அன்பானவர்களே, "தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?" (ரோமர் 8:31) என்பதே இன்றைய வாக்குத்தத்தம். இந்த வசனம் கூறுகிறபடி, ஆண்டவர் உங்களோடு கூட இருக்கிறார்; அவர் உங்கள் பட்சத்தில் இருக்கிறார். தேவன் உங்கள் பட்சத்தில் இருந்தால், யார் உங்களுக்கு விரோதமாக இருக்க முடியும்?

ஆண்டவர் தம்முடைய இரத்தத்தினால் உங்களை கிரயத்துக்குக் கொண்டிருப்பதால் நீங்கள் அவருக்குச் சொந்தமானவர்களாயிருக்கிறீர்கள். அவர் தம்முடைய உள்ளங்கைகளில் உங்களை வரைந்திருக்கிறார். அவர் உங்களை எப்போதாவது மறப்பாரா? மக்கள் உங்களுக்கு விரோதமாய் யுத்தம் செய்யலாம்; ஆனால், ஆண்டவர் உங்கள் பட்சத்தில் இருப்பதால், அவர்களால் உங்களை ஜெயிக்க இயலாது. இன்றைக்கு அவர், "நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன். வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்" (ஏசாயா 45:2,4) கூறுகிறார். அவர் உங்களுடன் இருக்கிறபடியால், "என் பிள்ளையே, ஒருவரும் உனக்கு எதிராக வந்து உன்னை மேற்கொள்ள முடியாது," என்று உங்களுக்கு வாக்குக்கொடுக்கிறார். ஆகவே, பயப்படாதிருங்கள்.
புவனேஸ்வரி என்ற சகோதரி தன்னுடைய சாட்சியை இவ்வாறு பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்: அவர்களுடைய கணவரின் நண்பர் ஒருவர், ஆரம்பத்தில் நல்லவர்போல நடந்து கொண்டிருக்கிறார். ஆனால், அவருடைய கணவருக்கு கடனாக கொடுத்த சிறுதொகைக்காக கோடிக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள அவர்களுடைய வீட்டை உத்திரவாதமாக எடுத்துக்கொண்டிருக்கிறார். பிறகு அவர் அந்த வீட்டை சொந்தம் கொண்டாடி, அவர்களை வெளியேற்றி இருக்கிறார். இதனால் மனமுடைந்த அவர்கள், நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறார்கள்; ஆனால், சட்டப்போராட்டம் 20 ஆண்டுகள் நீண்டிருக்கிறது. இந்த காலகட்டத்தில் அவர்கள் கணவர் மரித்துபோய்விட்டார்.

அப்போது, அவர்கள் பட்டணத்தில் இருக்கும் இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்திற்குச் செல்லும்படி யாரோ ஒருவர் அவர்களுக்கு ஆலோசனை கூறியிருக்கிறார். அவர்கள், செவ்வாய்க்கிழமைதோறும் நடக்கும் உபவாச ஜெபத்தில் பங்குபெற்று, வீட்டை திரும்பப் பெற்றுக்கொள்ளும்படி, அதற்கு இருக்கும் தடைகளை உடைக்குமாறு தேவனை நோக்கி முறையிட்டிருக்கிறார்கள். உடனடியாக அற்புதம் நடந்துள்ளது! அவர்களுக்கு முன்பின் தெரியாத வழக்கறிஞர் ஒருவர், அந்த வழக்கை தாம் நடத்துவதாக முன்வந்துள்ளார். அவர் வழக்கை நடத்தியுள்ளார்; நீதிபதி, சகோதரி புவனேஸ்வரிக்கு சாதகமாக தீர்ப்பு கூறியுள்ளார். அவர்கள் வஞ்சித்த மனிதர், கொஞ்சம் தொகைக்கு அந்த வீட்டை திரும்ப கொடுக்கிறேன் என்று வந்திருக்கிறார். அந்த வீட்டை மீட்டு, அவர்கள் அதில் வசித்து வருகிறார்கள். அன்பானவர்களே, எவ்வளவு ஆச்சரியமான சாட்சி! தேவன் நம் பட்சத்தில் இருந்தால், யாரால் நமக்கு விரோதமாக இருக்க முடியும்?

ஜெபம்:
பரம தகப்பனே, நீர் கொடுத்த அருமையான வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். யாருடைய அன்பைக் காட்டிலும் உம்முடைய அன்பு பெரிதானதும் வலிமையானதுமாயிருக்கிறது. உம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் நீர் என்னை கிரயத்துக்குக் கொண்டு, என்னை உமக்குச் சொந்தமாக்கிக்கொண்டிருக்கிறீர். உமக்குத் தெரியாமல் என் வாழ்வில் ஒன்றும் நடக்காது. ஆண்டவரே, நீர் வாக்குப்பண்ணியுள்ளபடி, நீர் என்னுடன் இருப்பதை அனைவருக்கும் காண்பியும். நான் கடந்து செல்லும் இந்தப் போராட்டத்தில், வெற்றியடைவதற்கு, எனக்காக யுத்தஞ்செய்து உதவும். ஆண்டவரே, எனக்கு முன்னே சென்று, கோணலான பாதையை செவ்வையாக்கும். நீர் என்னோடிருந்து எப்போதும் என்னை கண்ணோக்குகிறபடியினால், ஒன்றும் என்னைச் சேதப்படுத்தமாட்டாது என்று விசுவாசிக்கிறேன். நீர் என் பட்சத்தில் நின்று எனக்காக யுத்தம்பண்ணுகிறபடியினால் உமக்கு நன்றி செலுத்தி, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.a