அன்பானவர்களே, இன்றைக்கு உங்களை மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன். "உயரத்திலிருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார்" (சங்கீதம் 18:16) என்று வேதம் கூறுகிறது. ஜலப்பிரவாகம் என்பது கடல்போன்ற உபத்திரவங்களை குறிக்கிறது.

உபத்திரவம் நமக்கு எதிரிடும்போது, அது நம்மை எப்பக்கத்திலும் சூழ்ந்துகொண்டு, ஆழமான தண்ணீர்களுக்குள் அமிழ்ந்துபோனதுபோல நம்மை உணரச் செய்கிறது. "தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமாமட்டும் பெருகிவருகிறது" (சங்கீதம் 69:1) என்று தாவீது, தேவனை நோக்கிக் கூப்பிடுகிறான். தாவீதை விரோதிகள் சூழ்ந்துகொண்டனர். அவன் அமிழ்ந்துபோனதுபோல உணர்ந்தான். ஆனாலும், தேவன் அவனை கைவிடவில்லை. அவர், தாவீதை ஜலப்பிரவாகத்திலிருந்து தூக்கியெடுத்து, அமிழ்ந்துபோகாமல் அவனை காப்பாற்றினார். அதையே தாவீது, "மனுஷரை எங்கள் தலையின்மேல் ஏறிப்போகப்பண்ணினீர்; தீயையும் தண்ணீரையும் கடந்துவந்தோம்; செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர்" (சங்கீதம் 66:12) என்று கூறுகிறான். ஜலப்பிரவாகத்தின் மத்தியில் ஆண்டவர் இவ்வாறு நம் கரங்களைப் பற்றிக்கொள்கிறார்.

இயேசுவின் சீஷர்கள், கலிலேயா கடலில் இவ்வாறே நினைத்தனர். சீஷர்கள், கடலில் சென்ற சம்பவத்தை வேதத்தில் வாசிக்கிறோம் (மத்தேயு 8:23-27). சீஷர்கள் இயேசுவுடன் படகில் இருந்தபோது கடுங்காற்று மோதியது. சீஷர்கள் பயந்துபோய், "ஆண்டவரே, எங்களை காப்பாற்றும். நாங்கள் அமிழ்ந்துபோகிறோம்," என்று உறங்கிக்கொண்டிருந்த இயேசுவை எழுப்பினர். இயேசு உடனே எழுந்திருந்து, "அற்ப விசுவாசிகளே, ஏன் சந்தேகப்பட்டீர்கள்?" என்று அவர்களை கடிந்துகொண்டார். பிறகு அவர் கடலையும் காற்றையும் அதட்டினார். காற்று உடனே அமர்ந்தது.

அன்பானவர்களே, நீங்கள் வெள்ளத்தையும் உபத்திரவத்தையும் கடந்து சென்று கொண்டிருந்தால் மனந்தளராதிருங்கள்; பயப்படாதிருங்கள். உபத்திரவங்களின் மத்தியிலும் ஆண்டவராகிய இயேசு உங்கள் நடுவில் இருக்கிறார். அவர் உங்களை கரத்தை பற்றி, உங்களை ஆழமான தண்ணீர்களிலிருந்து தூக்கியெடுப்பார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, இந்த அருமையான வாக்குத்தத்தத்தைக் கொடுத்து என்னை உற்சாகப்படுத்துவதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். உம்முடைய வல்லமையான கரத்தை நீட்டி, ஜலப்பிரவாகத்திலிருந்து என்னை தூக்கியெடும். அனுதினமும் வேதனைக்குள் அமிழ்ந்துபோவதுபோல உணர்கிறேன். தயவாய் என்னை நினைத்தருளி, என்னை கீழே இழுக்கும் எல்லா சூழ்நிலையிலிருந்தும் என்னை தூக்கியெடுத்தருளும். என் வாழ்விலிருந்து எல்லா சாபமும் ஒடுக்குதலும் உம்முடைய வல்லமையுள்ள நாமத்தில் அகன்று போவதாக. தயவாய் என் கரத்தைப் பற்றி, எல்லா உபத்திரவங்களிலிருந்தும் என்னை விடுவித்தருளும். என் வாழ்வை முற்றிலுமாக சீர்ப்படுத்தும். உதவி கேட்டு நான் கூப்பிடுவதற்கு செவிகொடுத்து, ஓர் அற்புதத்தை செய்வதற்காக உம்மை ஸ்தோத்திரித்து, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.