எனக்கு அருமையான தேவ பிள்ளையே, இன்றைக்கு உங்களை வாழ்த்துகிறதில் மகிழ்ச்சியடைகிறேன். ஆண்டவர்தாமே தம்முடைய ஜீவனுள்ள வசனத்தினால் உங்களை அபரிமிதமாய் ஆசீர்வதிப்பாராக. "உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு" (சங்கீதம் 16:11) என்று வேதம் கூறுகிறது. தேவ மனுஷனாகிய மோசே, பல்வேறு பாரங்களினால் அழுத்தப்பட்டு மிகவும் மனக்கிலேசமடைந்தான். அந்த தருணத்தில் அவன் கர்த்தரை நோக்கிப் பார்த்தான். அப்போது, கர்த்தர் அவனை தேற்றும்வண்ணம், "என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன்" (யாத்திராகமம் 33:14) என்று வாக்குப்பண்ணினார்.
அன்பானவர்களே, நீங்களும் மோசேயைப்போல மனக்கிலேசமடைந்திருக்கிறீர்களா? வாழ்வின் பிரச்னைகளால் கலங்கிப்போயிருக்கிறீர்களா? தேவனுடைய சமுகம் உங்களுக்கு முன் செல்லும் என்று வேதம் உறுதியாகக் கூறுகிறது. "என் மகனே, நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன்," என்று ஆண்டவர்தாமே வாக்குப்பண்ணுகிறார். நாமும், மோசேயைப்போல கர்த்தரை நோக்கிப் பார்க்கவேண்டும். மோசே, தேவ சமுகத்தில் பல மணி நேரம், நாள்கணக்கில் இருந்து தன்னுடைய இருதயத்தை அவர் முன் ஊற்றினான். கர்த்தர், மோசேயின் முன்னே சென்று, இஸ்ரவேல் ஜனங்களை எல்லா இக்கட்டுகளிலிருந்தும் விடுவிப்பதற்கு உண்மையுள்ளவராயிருந்தார். தேவ சமுகத்தில் பரிபூரண ஆனந்தம் உண்டு (சங்கீதம் 16:11) என்று வேதம் நமக்கு நினைவுப்படுத்துகிறது. அவ்வாறே, "மனுஷருடைய அகங்காரத்துக்கு அவர்களை உமது சமுகத்தின் மறைவிலே மறைத்து, நாவுகளின் சண்டைக்கு அவர்களை விலக்கி, உமது கூடாரத்திலே ஒளித்துவைத்துக் காப்பாற்றுகிறீர்" (சங்கீதம் 31:20) என்று தேவ பாதுகாப்பைக் குறித்து வேதம் கூறுகிறது.
எங்கள் குடும்பத்திலும் பலவித போராட்டங்களை நாங்கள் சகித்தோம். குறிப்பாக, எங்கள் அருமை மகள் இவாஞ்சலினை 17 வயதில் இழந்தோம். எங்கள் நம்பிக்கை, சந்தோஷம், நாங்கள் வாழ்வதற்கான காரணம் எல்லாமே முடிந்துபோனதுபோல் இருந்தது. இருதயங்களை துக்கம் பிடித்துக்கொண்டது; எப்போதும் அழுதுகொண்டே இருந்தோம். ஒருநாள், காலை 6 மணிக்கு நாங்கள் வழக்கம்போல குடும்ப ஜெபம் செய்தபோது, முன் எப்போதும் இல்லாதவண்ணம் தேவ சமுகம் எங்கள்மேல் இறங்கியது. தேவ வல்லமை எங்கள் அனைவரையும் நிறைத்தது. உடனே எங்கள் துக்கம் சந்தோஷமாக மாறியது. "சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூர்ந்து..." (1 பேதுரு 1:8) என்று வேதம் கூறுவதுபோல, நாங்கள் மகிழ்ச்சியில் சிரிக்கத் தொடங்கினோம், அல்லேலூயா! அப்போது, "என் பிள்ளைகளே, உங்கள் வேதனையை நான் அறிவேன். இவ்வேளையில் என்னை நீங்கள் விட்டுவிடுவீர்களா? தொடர்ந்து என் பணியை செய்வீர்களா? இல்லை என்னை விட்டு விலகிவிடுவீர்களா?" என்று கேட்கும் தேவ சத்தம் எங்கள் செவிகளில் விழுந்தது. நாங்கள் அனைவரும் ஒருமித்து அழுது, "ஆண்டவரே, உம்மை விட்டால் நாங்கள் எங்கே செல்ல முடியும்? நீர் மாத்திரமே எங்கள் நம்பிக்கையும் சந்தோஷமுமாய் இருக்கிறீர்," என்று கூறினோம். அந்த தருணத்திலிருந்து ஆண்டவர் எங்களை புதிய நம்பிக்கையால் நிரப்பினார்; அவருடைய சித்தத்தை செய்வதற்கு நாங்கள் மறுபடியுமாய் எங்களை அர்ப்பணித்தோம்.
வாழ்வின் கவலைகள், போராட்டங்கள் உங்களை அழுத்துகின்றனவா? ஆண்டவர் உங்களை பரிசுத்த ஆவியினால் நிரப்புவார். சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமான சந்தோஷத்தை அவர் தந்து, புதிய வாசல்களை திறப்பார். நாம் சேவிக்கும் தேவன் எவ்வளவு மகத்துவமானவர்! எவ்வளவு உண்மையுள்ளவர்!
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, சொல்லிமுடியாத சந்தோஷத்தையும், சமாதானத்தையும் நீர் தருவீர் என்று உம்முடைய சமுகத்திற்கு வருகிறேன். எனக்கு முன்னே சென்று, இளைப்பாறுதலை தருவதாக வாக்குப்பண்ணுகிறதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்மேல் கண்களை வைக்கவும், உம்மையே முழுவதுமாய் நம்புகிறதற்கும் எனக்குக் கற்பித்தருளும். உம்முடைய சமுகத்தின் மறைவிடத்தில் என்னை காத்தருளும். என்னை அழுத்துகிற எல்லா கவலைக்கும் போராட்டத்திற்கும் என்னை மறைத்துக் காத்துக்கொள்ளும். உம்முடைய சமுகத்தின் சொல்லிமுடியாத சந்தோஷத்தினாலும், மகிமையினாலும் என்னை நிறைத்தருளும். உம்முடைய சித்தத்தை நிறைவேற்றும்படி என் நம்பிக்கையை உயிர்ப்பித்து என் விசுவாசத்தை பெலப்படுத்தியருளும். பரிசுத்த ஆவியானவரே, என்னை வழிநடத்தி, புதிய வாசல்களை திறந்தருளும். என் வாழ்வில் நீர் உண்மையுள்ள தேவனாயிருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.