எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு, "நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்" (எபேசியர் 2:10) என்ற வசனத்தை நாம் தியானிப்போம். இயேசுவின் வாழ்க்கை நற்கிரியைகள் நிறைந்ததாக இருந்தது. அநேக ஜனங்கள் தங்கள் பிரச்னைகளிலிருந்து விடுவிக்கப்படுவதற்கு அவர் உதவினார்; மரித்துப்போன சிலரை எழுப்பவும் செய்தார். ஜனங்கள் சந்தோஷப்படும்படி செய்தார். நாம், கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி அவரைப்போல நடக்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். ஆண்டவராகிய இயேசு, இவ்வுலகில் ஏழைக்குடும்பத்தில், முன்னணையில் பிறந்தார். ஏன் அவர் அவ்வாறு பிறந்தார்? நாம் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, நமது நிமித்தம் தரித்திரரானார் என்று வேதம் கூறுகிறது(2 கொரிந்தியர் 8:9). இதுவே அவர் நமக்காகக் செய்த மிகப்பெரிய தியாகமாகும். ராஜாதி ராஜாவாக, கர்த்தாதி கர்த்தாவாக அவர் இருந்தாலும், ஒரு தச்சனுடைய வீட்டிலே வளர்ந்தார். ஏன் அவர் தன்னை அவ்விதமாக தாழ்த்தினார்? நாம் அவருடைய மாதிரியை பின்பற்றுவதற்காக அப்படிச் செய்தார். "கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்" (1 பேதுரு 2:21)என்று வேதம் கூறுகிறது.
அன்பானவர்களே, உங்கள் அனுதின வாழ்க்கையில் இயேசு கிறிஸ்துவின் மாதிரியை பின்தொடருங்கள். தேவனுடைய வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்; அதையும் உங்கள் அனுபவங்களையும் மற்றவர்களோடு பகிர்ந்துகொண்டு, அவர்களுக்காக ஜெபியுங்கள்.  தேவனாகிய கர்த்தரின் பிரசன்னத்தில் நேரம் செலவிடுங்கள். "அவர் இருக்கிறபிரகாரமாக நாமும் இவ்வுலகத்தில் இருக்கிறோம்" (1 யோவான் 4:17)என்றும் வேதம் கூறுகிறது. இயேசுவின் அடிச்சுவடுகளை பின்பற்றுங்கள். ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்காதீர்கள். அப்போது இயேசுவைப் போல மறுரூபமாக்கப்படுவீர்கள். அப்படி நம்மை மாற்றும்படி இப்போது அவரிடம் கேட்போமா?

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, ஆறுதல் தருகிற வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நானும் பரிசுத்தமாகவேண்டும் என்று நீர் விரும்புகிறீர். இப்போதும் என்னுடைய இருதயத்தையும் எண்ணங்களையும் உம்மிடம் அர்ப்பணிக்கிறேன்; என்னை மன்னிக்கும்படி கேட்கிறேன். உம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் என்னை கழுவியருளும். உம்முடைய பிரசன்னத்தின்மேல் இன்னும் தாகங்கொள்ள எனக்கு உதவும்.  உம்முடைய பாதத்தில் அதிக நேரத்தை செலவழித்து, என் மனதை புதுப்பித்து, அனுதினமும் அதிகமதிகமாய் உம்மைப்போல மாறுவதற்கான கிருபையை எனக்கு அருளிச் செய்யும். ஆண்டவரே, நீர் இந்த உலகத்தில் இருந்தபோது மக்களுக்கு நன்மை செய்தீர். உம்முடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி, அனைவரும் அவ்வாறு நன்மை செய்யவேண்டுமென்று விரும்புகிறேன். பரிசுத்த ஆவியானவரே, என்னை நிரப்பி, நான் பிறருக்காக மன்றாடி, என்னை சுற்றிலுமிருப்பவர்களுக்கு ஆசீர்வாதமாக விளங்கும்படி என்னை பயிற்றுவியும். என்னுடைய ஜெபத்தைக் கேட்டு, எல்லா சூழ்நிலைகளிலும் உம்மைப்போல நடக்கவேண்டும் என்ற வாஞ்சையை எனக்குத் தருவதற்காக உமக்கு நன்றி செலுத்தி, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.