அன்பானவர்களே, "நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது" (மத்தேயு 5:14) என்று வேதம் கூறும் வசனத்தை இன்றைக்கு தியானிக்கிறோம். "அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது" (யோவான் 1:4) என்றும் வேதம் கூறுகிறது. நம்மால் சுயமாக ஒளிவீச இயலாது; ஒளியானது தேவனிடமிருந்து வருகிறது. அடுத்த வசனம், "அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை" என்று கூறுகிறது. உலகம் இருளுக்குள் கிடக்கிறது. நாம் தேவனுடைய ஜீவனால் நிரப்பப்படும்போது, நம்மைச் சுற்றியிருக்கும் இருளை விரட்டிவிட்டு, தேவனுடைய மகிமைக்காக ஒளிவீச ஆரம்பிக்கிறோம். சவுல், இருளுக்குள் இருந்து கிறிஸ்தவர்களை துன்புறுத்தினான். ஆனால், இயேசு அவனை சந்தித்தபோது, பரலோகத்திலிருந்து, சூரிய ஒளியைக் காட்டிலும் அதிகமான வெளிச்சம் தன்னைச் சுற்றிலும் பிரகாசிப்பதைக் கண்டான். அந்தத் தருணத்தில் தேவன் அவனை தொட்டார்; அவன் ஜனங்களுக்கு ஊழியம் செய்ய தொடங்கினான். அவன் அதிகமாக ஊழியம் செய்ய செய்ய, தேவனுடைய வெளிச்சம் அவன்மேல் அதிகமதிகமாய் பிரகாசிக்கத் தொடங்கியது. ஆம், தேவன் நாமும் அப்படி இருப்பதையே விரும்புகிறார்.

"இறைக்கிற கிணறுதான் ஊறும்," என்று ஒரு தமிழ்ப் பழமொழி கூறுகிறது. கிணறு வற்றாமல் தண்ணீர் சுரந்துகொண்டே இருக்கும். அவ்வாறே, எந்த அளவுக்கு அதிகமாக நாம் ஆண்டவருடைய நற்செய்தியை பகிர்ந்துகொள்கிறோமோ அந்த அளவுக்கு அவருக்காக பிரகாசிப்போம். நற்செய்தியை அறிவிப்பதற்கு மாத்திரம் நாம் அழைக்கப்படவில்லை; முடிந்த அளவு எல்லா வழிகளிலும் அவருக்கு ஊழியம் செய்யவேண்டும். நாம் மற்றவர்களிடம் கரிசனை காட்டலாம்; நம்முடைய சாட்சியை பகிர்ந்துகொள்ளலாம்; சிறிய வழிகளிலாவது ஆண்டவருடைய ஒளியை பிரதிபலிக்கலாம். வேதாகமம் யோவான்ஸ்நானனைக் குறித்து இப்படித்தான் கூறுகிறது. "அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்" (யோவான் 5:35) என்று இயேசுதாமே கூறியிருக்கிறார். தேவனின் வெளிச்சத்தினால் அவன் பிரகாசமாக எரிந்தான். ஆம், நம்மில் காணப்படும் ஒளியானது, நம்மிடமிருந்து பிரகாசிப்பதில்லை; அது தேவ மகிமையின் பிரதிபலிப்பாக இருக்கிறது.

அன்பானவர்களே, நீங்கள் தனியே இல்லை. கிறிஸ்துவே மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருக்கிறார். அவரது ஒளியை நாம் வீசும்படி ஆண்டவர் செய்கிறார். "எழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது. உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள்" (ஏசாயா 60:1,3) என்று வேதம் கூறுகிறது. இன்றைக்கும் தேவ ஒளி உங்கள்மேல் பிரகாசிக்கும். நமக்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஜெப கோபுரங்கள் இருக்கின்றன. அவற்றை ஜனங்களுக்கான கலங்கரை விளக்கம் என்றே அழைக்கிறோம். அவை அநேகரை தேவனண்டை இழுக்கின்றன. இந்த வெளிச்சம் ஜெபத்தின் மூலமாக தூண்டப்படுகிறது. ஜெபத்தை நாடி வருகிறவர்கள், தேவனிடமிருந்து அற்புதங்களை பெறுகின்றனர்; பின்னர் அவர்களே மற்றவர்களுக்காக ஜெபிக்க தொடங்குகின்றனர். இயேசுவின் ஜீவன் அவர்களுக்குள் பிரவேசிக்கிறது; அவருடைய வெளிச்சத்தை அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். ஆகவேதான் அவர்கள் தைரியமாக முன்வந்து, முழு பெலத்துடன் ஆண்டவருக்காக பிரகாசிக்கின்றனர். நீங்களும் அவர்களுள் ஒருவராக முடியும்.

இன்றும், தேவனுடைய வெளிச்சத்தை பெற்றுக்கொள்ள உங்கள் இருதயத்தை ஆயத்தப்படுத்துங்கள். "கெம்பீரசத்தத்தை அறியும் ஜனங்கள் பாக்கியமுள்ளவர்கள்; கர்த்தாவே, அவர்கள் உம்முடைய முகத்தின் வெளிச்சத்தில் நடப்பார்கள்" (சங்கீதம் 89:15) என்று வேதம் கூறுகிறது. நீங்கள் தேவனுடைய முகத்தை தரிசிக்கக்கூடும்; மெய்யாகவே உலகத்திற்கு வெளிச்சமாக மாற முடியும்.

ஜெபம்:
பரம தகப்பனே, உலகத்திற்கு வெளிச்சமாக இருக்கும்படி என்னை அழைப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்முடைய மகிமைக்கென்று நான் பிரகாசிக்கும்படி என்னை உம்முடைய ஜீவனால் நிரப்பும். என்னைச் சுற்றிலுமிருக்கும் இருளை விலக்கி, உம்முடைய அன்பின் பாத்திரமாக என்னை மாற்றும். உம்முடைய நாமத்தை நான் தைரியமாக அறிவிக்கும்படி சவுலின் வாழ்க்கையை மாற்றியதுபோல என்னையும் மாற்றும். உம்முடைய நற்செய்தியை பகிர்ந்துகொள்ளவும், மகிழ்ச்சியான உள்ளத்தோடு உம்மை சேவிக்கவும் எனக்கு உதவி செய்யும். யோவான்ஸ்நானன் உமக்காக எரிந்து பிரகாசித்ததுபோல, என் வாழ்வும் உம்முடைய தெய்வீக வெளிச்சத்தை பிரதிபலிக்கட்டும். நான் அனுதினமும் உம்முடைய சமுகத்தின் வெளிச்சத்தில் நடக்கவும், அநேகரை உம்மண்டை இழுக்கவும் உதவி செய்யும். அநேகரை உம் மந்தைக்கு நேராய் வழிநடத்தும்படி, என்னை நம்பிக்கையின் கலங்கரைவிளக்கமாய் மாற்றும். என்னையே உமக்கு அர்ப்பணிக்கிறேன். என் மூலமாக நீர் பிரகாசிக்கவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.