அன்பானவர்களே, "உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி, அதைக் கேட்டவுடனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார்" (ஏசாயா 30:19) என்ற வசனத்தை இன்றைக்கு தியானிப்போம்.
நான் கடந்துசெல்லும் பாடுகள் யாருக்காவது தெரியுமா என்று நீங்கள் அங்கலாய்க்கலாம். எனக்கு தலைவலிக்கிறது; இரவில் எனக்குள்ளே அழுகிறேன்; நான் என்ன செய்யட்டும்? வாழ்க்கையில் தடைகளை எப்படி மேற்கொள்ளப்போகிறேன்? என்று நீங்கள் புலம்பிக்கொண்டிருக்கலாம். அன்பானவர்களே, திடன்கொள்ளுங்கள்! உங்களுக்கு நம்பிக்கை உண்டு.
சீனாவில் கிளாடிஸ் யீல்வேர்ட் என்ற மிஷனெரியின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அவர்கள் சீனாவில் ஓர் அநாதை ஆசிரமத்தை நடத்தி வந்தார்கள். ஆசிரமத்தை ஒப்படைத்துவிட்டு சீனாவை விட்டு வெளியேறும்படி அதிகாரிகள் அவர்களிடம் கூறினார்கள். நம்பிக்கையற்ற, உதவியற்ற நிலையில் மனமுடைந்த அவர்கள் கட்டுப்படுத்த இயலாமல் கதறி அழுதார்கள். "ஆண்டவரே, என்ன செய்வதென்று தெரியவில்லை. தயவுசெய்து எனக்கு உதவி செய்யும்," என்று கூப்பிட்டார்கள். இந்த சிறுஜெபத்தை செய்துவிட்டு உறங்கிவிட்டார்கள்.
அடுத்தநாள் காலை, அரசு உயர் அதிகாரி ஒருவர் எதிர்பாராமல் கிளாடிஸை பார்க்க வந்தார். அதிகாரிகள் தங்கள் தீர்மானத்தை மாற்றிக்கொண்டதாக தெரிவித்தார். அநாதை ஆசிரமம் தொடர்ந்து இயங்கும்; கிளாடிஸ் தன் பணியை தொடரலாம் என்று அவர் கூறினார். தேவன், அவர் வாக்குப்பண்ணியபடியே, தன்னுடைய கண்ணீரின் ஜெபத்திற்கு பதில் அளித்தார் என்பதை அவர்கள் உணர்ந்து சந்தோஷமடைந்தார்கள்.
அன்பானவர்களே, அவ்வாறே தேவன் உங்கள்மேல் கிருபையாயிருக்கிறார். அவர் உங்கள் கண்ணீரை காண்கிறார்; உங்கள் ஜெபங்களுக்கு பதிலளிக்க ஆயத்தமாயிருக்கிறார். உங்கள் எல்லா விண்ணப்பங்களுக்கும் பாரங்களுக்கும் அவர் பதிலளிப்பார். உங்கள் ஜெபத்தைக் கேட்டு பதிலளிக்க தேவன் ஆயத்தமாயிருக்கிறார்; ஆகவே, என்னுடைய கூப்பிடுதலை யார் கேட்பார்கள் என்று நீங்கள் அங்கலாய்க்கவேண்டாம். நாம் விசுவாசிப்போம்; இப்போதே தேவன் செய்யும் அற்புதத்தைக் காண்போம்.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, இன்றைக்கு நீர் அன்புடன் கொடுத்துள்ள வாக்குத்தத்தத்திற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். என்னுடைய கண்ணீரை காண்பதாகவும், என் கூப்பிடுதலைக் கேட்பதாகவும் உறுதி கூறுவதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். எப்போதும் என் பட்சமாய் நிற்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் ஒருபோதும் என்னை விட்டு விலகமாட்டீர்; என்னை கைவிடமாட்டீர். எனக்கு உண்மையுள்ளவராக இருப்பதற்காகவும், என்னுடைய உபத்திரவங்களில் என்னை தேற்றுகிறதற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன். என்னுடைய கண்ணீருக்கு பதில் தருவதற்காக, அவற்றை உம்முடைய துருத்தியில் சேர்த்து வைத்து காத்திருக்கிறீர் என்பதை அறிந்திருக்கிறேன். கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் என்று உம்முடைய வசனம் கூறுகிறது. நீர் வாக்குத்தத்தங்களை காக்கிறவராயிருக்கிறபடியினால், என் துயரத்தின் கண்ணீரை களிகூருதலாகவும் ஆனந்த களிப்பாகவும் மாற்றுவீர் என்று விசுவாசிக்கிறேன். உம்முடைய அன்பின் கரங்கள் ஓர் அற்புதத்தைச் செய்வதை எதிர்நோக்கி, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.