அன்பானவர்களே, இன்றும் என்றும் இயேசுவுக்குள் பெரிய நம்பிக்கை உண்டு. "நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷமுண்டு; துன்மார்க்கனுடைய வருமானத்திலோ துன்பமுண்டு" (நீதிமொழிகள் 15:6) என்பதே இன்றைக்கான வசனம். இதன்படி, அவரையே நம்பி, ஸ்திரமாய் நிலைத்திருங்கள். ஆம், தேவன் நீதிமானை கனப்படுத்துகிறார். நீதிமான்களின் வீடுகளில் மிகுந்த பொக்கிஷம் நிறைந்திருக்கும். தம்மைப் பற்றிக்கொண்டு அவரில் உறுதியாய் நிலைத்திருக்கிறவர்களுக்கு ஆண்டவர் இந்த ஆசீர்வாதத்தை தருகிறார். தாவீதையும் சாலொமோனையும் நாம் பார்த்தால், தேசத்தில் யாருக்குமில்லாத அளவுக்கு மிகுதியான ஐசுவரியத்தை கொடுத்து தேவன் அவர்களை ஆசீர்வதித்ததை அறிகிறோம். என் தாத்தாவின் வாழ்விலும் இது உண்மையாயிருக்கிறது. ஆனால், தம் ஆசீர்வாதங்களை ஊற்றுவதற்கு முன்பாக தேவன் நம்மை சோதிக்கிறார். அவர் நம்மை சுத்திகரிக்கிறார்; நாம் நம்பிக்கைக்கு உகந்தவர்களாய் இருக்கிறோமா என்பதை பார்ப்பதற்காக பஞ்சமும் வறட்சியுமான காலங்கள் வழியாக நம்மை கடந்து செல்லப்பண்ணுகிறார்.

இயேசுவை பின்பற்றும் அநேகர் இந்த சோதனையின் காலங்களில் பின்வாங்கிவிடுவர். தங்களை தேவ பிள்ளைகள் என்று அழைப்போரும்கூட விசுவாசத்தை இழந்துபோகக்கூடும். இந்த உபத்திரவங்களின் மத்தியில் தேவன், பெரிய பொக்கிஷத்தை நமக்கு தரும் அளவுக்கு நாம் உண்மையுள்ளவர்களாக இருக்கிறோமா என்பதை கண்ணோக்குகிறார். அந்தத் தருணத்தில், உலகப்பிரகாரமான ஐசுவரியத்தில் நாம் குறைவுபட்டிருந்தாலும் தம்மையே பெரிய பொக்கிஷமாக வெளிப்படுத்துவார். தேவன் நம்மோடு இருப்பதால், எதுவுமில்லாத நிலையிலும்கூட எல்லாமும் இருப்பதாக நாம் உணருவோம். தேவன், உலகப்பிரகாரமான செல்வத்தை நமக்குக் கொடுத்து ஆசீர்வதித்தாலும், நாம் அவற்றின் பின்னே போகாமல், எல்லாவற்றுக்கும் மேலாக அவரையே பொக்கிஷமாக கருதும்படி, வாழ்வில் அவரை கொண்டிருப்பதே மகா பெரிய ஆசீர்வாதம் என்று அறிந்துகொள்ளும்வண்ணம் நமக்குப் போதிப்பார்.

ஆபிரகாமுக்கு இப்படியே நடந்தது. தேவன் அவனுக்கு விஸ்தாரமான நிலம், அதிகமான ஐசுவரியம், அருமையான ஈவாக மகனையும் அளித்து ஆசீர்வதித்தார். இவை அவன் வாழ்வில் காணப்பட்ட செல்வங்களாகும். ஆனால், இந்த ஆசீர்வாதங்களைக் கொடுக்கும் முன்னர் தேவன் அவனை சோதித்தார். ஆபிரகாமின் ஆசீர்வாதம் எதன்மேல் இருந்தது? அவன் ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வைத்தானா? தேவன் கொடுத்த ஆஸ்திகளை நம்பினானா அல்லது தேவனை மாத்திரமே நம்பினானா? எல்லாவற்றுக்கும் மேலாக அவன் தேவனையே நம்பினான்; அவனது திடவிசுவாசத்தை தேவன் நீதியாக எண்ணி, அவன் எல்லைகளை விரிவாக்கி, அவனை பூரணமாக ஆசீர்வதித்தார். அன்பானவர்களே, தேவன் உங்கள் வீட்டை நீதிமானின் வீடாக்கி, விசேஷித்த பொக்கிஷங்களால் நிரப்புவார். இந்தக் கிருபை வேண்டுமென்று கேட்போமா? தேவன் உங்கள் வீட்டை நிரப்புவார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நான் எவ்வித சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிட்டாலும் உம்மில் உறுதியாய் நிலைத்திருக்க எனக்கு உதவும். வறண்ட காலங்களிலும் உம்மை மட்டுமே நம்பி, பற்றிக்கொள்ள தீர்மானித்திருக்கிறேன். நீரே என் நம்பிக்கையும் பெலனும் அடைக்கலமுமாயிருக்கிறீர். உம்முடைய வசனத்தின்படியே நீதிமானின் வீடு செழிப்பதாக. ஆவிக்குரிய மற்றும் உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்கள் சேர்ந்த உம்முடைய பொக்கிஷங்களால் என் வீட்டை நிரப்புவீராக. என் எல்லைகளை விரிவாக்கி, நீர் எனக்கு தந்திருக்கிறவற்றை பெருகச் செய்வீராக. எனக்கு இருக்கிற கொஞ்சபொருளை உம்முடைய தெய்வீக கரம் பன்மடங்காய் பெருகச் செய்யட்டும். என் வாழ்க்கையில் உம்முடைய பெருகுதலின், பரிபூரணத்தின் ஆசீர்வாதத்தை ஊற்றுவீராக. ஆண்டவரே, எல்லாவற்றுக்கும் மேலாக, நீரே எப்போதும் எனக்கு பெரிய பொக்கிஷமாக விளங்கவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.