ஆண்டவருக்குள் அன்பானவர்களே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் உங்களை அன்போடு வாழ்த்துகிறேன். இன்றைக்கு வேதத்திலிருந்து, "அவரில் அன்புகூருகிறவர்களோ, வல்லமையோடே உதிக்கிற சூரியனைப்போல இருக்கக்கடவர்கள்"(நியாயாதிபதிகள் 5:31) என்ற அருமையான வசனத்தை தியானிப்போம். இந்த வசனம் கூறுகிறபடியே உங்கள் வாழ்க்கை சூரியனின் பிரகாசம்போல ஒளிவீசும். உங்கள் வாழ்க்கையை அவ்வாறு மாற்றுவதற்கு ஆண்டவர் இப்போதே ஆயத்தமாயிருக்கிறார். அதை விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பீர்கள்.

அப்படி உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக விளங்குவதற்கு நீங்கள் என்ன செய்யவேண்டும்? "உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக; அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவர்" (உபாகமம் 30:20) என்று வேதம் கட்டளையிடுகிறது. "அன்போ பக்திவிருத்தியை உண்டாக்கும்" (1 கொரிந்தியர் 8:1) என்றும் வேதத்தில் வாசிக்கிறோம்.

என்னுடைய 16வது வயது வரையிலும் நான் இயேசுவை உண்மையாய் நேசிக்கவில்லை. நான் ஆலயத்திற்கு செல்கிற, சாதாரணமான, பெயரளவு கிறிஸ்தவளாக வாழ்ந்து வந்தேன். எனக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் உண்மையான ஐக்கியம் இல்லை. ஒருநாள், நான் தனிமையாய் உணர்ந்தபோது, மனம் சோர்ந்திருந்தபோது, ஆண்டவர் என்னோடு பேசினார். "ஸ்டெல்லா, நான் உன்னை அதிகமாய் நேசிக்கிறேன். மகளே, உனக்காக நான் சிலுவையில் உன் உயிரைக் கொடுத்தேன். எப்போதும் என்னை நோக்கிப் பார். உன் தேவைகள் எல்லாவற்றையும் நான் அருளிச்செய்வேன்," என்று கூறினார். அப்போதுதான் நான் அதுவரை ஒருபோதும் அந்த மகத்தான அன்பை தேடாததை உணர்ந்தேன். அப்போதிலிருந்து நான் ஆண்டவரை என் முழு இருதயத்தோடும் தேட ஆரம்பித்தேன். அல்லேலூயா! அவர் என்னுடைய நெருங்கிய சிநேகிதரானார். நான் அவருடன் பேசவும், சஞ்சரிக்கவும் ஆரம்பித்தேன். என்னுடைய 21வது வயதில் இயேசுவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையை முழுவதும் அவருக்கு அர்ப்பணித்தேன்.

ஆம், அன்பானவர்களே, உங்களுக்கு புதிதும் பரிபூரணமானதுமான வாழ்க்கையை தருவதற்கு இயேசு சிலுவையில் மரித்தார். வேதத்தில் அது அழகாக விவரிக்கப்பட்டுள்ளது (எபேசியர் 3:17-19). பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறது என்றும் வேதம் நமக்கு நினைவுப்படுத்துகிறது (ரோமர் 5:5; 2 தீமோத்தேயு 1:7). தமது அன்பை முழுமையாக உங்களுக்குத் தந்து ஆசீர்வதிப்பதற்கு ஆண்டவர் இப்போதே ஆயத்தமாக இருக்கிறார். இந்த தெய்வீக, அன்பின் சிநேகிதத்தை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?

ஜெபம்:
அன்பின் பரம தகப்பனே, பயமும் நன்றியறிதலும் நிறைந்த இருதயத்துடன் உம்மிடம் வருகிறேன். நீர் பாராட்டும் மகத்தான அன்புக்காகவும், உம்முடைய மகிமையால் சூரியனைப்போல பிரகாசிக்கிற வாழ்வை நீர் தருகிறதற்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீரே எனக்கு ஜீவனும் பெலனுமாக இருக்கிறபடியினால், உம்மை அதிகமாய் நேசிக்கவும், உம்முடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியவும், எப்போதும் உம்மைப் பற்றிக்கொள்ளவும் எனக்கு உதவி செய்தருளும். எனக்கு புதுவாழ்வையும் நம்பிக்கையையும் அருளும்படி, நீர் எனக்காக சிலுவையில் பலியாகி செய்த தியாகத்திற்காக நன்றி செலுத்துகிறேன். அனுதினமும் நான் உம்மோடு நெருங்கி ஜீவிக்கும்படி, என்னை வல்லமையின் ஆவியாகிய, அன்பின் ஆவியாகிய உம்முடைய பரிசுத்த ஆவியினால் நிரப்பும். உம்முடைய அன்பின் பரிபூரணத்தை நான் அனுபவிக்கும்படி என்னுடைய விசுவாசத்தை பெலப்படுத்தும். நான் எப்போதும் உமக்கு சிநேகிதனாக / சிநேகிதியாக இருக்கவும், உம்முடைய அன்பின் சாயலை மற்றவர்களுக்கு காண்பிக்கவும் விரும்பி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.