அன்பானவர்களே, இயேசு அருளிச் செய்துள்ள, "கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்" (லூக்கா 11:9) என்ற அழிவில்லா வாக்குத்தத்தத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நீங்கள் இயேசுவின் நாமத்தில் எதையும் கேட்கலாம்; அவர் அதைச் செய்வார். ஒரு குடும்பத்தினர் இப்படி ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டுள்ளனர். உமாராணி - சந்தோஷ் தம்பதியருக்கு 2017ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஒருவரையொருவர் சரியாக புரிந்துகொள்ளாததன் காரணமாக திருமண வாழ்வை தொடங்கி எட்டு மாதங்களுக்குள் பிரச்னை ஆரம்பித்தது. அது பெரிதாகி இருவரும் பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டது. சந்தோஷ், குடிகாரரானார்; உமாராணி உள்ளமுடைந்துபோனார்கள். இரண்டு ஆண்டுகள் கழித்து அவர்கள் கணவரிடம் திரும்பி வந்தார்கள். இருவரும் மறுபடியும் இணைந்து வாழ தொடங்கினார்கள். ஆனாலும், இரண்டாண்டு காலம் பிரிந்திருந்தமையால், அவர்கள் கணவருக்கு அநேக சந்தேகங்கள் எழும்பின; அவர் அதிகமாய் மது அருந்தினார்.

இந்த வேளையில் உமாராணியின் உறவினர், அவர்களை இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்திற்கு அழைத்து வந்தார்கள். அவர்கள் ஜெப வீரரரை ஜெபிக்கும்படி கேட்டுக்கொண்டார்கள்; ஜெப வீரர்கள் ஊக்கமாய் ஜெபித்தனர். தினமும் இந்த ஜெபக் குறிப்புகள் அனைத்தும் எனக்கு அனுப்பப்படும். நான் எங்கே இருந்தாலும் அவற்றுக்காக ஜெபிப்பேன். ஆச்சரியவிதமாக அவர்கள் கணவர் மது அருந்துவதை நிறுத்தினார்; மனைவியை குறித்து அவருக்கு இருந்த சந்தேகங்கள் மறைந்தன; மனைவியோடு சமாதானத்துடன் பேச தொடங்கினார். அவர்களது கல்வி தகுதிக்கேற்ப ஒரு மருத்துவமனையில் அவர்களுக்கு நல்ல வேலையை கொடுத்து ஆண்டவர் ஆசீர்வதித்தார். இன்றைக்கு இயேசுவினால் அவர்கள் துக்கம் யாவும் சந்தோஷமாக மாறியுள்ளது.

ஆண்டவர், அவருடைய நாமத்தினால் கேட்கும்படியும், அதை அவர் நிறைவேற்றுவதால் நம்முடைய துக்கம் சந்தோஷமாக மாறும் என்றும் கூறியிருக்கிறார். தேவன் உங்களுக்கு அப்படியே செய்வார்; அவர் உங்களை நேசிக்கிறார். தேவன் உங்களை புரிந்துகொள்வார்; ஆகவே, இப்போதே அவரிடம் ஜெபித்து உங்கள் இருதயத்தை இயேசுவிடம் ஊற்றுங்கள். நீங்கள் இப்போது அனுபவிக்கும் எல்லா வேதனை மற்றும் துக்கத்தின் வழியாக அவரும் கடந்து சென்றுள்ளார். இயேசு சிலுவையை தூக்கிச் சென்றபோது நம்முடைய வேதனைகள், பாடுகள் எல்லாவற்றையும் சுமந்தார்; அவற்றை மேற்கொண்டார். இயேசு மரணத்திலிருந்து எழுந்தார். இன்றைக்கு உங்களை விடுவிக்கக்கூடிய, உங்களுக்கு ஒரு வீட்டைக் கட்டக்கூடிய அதிகாரம் அவருக்கு இருக்கிறது. உங்களை கணவனும் மனைவியுமாக இணைத்து பூரணமாக ஆசீர்வதிக்கக்கூடிய அன்பும் வல்லமையும் அவருக்கு இருக்கிறது.

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, என்னை உம்முடைய அன்பினால் நிரப்பும். எனக்கு அன்பானோரை நான் ஒருபோதும் சந்தேகிக்காமல் இருக்க உதவி செய்யும். ஒருமனமும் அன்பும் எப்போதும் நிலைத்திருக்கட்டும். ஆண்டவரே, குடும்ப வாழ்வின் சந்தோஷத்தை நான் அனுபவித்து மகிழும்படி என்னை ஆசீர்வதியும். என் குடும்பத்தினரோடு இணைந்து நான் வேலைகளை செய்து, நாங்கள் மகிழ்ச்சியான குடும்பமாக விளங்குவதற்கு வழி காட்டும். ஆண்டவரே, என் குடும்பத்தை ஆசீர்வதியும். தகப்பனே, எனக்கு ஏற்ற வேலையை தாரும்; நான் வாழ்வில் நிலைப்படவும், பொருளாதார ஆசீர்வாதங்கள் உண்டாகவும் கிருபை செய்யும். ஆண்டவரே, அடிமைத்தன பழக்கங்களிலிருந்து என்னை விடுவித்தருளும். உம்முடைய நாமத்தில் நான் கேட்கின்ற எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ள உதவி செய்தருள வேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.