அன்பானவர்களே, இன்றைக்கு தேவனுடைய வாக்குத்தத்தத்தை நாம் உரிமையாக்கிக்கொள்ள இருக்கிறோம். நீங்கள் ஜீவனை விரும்பினால், இதைப் பற்றிக்கொள்ளுங்கள்; ஏனெனில் இதிலிருந்து ஜீவன் பாய்கிறது. "அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது" (யாக்கோபு 4:6) என்று வேதம் நமக்குக் கற்பிக்கிறது. அன்பானவர்களே, தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார் என்று இந்த வசனம் தெளிவாகக் கூறுகிறது.
மத்தேயு சுவிசேஷத்தில், பரிசேயர்கள் எவ்வாறு உயர்ந்த இருக்கைகளை தேடுகிறார்கள்; மரியாதையையும் மற்றவர்களின் கவனத்தையும் எதிர்பார்க்கிறார்கள் என்பது குறித்து இயேசு கூறியிருக்கிறார். அவர்கள் அங்கீகாரத்தையும் கனத்தையும் விரும்புகிறார்கள். தங்கள் பதவியையும் அதிகாரத்தையும் தவறாக பயன்படுத்துகிறார்கள்; பெருமையாக நடந்து, ஜனங்களை தாழ்வாக நோக்குகிறார்கள். ஆனாலும், அப்படி பெருமையோடு இருக்கிறவர்களை தேவன் எதிர்க்கிறார். பலவேளைகளில் நாம் அதை உணராமல் இருக்கலாம். நாமும் அங்கீகாரத்தையும் கனத்தையும் தேடுகிறோம். ஆனால், அந்தப் பெருமை நம்மை உண்மையான வெற்றிக்கு நேராக வழிநடத்தாது என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும். பெருமை, மெய்யான வெற்றிக்கு நம்மை வழிநடத்தாது. தேவன் தாழ்மையுள்ளவர்களுக்குக் கிருபையளிப்பதால் அவரது ஆசீர்வாதமே, உயர்ந்த அந்தஸ்துக்கும் கனத்துக்கும் நம்மை கொண்டு சேர்க்கும் ஒரே பாதையாயிருக்கிறது. தேவன் பெருமையுள்ளவர்களின் வார்த்தைகளைக் கவனிப்பதில்லை. அவர் தாழ்மையுள்ளவர்களோடு நேரம் செலவழிக்கவும் அவர்களுக்குச் செவிகொடுக்கவும் பிரியமாயிருக்கிறார். மத்தேயு 5ம் அதிகாரத்தில் இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; தேவனும் அவர்களுக்கு இரக்கம் காட்டுகிறார் என்று எழுதியிருக்கிறது, ஆமென்.
நாம் மற்றவர்களிடம் இரக்கமாயிருக்கும்போது, நம்முடைய மேட்டிமையை விட்டு இறங்கி மற்றவர்களுக்கு ஊழியம் செய்யும்போது தேவன் நமக்கு இதுபோன்ற இரக்கத்தை காண்பிக்கிறார். தேவன் மாத்திரமே உயர்ந்தவர். அவருக்கு முன்பாக நாம் அனைவருமே ஒரே நிலையில் இருக்கிறோம். ஆகவே அவருக்கு முன்பாக தாழ்மைப்படுங்கள். இந்த தாழ்மை குணம் எப்போதும் நமக்குள் இருக்கவேண்டும். எங்கள் கூட்டங்களிலும், மக்கள், தங்கள் பதவிகளை, பின்னணியை தூக்கி எறிந்துவிட்டு, தாழ்மையோடு தேவனை நோக்கி முறையிடுவதை பார்க்கிறோம். அப்படிப்பட்டவர்களின் கூப்பிடுதலை தேவன் கேட்கிறார்; அங்கேயே அற்புதங்களை செய்கிறார். தம்மை நோக்கி தாழ்மையோடு கூப்பிடுகிறவர்களுக்கு தேவன் கிருபை அளிக்கிறார். ஆகவே, உங்களை தாழ்த்துங்கள். இன்றைக்கு, தேவ கிருபை உங்கள்மேல் இருக்கும்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்முடைய வசனத்தின் மூலமாக என்னோடு பேசுகிறதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். தாழ்மையுள்ளவர்கள்மேல் நீர் பிரியமாயிருக்கிறீர்; அவர்களை உயர்த்துகிறீர். ஆகவே, தாழ்மையாயிருப்பதற்கு எனக்கு உதவி செய்யும். எல்லா காரியங்களும் உம்மை குறித்தது என்றும், என்னையோ, நான் அறிந்திருப்பவற்றையோ, சாதித்தவற்றையோ குறித்தது அல்ல என்றும் ஒவ்வொரு நாளும் எனக்குக் காண்பியும். உம்முடைய கிருபையினால் நான் இரட்சிக்கப்பட்டேன்; ஆசீர்வதிக்கப்பட்டேன். உம்முடைய பாதுகாப்பே என்னை பத்திரமாயும் சுகமாயும் காத்துக்கொள்கிறது. உம்முடைய ஞானமும் வரங்களுமே நான் சிறந்துவிளங்க உதவுகின்றன. ஆண்டவரே, நீர் இல்லாமல் நான் ஒன்றுமில்லை. எப்போதும் உமக்கு முன்பாக தாழ்மையாயிருக்கவும், உம்முடைய கட்டளைகள் எல்லாவற்றுக்கும் கீழ்ப்படியவும் எனக்கு உதவி செய்யும். என்னைச் சுற்றிலுமிருப்பவர்கள் என்னில் உம்மை கண்டு, உம்முடைய நாமத்தை மகிமைப்படுத்தும்படி அவர்களிடமும் நான் தாழ்மையாயிருக்க உதவவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.