அன்பானவர்களே, இன்றைக்கு உங்களை வாழ்த்துகிறதில் மகிழ்ச்சியடைகிறேன். ஆண்டவர் இயேசு நம்மை ஆசீர்வதிக்க எவ்வளவு வாஞ்சையாயிருக்கிறார் என்பதை நாம் இணைந்து தியானிப்போம். "கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்" (எபேசியர் 2:7)என்ற சத்தியத்தை வேதத்தில் வாசிக்கிறோம். அவருடன் அமர்வது எவ்வளவு பெரிய கனம்!

நமக்கு இந்த சிலாக்கியத்தை அருளிச்செய்வதற்காக, ஆண்டவர் தம்முடைய சொந்த நாமத்தை நமக்குத் தந்து, அவரோடு நாம் ஒன்றாகும்படி செய்தார். நாம் அவருடைய பிள்ளைகளாகும்படி தம்முடைய நாமத்தை நம்முடைய நெற்றிகளில் வைத்தார் என்று வேதம் கூறுகிறது. இயேசுவின் நாமத்தில், மிகுந்த கனமும் உயர்வும் கிடைக்கிறது. அவருடைய நாமத்தை தரித்தவர்களாய், நாம் கனமான இடத்திற்கு உயர்த்தப்பட்டு, உன்னதங்களில் அவருடன் அமர்த்தப்பட்டோம். இதற்காகவே, தேவன், கிறிஸ்துவுடன் நம்மை உயர்த்தினார். மனிதனுடைய பாவத்தின் விளைவுகளிலிருந்து அவர் நம்மை விடுவித்து, பாவங்களிலிருந்து நம்மை உயிர்த்தெழச்செய்து, அவருடன் இருக்கும்படி உயர்த்தினார். இயேசுவுடன் மகிமையில் ஒன்றாயிருக்கும்படி, உன்னதங்களில் உட்கார வைக்கப்பட்டோம். யோனாவின் வாழ்க்கையில் இந்த மாற்றத்தை காண்கிறோம். யோனா தீர்க்கதரிசி, தேவனுக்குக் கீழ்ப்படியாமல், தன்னுடைய சொந்த வழியில் செல்ல முடிவெடுத்தபோது, அவன் பாவத்தில் விழுந்தான். அதன் விளைவாக, அவன் கடலுக்குள் வீசப்படவும், ஒரு பெரிய மீனால் விழுங்கப்படவும் தேவன் அனுமதித்தார். ஆழத்தின் இருளுக்கும், யோனா தன் தவற்றை உணர்ந்து, "கர்த்தாவே, என்னை மன்னியும்," என்று கூப்பிட்டான்.  கர்த்தர் தம்முடைய இரக்கத்தினால் அவனை எழும்பப்பண்ணி, மீனுக்குள்ளிருந்து விடுவித்து, அவன் வாழ்வு மகிமைக்கு திரும்பும்படி செய்தார்.

யோனா, தேவனுக்குக் கீழ்ப்படிந்து சரியான வழியில் நடந்தபோது, கர்த்தர் அவனுக்கு பெரிய அதிகாரத்தைக் கொடுத்துக் கனப்படுத்தினார். நினிவேயின் ராஜாவும், ஜனங்களும் யோனாவின் வார்த்தைக்குப் பயப்பட்டனர். கர்த்தர் மகிமைப்படுத்திய தேவனுடைய தீர்க்கதரிசியின் செய்திக்கு ராஜாவே நடுங்கினான். யோனாவின் மூலம் தேவன் முழுப்பட்டணத்திற்கும் இரட்சிப்பை அளித்து, அவனுக்கு தெய்வீக அதிகாரத்தையும் உயர்ந்த ஸ்தானத்தையும் கொடுத்தார். தம்முடன் இருக்கும்படி தேவன் உங்களை உயர்த்தும்போது இப்படியே நடக்கிறது. அவர் தம் மகிமைக்கென்று உங்களை மறுரூபப்படுத்துகிறார்; கனப்படுத்துகிறார்; பெலப்படுத்துகிறார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என்னை கிறிஸ்து இயேசுவுடன் எழும்பப்பண்ணி, உன்னதங்களில் உட்காரப்பண்ணியதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்முடைய பரிசுத்த நாமத்தை என்மீது வைத்ததற்காகவும், உம்மோடு ஒன்றாய் இணைத்ததற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன். ஆண்டவரே, என்னை பாவத்திலிருந்து விடுவித்து, உம்முடைய நீதியில் நடக்கும்படி உயர்த்தும். எப்போதும் உம்முடைய நாமத்தின் கனத்தை சுமந்து, உம்முடைய சித்தத்திற்கு கீழ்ப்படிந்து நடக்க உதவி செய்யும். யோனாவைப்போல, என்னுடைய தவறுகளை நான் உணர்ந்து, மனந்திரும்பி உம்மிடம் வருவதற்கு உதவி செய்யும். உம்முடைய வார்த்தையை பேசும் தெய்வீக அதிகாரத்தை தந்தருளும். அதன் மூலம் மற்றவர்கள் மறுரூபமடையட்டும். அநேகரை உம்முடைய ராஜ்ஜியத்திற்குள் இழுக்கும்படி என் வாழ்க்கையில் உம்முடைய வல்லமையும் இரட்சிப்பும் விளங்குவதாக. நான் செய்கிற எல்லா காரியங்களிலும் உம்மை மகிமைப்படுத்தும்வண்ணம், உம்முடைய நோக்கத்தின்படி என்னை உயர்த்தவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.