எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். "நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ... அதை நன்மையாக முடியப்பண்ணினார்" (ஆதியாகமம் 50:20) என்று வேதத்தில் வாசிக்கிறோம். இந்த வசனம், யோசேப்பின் வாழ்க்கையை மிகவும் சுருக்கமாகக் கூறுகிறது; இருளான தருணங்களையும் நீதிமானுக்கு ஆசீர்வாதமாக மாற்ற தேவனால் முடியும் என்று நமக்கு நினைவுப்படுத்துகிறது.

யோசேப்பு, தேவனுடைய மனுஷனாயிருந்தான். அவன் இளைஞனாயிருந்தபோதிலும், கர்த்தரை ஆழமாய் நேசித்தான்; தன் தந்தையுடன் கர்த்தரின் பாதையில் நடந்தான். அவன் தேவனுடன் நெருங்கி ஜீவித்தபடியினால், மற்றவர்களைக் காட்டிலும் வித்தியாசமாக இருந்தான்; அதனால், அவனுடைய அண்ணன்மாரின் இருதயங்களில் பொறாமை எழும்பியது. அவர்கள் அவனை தங்களுக்கு போட்டியாக நினைத்தார்கள்; குறிப்பாக, அவன் எதிர்காலத்தைக் குறித்து பகிர்ந்துகொண்ட சொப்பனங்களால் அவ்வாறு எண்ணினர். அவர்கள் பொறாமை பெருகியது; அவனுடைய வாழ்க்கையை முடித்துப்போடும்படி அவர்கள் சதி திட்டம் தீட்டினர். "அவனை நாம் கொன்றுபோட்டால் அவன் சொப்பனங்கள் என்னவாகும்?" என்று அவர்கள், தங்கள் இருதயங்களில் தீங்கை எண்ணினர். அவர்கள் அவனை அடிமையாய் விற்றுப்போட்டாலும், அவன் எகிப்துக்குக் கொண்டு செல்லப்பட்டாலும், யோசேப்பின் வாழ்வில் தேவனுடைய திட்டம் வெளிப்படாமலே இருந்தது.

எகிப்திலும் யோசேப்பு சவால்களை சந்திக்க வேண்டியதிருந்தது. போத்திபாரின் வீட்டில் வேலை செய்துகொண்டிருந்தபோது, போத்திபாரின் மனைவி அவனை பாவத்திற்குள் இழுப்பதற்கு முயற்சித்தாள். ஆனால், யோசேப்பு, உத்தமமும் நீதியும் கொண்ட வாலிபனாக உறுதியாக நின்றான். "நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி?" என்று சோதனைக்கு யோசேப்பு பதிலளித்தான் (ஆதியாகமம் 39:9). அவன் வாலிபனாயிருந்தான். ஆனாலும், அவன் இருதயம் தேவனுடைய சித்தத்துடன் இசைந்ததாயிருந்தது. விசுவாசத்தில் சமரசம் செய்துகொள்ள அவன் மறுத்தான். தன் எஜமானுக்கு விரோதமாக செய்யப்படும் பாவம், தேவனுக்கு எதிரானது என்பதை அவன் அறிந்திருந்தான். அதை சுமக்க அவன் விரும்பவில்லை. ஆகவேதான் தேவன் யோசேப்புக்கு அவ்வளவு தயை பாராட்டினார். "நீதிமான்களுக்கோ நன்மை பலனாக வரும்" (நீதிமொழிகள் 13:21) என்று வேதம் கூறுகிறது. தன்னுடைய நீதியால் யோசேப்பு தேவனிடமிருந்து பரிபூரண ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டான்.
யோசேப்பின் வாழ்வில் இன்னொரு கடினமான தருணம் ஏற்பட்டது. அவன் தவறான குற்றச்சாட்டுக்கு சிறையில் போடப்பட்டான். ஆனால், ஆழமான சிறையிலும் தேவன் அவனோடு கூட இருந்தார். ஏற்றவேளையில் தேவன் ராஜாவின் இருதயத்தை அசைத்தார்; யோசேப்பு சிறையிலிருந்து அற்புதமாய் வெளியே கொண்டு வரப்பட்டு, மிகவும் கனத்துக்குரிய நிலையில் அமர்த்தப்பட்டான். நேரடியாக ஆளுகை செய்யும்படி, அவன் ராஜாவுக்கு அடுத்த இடத்தில் வைக்கப்பட்டான்.  அன்பான தேவ பிள்ளையே, நம் தேவன் எவ்வளவு பெரியவர்! சூழ்நிலைகள் எப்படி காணப்பட்டாலும், நீதியில் நடக்கிறவர்களை உயர்த்தவும், தாழ்விலிருக்கிறவர்களை தூக்கியெடுக்கவும் அவரால் முடியும்.

இன்றைக்கு நீங்கள் உபத்திரவங்களை சந்திக்கலாம். எனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று நீங்கள் திகைக்கலாம். உலகமே உங்களுக்கு எதிராக இருப்பதுபோல தோன்றலாம்; ஏன் என்று உங்களால் புரிந்துகொள்ள இயலாமல் இருக்கலாம். யோசேப்போடு இருந்ததுபோல, தேவன் உங்களோடும் இருக்கிறார். நீங்கள் அவருக்கு முன்பாக நீதியாக வாழ்ந்தால் அவர் உங்களை கனப்படுத்துவார். யோசேப்புக்கு கொடுக்கப்பட்ட அதே கனம், உங்களுக்கும் கொடுக்கப்படும்.

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, இருளான தருணங்களையும் நீதிமானுக்கு ஆசீர்வாதமாக மாற்ற உம்மால் முடியும். நீதிமானுக்கு நன்மை பலனாக கொடுக்கப்படும் என்று உம்முடைய வசனம் கூறுகிறது. என் இருதயத்தை உம்முடைய நீதியால் நிரப்பவேண்டுமென்று தாழ்மையுடன் கேட்கிறேன். உம்மால் மாத்திரமே என்னை சுத்திகரித்து பூரணமாக்க முடியும் என்பதை அறிந்திருக்கிறேன். உம்முடைய பார்வைக்கு பிரியமானவிதத்தில் உத்தமமாய் வாழும்படி உம்முடைய நீதியை எனக்கு தரிப்பித்தருளும். தாழ்விலிருக்கிறவனை நீர் தூக்கியெடுப்பீர்; சூழ்நிலைகள் சாதகமாயில்லாதபோதும், உம்முடைய வழியில் நடக்கிறவனை உயர்த்துவதற்கு உம்மால் முடியும். உம்முடைய பிரசன்னம் எப்போதும் என்னோடிருக்கிறது; நான் அதை நம்புகிறேன். நான் நீதியில் நடக்கும்போது, ஏற்ற வேளையில் நீர் என்னை கனப்படுத்துவீர் என்பதை அறிந்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.