்கும்படி செய்யும். நீர் என்னை சுற்றிலுமிருக்கிறவர்கள்மேலும் பாய்ந்து அவர்களை ஆசீர்வதிக்கும்படி, உம்முடைய ஆவியை என்மேல் அளவில்லாமல் ஊற்றுவீராக. ஒருபோதும் வற்றாத நதியைப்போல என் வாழ்க்கை உம்முடைய அன்பையும் நன்மையையும் விளங்கப்பண்ணட்டும். ஜீவத்தண்ணீராகிய விலையேறப்பெற்ற ஈவை தருவதற்காக உமக்கு நன்றி செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.