அன்பானவர்களே, தேவன் உங்களை தமக்குச் சொந்தமானவராக இருக்கும்படி தெரிந்துகொண்டிருக்கிறபடியினால், அவர் உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார். இன்றைய வாக்குத்தத்த வசனம், "கர்த்தர் உங்களைத் தமக்கு ஜனமாக்கிக்கொள்ளப் பிரியமானபடியினால், கர்த்தர் தம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனத்தைக் கைவிடமாட்டார்" (1 சாமுவேல் 12:22)என்று கூறுகிறது. நீங்கள் தேவனுடைய ஜனம். அவருடைய பிள்ளை. இயேசு, தம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தை சிந்தி, அவரது தியாகத்தினால் உங்களை தமக்குச் சொந்தமானவராயிருக்கும்படி கிரயத்திற்குக் கொண்டிருக்கிறார். தமது மகத்துவமான நாமத்தின் மகிமைக்காக, அவர் உங்களை ஒருபோதும் மறக்கமாட்டார்; புறம்பே தள்ளமாட்டார். இந்த வாக்குத்தத்தத்தை விசுவாசித்து, முழு இருதயத்தோடு அவரை ஸ்தோத்திரியுங்கள்.

மனமடிவின்வேளையில், 'தேவன் உங்களை நேசிக்கவில்லை,' என்ற எண்ணம் எழலாம். "ஆம், முன்பு நீ அவருடைய பிள்ளையாக இருந்தாய். இப்போது விழுந்துபோனாய். அவருக்கு பிரியமாய் நடக்கவில்லை. எல்லோரும் உன்னை குறை சொல்லுகிறார்கள். தேர்வில் / வேலையில் நீ தோற்றுப்போனாய். இனிமேலும் தேவன் உன்னை எப்படி தன் பிள்ளையாக எண்ணுவார்?" என்ற குரல் கேட்கலாம். இவை அனைத்தும் சத்துரு சொல்லும் பொய்கள். பிசாசு, உங்கள் தோல்விகளை மிகைப்படுத்தி, நீங்கள் தேவனுடைய பிள்ளையாக இருப்பதற்கு தகுதியானவரல்ல என்று எண்ணும்படி செய்வான். அன்பானவர்களே, அது முற்றிலும் தவறானதாகும்.

