அன்பானவர்களே, இன்றைக்கு, "பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்" (யாத்திராகமம் 14:13) என்ற வாக்குத்தத்த வசனத்தை தியானிப்போம். இந்த வசனத்தின் மூலம், தேவன், "பயப்படாதே, உறுதியாக நில். இன்றைக்கு நீ காணும் எகிப்தியனை இனி ஒருபோதும் காணமாட்டாய்," என்று உங்களுக்கு வாக்குப்பண்ணுகிறார்.

வேதாகமத்தில், இதற்கு முந்தைய சில வசனங்களில், எகிப்திய இராணுவம், இஸ்ரவேல் ஜனங்களை அழிக்க முயற்சிப்பதற்காக வருவதை காண்கிறோம். இஸ்ரவேலர், கடலை கடந்து செல்லமுடியாதபடி, அதன் முன்பு நின்றுகொண்டிருக்கிறார்கள். அவர்கள் சிக்கிக்கொண்டார்கள். இந்த தருணத்தில், அவர்கள் மோசேயிடம், "நீர் எங்களை எகிப்தில் விட்டிருந்தீரானால் நாங்கள் பாதுகாப்பாய் இருந்திருப்போம். இந்த வனாந்தரத்தில் சாவதைப் பார்க்கிலும் எகிப்தியருக்கு வேலை செய்வது மேலாக இருந்திருக்கும்," என்று குறைகூறுகிறார்கள். தேவன் அவர்களை மீட்டுக்கொள்ளும் முன்னரே, இந்த அற்ப தருணத்தில், அவர்கள் விசுவாசத்தை இழந்து குறைசொல்ல தொடங்குகிறார்கள். தேவன், அவர்களை எகிப்தை விட்டு வெளியே வழிநடத்துவதற்கு முன்னர், பல அற்புதங்களைச் செய்தார்; அவர்கள் அனைவருமே தேவனுடைய மகத்துவத்தை கண்டார்கள். ஆனால், இந்த ஒரு தருணத்தில் அவர்கள் கண்ணியில் சிக்கிக்கொண்டதுபோல், குறை சொன்னார்கள்; தேவன்மேலான விசுவாசத்தை இழந்துபோனார்கள்.

பலவேளைகளில் நாம் தேவனிடமிருந்து ஒரு வாக்குத்தத்தத்தை அல்லது திட்டத்தை பெற்றுக்கொள்ளும்போது, வாழ்வில் சவால்களை சந்திக்க நேரிடும். அடுத்து என்ன செய்வதென்று நமக்குத் தெரியாமல் இருக்கலாம். இதுபோன்ற சவால்களை சந்திக்க நேரும்போது, நாம் பலமுறை தேவனிடம், "தேவனே, நீர் எனக்கு வாக்குத்தத்தத்தை தந்திருக்கும்போது, ஏன் இந்த இக்கட்டு? ஏன் இந்த பணக்கஷ்டத்தின் வழியாக செல்லவேண்டும்? ஏன் தோல்வியை, இழப்பை சந்திக்கவேண்டும்? ஏன் மற்றவர்கள் குறைசொல்வதை கேட்கவேண்டும்?" என்று குறைபட்டுக்கொள்கிறோம். இந்தத் திட்டங்களையோ, வாக்குத்தத்தங்களையோ பெற்றுக்கொள்ளாமல் இருந்தால் நம் வாழ்க்கை இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று எண்ணி தேவனிடம், "நீர் என்னை ஏன் புதிய காரியங்களை செய்யப் பண்ணுகிறீர்?" என்று கேட்கிறோம். ஆனால், அன்பானவர்களே, தேவன், "பயப்படாதே, உறுதியாக நில். கர்த்தருடைய இரட்சிப்பை பார்," என்று உங்களிடம் கூறுகிறார். இன்றைக்கு நீங்கள் காணும் விரோதியை, போராட்டத்தை, தடையை, வியாதியை இனி ஒருபோதும் காண்பதில்லை. இதே அதிகாரத்தில் தேவன் செங்கடலை இரண்டாகப் பிளந்ததை வாசிக்கிறோம். இஸ்ரவேல் ஜனங்கள் வெட்டாந்தரையில் நடந்து, பத்திரமாக கரை சேர்ந்தார்கள். அவர்களை தொடர்ந்து எகிப்தியர் வந்தபோது, இஸ்ரவேல் ஜனங்களை அழிக்க முடியாதபடி, கடல் அவர்களை மூடிக்கொண்டது.

நீங்கள் சந்திக்கும் தடைகளை மேற்கொள்ளும்படி தேவன் தமது மகிமையையும் வல்லமையையும் காண்பிப்பார். நீங்கள் ஆண்டவரின் இரட்சிப்பை காண்பீர்கள். ஆகவே, தைரியமாயிருங்கள். தேவன் உங்கள் பட்சத்தில் இருக்கிறார். இன்றைக்கு உங்களை தாக்கும் விரோதியை இனி நீங்கள் காண்பதில்லை. ஆண்டவருக்கு நன்றி செலுத்தி, ஜெபிப்போம்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நீர் கொடுத்திருக்கும் அருமையான வாக்குத்தத்தத்திற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். உம்முடைய மகத்துவமான வல்லமைக்காகவும் மகிமைக்காகவும் உம்மை துதிக்கிறேன். இன்றைக்கு, உம்முடைய வல்லமையை சந்தேகிக்காமல், உம்மை நம்பி, கரையைக் கடந்து, உம்முடைய மகத்துவமான அதிசயங்களையும், அற்புதங்களையும் விளங்கச் செய்ய எனக்கு உதவும். என்னுடைய விரோதிகளை, தடைகளை, வியாதிகளை இனி நான் காணாதபடி, எல்லாவற்றையும் நீர் அழித்துப்போடுவதற்காக நன்றி செலுத்துகிறேன். எனக்கு திடநம்பிக்கையை தந்து, உம்முடைய இரட்சிப்பை காண்பதற்கு உதவுவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, என்னை ஆசீர்வதித்து உம்முடைய நாமத்தை மகிமைப்படுத்தவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.