அன்பானவர்களே, இன்றைக்கு, "உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்" (உபாகமம் 28:1) என்ற நிச்சயத்தை வேதம் நமக்குத் தருகிறது. இதுபோன்று பெரிய மேன்மையை குறித்து கொடுக்கப்பட்ட இன்னொரு வாக்கை வேதத்தில் காண்கிறோம். ஆனால், அது தேவனால் கொடுக்கப்பட்டதல்ல. சாத்தான், இயேசுவை சோதித்தபோது, அவன் அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டு சென்று, உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவற்றின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து, "நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்" என்று கூறினான். ஆனால் இயேசு, "உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக," என்று கூறி மறுத்தார்.

அவ்வண்ணமாகவே, என் தாத்தா தீவிரமாய் நோய்வாய்ப்பட்டிருந்தபோது, சாத்தான் அவருக்கு முன்னர் தோன்றி, "தினகரன், நீ என்னை பணிந்துகொண்டு பின்பற்றினால், நான் உன்னை குணமாக்குவேன். நான் உனக்கு ஐசுவரியத்தையும் புகழையும் தருவேன்," என்று கூறினான். அத்தனை கொடுமையாக பாடுபட்டுக்கொண்டிருந்தபோது, அவன் கூறிய விஷயம் இனிமையானதாக இருந்தது. ஆனால், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, என் தாத்தாவுக்காக சிலுவையை சுமந்ததை தேவன் அவருக்கு தரிசனத்தில் காண்பித்தார். அந்த நேரத்தில் என் தாத்தா, "சாத்தானே, நீ எனக்கு பல காரியங்களைக் குறித்து வாக்குக்கொடுக்கிறாய். ஆனால் நான் சகல ஆசீர்வாதங்களையும் சுதந்தரித்துக்கொள்ளும்படி, இயேசு மாத்திரமே தம் ஜீவனை எனக்காக கொடுத்தார். நான் அவரை மாத்திரமே பின்பற்றுவேன்," என்று கூறினார். உடன்தானே சாத்தான் பணிந்துகொண்டு விலகிப்போனான். சாத்தான் வசீகரமான பல காரியங்களை தருவதாக கூறலாம். ஆனால், அவை அத்தனையுமே மறைந்துபோகக்கூடியவை. நமக்கு ஆசைகாட்டி, நம்மிடமிருந்து எல்லாவற்றையும் பறித்துக்கொண்டு, அழிவை கொண்டுவருவதுதான் அவனுடைய திட்டத்தின் நோக்கமாகும். ஆனால், நாம் இயேசுவைப் பற்றிக்கொள்ளும்போது, அவர் நமக்காக சிந்திய விலையேறப்பெற்ற இரத்தத்தின் மூலம், தேவனுடைய தெய்வீக சுதந்தரமாகிய நித்திய ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வோம். இயேசு தம்முடைய இரத்தத்தை சிந்தி, உங்களை தமக்குச் சொந்தமாக்கிக் கொண்டுள்ளபடியினால், உங்களை மேன்மைப்படுத்துவதாக தேவன் கொடுத்திருக்கும் வாக்குத்தத்தம் நிச்சயமாகவே நிறைவேறும். தமக்கு முன்பாக தங்களைத் தாழ்த்துகிறவர்களுக்கு அவர் பலன் கொடுக்கிறார். வேதம், "தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்" என்று கூறுகிறது. தேவன் உங்களை உயர்த்துவார். நீங்கள் அவருக்காக காத்திருந்திருக்கிறீர்கள்; அவரை நம்பியிருக்கிறீர்கள்; அவர் உங்களை உயர்த்துவார். ஆண்டவர் கொடுத்துள்ள இந்த மகிமையான வாக்குத்தத்தத்திற்காக அவரை ஸ்தோத்திரிப்போமா?

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உமக்கு முன்பாக தங்களைத் தாழ்த்துகிறவர்களை உயர்த்துவதாக நீர் அளித்திருக்கும் மகிமையான வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, நீர் மாத்திரமே என் தேவனும் இரட்சகருமாயிருக்கிறபடியினால் உம்மையே ஆராதித்து சேவிப்பேன். இவ்வுலகின் நிலையற்ற சோதனைகளை புறம்பே தள்ளுகிறேன்; கிறிஸ்து மூலமாக நீர் எனக்கு தரும் நித்திய சுதந்தரத்தையே பற்றிக்கொள்கிறேன். ஆண்டவரே, என் வாழ்வில் எல்லா ஆசீர்வாதத்தையும் தருவதற்காக இயேசு சிந்திய இரத்தத்திற்காக எப்போதும் நன்றியுடன் இருக்கிறேன். நீர் வாக்குத்தத்தத்தை நிறைவேற்ற உண்மையுள்ளவர் என்பதால் உம்முடைய வேளையையும், நினைவுகளையும் நம்புகிறேன். என்னுடைய சுய பெலனால் அல்ல; உம்முடைய கிருபையை கொண்டு மாத்திரம் என்னை நீர் மேன்மைப்படுத்துவதற்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.