ஆண்டவர், தம்முடைய மகத்துவமான நாமத்திற்காக, உங்களை ஒருபோதும் கைவிடாமல் காத்துக்கொள்வார். ஒருபோதும் உங்களை புறம்பே தள்ளமாட்டார். இயேசுவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் உங்களை தம்முடைய பிள்ளையாக மாற்றவும், உங்களை தமக்குச் சொந்தமானவர்களென்று அழைக்கவும் அவர் பிரியமாயிருக்கிறார். "எந்தச் சூழ்நிலையிலும் நான் தேவனுடைய பிள்ளையாயிருக்கிறேன். இயேசு என்னை நேசிக்கிறார்; அவர் என்னோடு இருக்கிறார். அவர் இம்முறை எனக்கு உதவி செய்வார். அவரது சித்தம் நிறைவேறும். சகலமும் எனக்கு நன்மையாகவே நடக்கும்," என்று தைரியமாக அறிக்கை செய்யுங்கள். அப்போது, அப்படியே நடக்கும்.
உங்களை உற்சாகப்படுத்தும்படியாக ஒரு சாட்சியை பகிர்ந்துகொள்கிறேன். எலிசா பெரியசுவாமி என்ற சகோதரர் தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். அவரது குடும்பதினர் இயேசுவை பின்பற்றி வந்தனர். ஆனால், இவரோ இயேசுவை கேலி செய்ததோடு, விசுவாசத்திற்கு எதிர்த்தும் நின்றார். அவர் வேலையை இழக்கக்கூடிய சூழ்நிலை உருவானது. அதனால் பணக்கஷ்டத்தில் சிக்கினார்; வாழ்க்கையை முடித்துக்கொள்ள தீர்மானித்தார். ஒருநாள் அவர் இலக்கற்று நடந்துகொண்டிருக்கையில், பொதுக்கூட்டம் ஒன்றில், "உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்," என்று கூறிய என் குரலை கேட்டார். அந்த ஒரு வார்த்தை அவரது இருதயத்தை தொட்டு, இயேசுவுக்கு நேராக அவரை நடத்தியது. எலிசா வீட்டுக்குத் திரும்பி, வேதத்தை வாசிக்க ஆரம்பித்தார். தன் வாழ்க்கையை ஆண்டவருக்குக் கொடுத்தார். தேவன், எலிசாவின் வாழ்க்கையை மாற்றுவதற்கு ஆரம்பித்தார். அவருக்கு எதிரான ஒரு வழக்கு ஏழு ஆண்டுகளாக நீண்டுகொண்டிருந்தது. தேவன் அதில் அவருக்கு வெற்றியை கொடுத்தார். எலிசா, பெதஸ்தா ஜெப மையத்திற்கு வந்து, நாங்கள் நடத்திய கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டார். அவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாதபோதும், ஜெப வேளையில், "தேவன் உங்களை தீர்க்கதரிசியாக்குகிறார்," என்று கூறும்படி வழிநடத்தப்பட்டேன். தேவன் அவர் வாழ்க்கையில் கிரியை செய்தார்; அவர் உள்ளத்தை மாற்றினார். இன்றைக்கு, எலிசா, தாம் தீர்க்கதரிசன வார்த்தையை பெற்றுக்கொண்டதாக சாட்சி கூறுகிறார்; தீர்க்கதரிசன ஊழியத்தின் மூலம் தேவனுடைய ஆசீர்வாதத்தை அநேகருக்குக் கொண்டு செல்லும்படி பயன்படுத்தப்பட்டு வருகிறார். அன்பானவர்களே, சகோ. எலிசாவை கலக்கத்திலிருந்து உயர்த்தி, புதிய நோக்கத்தை அளித்ததுபோல, தேவன் உங்களையும் உயர்த்துவார். தம்முடைய சொந்த பிள்ளையாக அவர் உங்களை தெரிந்துகொண்டிருக்கிறார். அவரை நம்புங்கள். அவரது சித்தம் உங்கள் வாழ்வில் நிறைவேறும்.

ஜெபம்:
பரம தகப்பனே, உம்முடைய மாறாத அன்புக்காகவும் என்னை உமக்குச் சொந்தமானவனா(ளா)க தெரிந்துகொண்டிருப்பதற்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். தோல்விகளின் நேரத்திலும், பெலவீனத்தின் நேரத்திலும், நீர் என்னை கைவிடமாட்டீர் என்ற உம்முடைய வாக்குத்தத்தத்தை நம்புகிறேன். மனமடிவுண்டாக்கும் பொய்களுக்கு எதிராக திடமாக நிற்கவும், உம்முடைய பார்வையில் நான் விலையேறப்பெற்றவன்(ள்) என்பதை மறவாமல் இருக்கவும் எனக்கு உதவி செய்யும். நான் உம் பிள்ளை என்றும், பிரியமானவன்(ள்) என்றும், இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டிருக்கிறேன் என்றும் தைரியமாக அறிக்கைபண்ணும்படி என் இருதயத்தை பெலப்படுத்தும். உம்முடைய நினைவுகளை நம்புவதற்கும், சகலமும் எனக்கு நன்மைக்கேதுவாகவே நடக்கும் என்று விசுவாசிக்கவும் தேவையான கிருபையை எனக்கு தந்தருளும். உபத்திரவத்தில், உம்முடைய உண்மையை நான் மறவாதிருக்கும்படி செய்து, என்னுடைய ஆவியை உமது சமாதானத்தினாலும் திடநம்பிக்கையினாலும் நிரப்பியருளும். ஆண்டவரே, என்னை தூக்கியெடுத்து, உம்முடைய பூரண சித்தத்திற்கேற்ப என்னை வழிநடத்தும். உம்முடைய அன்பிலும் நோக்கத்திலும் நான் நடந்து உம்முடைய மகத்துவமான நாமத்திற்கு மகிமையை கொண்டு வர உதவ வேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.