அன்பானவர்களே, இன்றைக்கான வாக்குத்தத்த வசனம், "கர்த்தர் உங்கள் இருதயங்களை தேவனைப்பற்றும் அன்புக்கும் கிறிஸ்துவின் பொறுமைக்கும் நேராய் நடத்துவாராக" (2 தெசலோனிக்கேயர் 3:5) என்று கூறுகிறது. பொறுமையோடு, வேண்டிய கடமைகளைச் செய்து தம்மைச் சேவிக்கும்படியும், உறுதியாய் தம்மைப் பற்றிக்கொள்ளும்படியும் உங்கள் இருதயத்தை தமது அன்பை நோக்கி, தேவன் வழிநடத்துவார் என்பதே இதன் பொருளாகும்.

மற்றவர்களை நேசிக்கும் திறனையே இழந்துபோனேன் என்று நீங்கள் கூறலாம். மனைவியோடு எப்போதும் சண்டையிட்டதால், அவளையோ என் குடும்பத்தினரையோ நேசிப்பது சிரமம் என்றோ, என் வியாபார பங்குதாரர் செய்த துரோகத்தினால் யாரையும் நம்புவதும், நேசிப்பதும் கடினமாக இருக்கிறது என்றோ நீங்கள் கூறலாம். எனக்கு அருமையானோரை இழக்கக்கொடுத்ததால் எப்போதும் எரிச்சலாக இருக்கிறேன்; என் இருதயம் கடினப்பட்டு மூடிக்கிடக்கிறது என்றும் சொல்லாம்.

என் தாத்தாவை, இயேசு முதன்முதலாக சந்தித்து அவரை இரட்சித்தபோது, "தினகரன், இது மனுஷருடைய இருதயம். இது கடினமானது. ஆனால், இன்றிலிருந்து நான் உனக்கு, அன்பும் மனதுருக்கமும் கொண்ட அனைவரையும் நேசிக்கக்கூடிய புதிய இருதயத்தை தருகிறேன். நீ போய் என் மக்கள் மீது அன்பு காட்டு," என்று கூறினார். அன்றிலிருந்து கிருபை எங்களுக்குள் வந்தது. என் தந்தை, காலையிலிருந்து மாலை வரை நின்றுகொண்டே, ஜனங்கள்மேல் அன்பு கொண்ட இருதயத்தால், ஆயிரக்கணக்கானோருக்கு ஊழியம் செய்கிறார். அவர் அலுவலகத்தில் இருந்து வேலை செய்துகொண்டிருக்கும்போது யாருக்காவது அவசரமாக ஜெப உதவி தேவைப்பட்டால், அந்த தொலைபேசி அழைப்புக்கு பதிலளிக்க அல்லது அவர்களை சந்திக்க அல்லது தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள ஓடுவார். அதிகமான வேலை அவருக்கு இருந்தாலும், குடும்பத்தில் அனைவர்மீதும் அன்பு காட்டி, எங்களுக்கு வேண்டியவற்றை கவனிக்கிறார். 

அன்பானவர்களே, தேவன் உங்களை தமது அன்பை நோக்கி வழிநடத்துகிறார்; அந்த அன்பிலிருந்து மக்கள் மீதான அன்பும் அக்கறையும் உருவாகிறது. இன்றைக்கு, இயேசுவின் அன்பை பெற்றுக்கொள்ள நம் இருதயத்தை திறப்போமா?

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நான் கடின இருதயம் உள்ளவனா(ளா)க இருக்காதபடி என்னை நடத்தும். நீர் கட்டளையிட்டுள்ளபடி மற்றவர்கள்மேல் அன்புடன் இருந்தால் மட்டுமே அவர்களை என்னால் பராமரிக்க முடியும் என்று அறிந்திருக்கிறேன். எனக்காக மட்டுமே வாழ்வதற்கு நான் விரும்பவில்லை. ஆண்டவரே, தயவுசெய்து என் இருதயத்தை திறந்து, உம்முடைய அன்பினால் நிரப்பும். நீர் வாக்குப்பண்ணியுள்ளபடியே, என் இருதயத்தை உம்முடைய அன்புக்கு நேராக நடத்தும். நீர் ஆழமான அன்பின் காரணமாகவே எனக்காக சிலுவையில் பாடுபட்டு மரித்தீர். உம்முடைய அன்பை நான் பெற்றுக்கொண்டு, மற்றவர்கள்மேல் அன்பாயிருக்க எனக்கு உதவி செய்யும். உம்முடைய அன்பின் ஐசுவரியத்தாலும் ஜூவாலையினாலும் என்னை நிரப்பும். நான் தொடர்ந்து உமக்கு ஊழியம் செய்வதில் உறுதியாயிருக்க உதவி செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.