அன்பானவர்களே, இன்றைக்கு உங்களை மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன். "பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்" (அப்போஸ்தலர் 1:8) என்ற வசனத்தை நாம் தியானிப்போம். ஆம், அன்பானவர்களே, இந்த வல்லமை உங்களுக்கு வேண்டுமா? இயற்கைக்கு அப்பாற்பட்ட பெலன் உங்களை நிரப்பவேண்டுமென்று வாஞ்சிக்கிறீர்களா? உங்கள் வாழ்வுக்குள் வரும்படி இன்றைக்கு பரிசுத்த ஆவியானவரை அழைத்தால், தேவ வல்லமை உங்கள்மேல் இறங்கும். வேதாகமத்தில், பேதுருவின் வாழ்வில் இப்படியே நடந்தது. அவன் பயமும் சந்தேகமும் நிறைந்த சாதாரண மீனவனாக இருந்தான். அவன் இயேசுவின் சீஷனாக இருந்தாலும், இக்கட்டான சூழ்நிலைகளை கண்டால் ஓடிப்போகிறவனாக இருந்தான். இயேசுவுடன் இருந்தவன் என்று கூறப்பட்டபோது, அவரை மூன்று முறை மறுதலித்தான். எதிர்ப்புகளுக்கு அஞ்சினான்; பயந்தவனாய் இருந்தான்.
இருந்தாலும் பேதுருவின் வாழ்க்கை எப்படி முற்றிலுமாய் மாறியது என்பதை நாம் பார்க்கிறோம். தேவன், பெந்தெகொஸ்தே நாளில் தம்முடைய ஆவியை சீஷர்கள்மேல் ஊற்றியபோது, பேதுரு முன்பு இருந்ததைப் போல இருக்கவில்லை. அவன் இயேசுவின் தைரியமான சேவகனாய், முன்னணியில் நின்று அவருடைய நாமத்தை அறிவித்து, அடையாளங்களையும் அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்தான். "எது வந்தாலும் நான் பயப்படமாட்டேன். இயேசுவுக்காக நிற்பேன்," என்று அவன் தைரியமாக கூறினான். தேவ வல்லமை அவன்மேல் வந்தது; நடக்க இயலாத மனுஷன் எழுந்து நடந்தான். பேதுருவின் நிழல்கூட ஜனங்களுக்கு சுகத்தை அளித்தது; அற்புதங்களை நடப்பித்தது. ஆம், அவன் ஊழியம் முற்றிலுமாய் மாறியது.
அவ்வாறே, தேவன் உங்களை வாழ்வை மாற்றுவார். "எனக்குப் பயமாக இருக்கிறது. நான் கோழை. கூச்சசுபாவமுள்ளவன்(ள்). ஆண்டவரால் பயன்படுத்தப்படுவதற்கு எந்த தகுதியும் எனக்கு இல்லை" என்று கூறுகிறீர்களா? இன்றைக்கு தேவன் தம்முடைய ஆவியை உங்கள்மேல் ஊற்றுகிறார்; நீங்கள் அவருடைய வல்லமையினால் நிரப்பப்படுவீர்கள். நீங்கள் பெலப்படுத்தப்படுவீர்கள்; தேவ ஞானத்தினால் நிரப்பப்படுவீர்கள்; விசுவாசத்தில் முன்னேறும்படி திடநம்பிக்கை பெறுவீர்கள். தேவனுடைய வல்லமையால் அடையாளங்களையும் அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்வீர்கள்.
நீங்கள் மனதுக்குள் செய்யும் சிறு ஜெபத்திலும், செய்யும் சிறுஊழியத்திலும் தெய்வீக வல்லமை நிறைந்திருக்கும். பரிசுத்த ஆவியானவர் உங்கள் மூலமாய் கிரியை செய்வார். ஜனங்கள் உங்களில் ஒரு வித்தியாசத்தை காண்பார்கள். ஆகவே, இன்று வல்லமையை பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் இருதயத்தை திறந்து, உங்களுக்குள் வரும்படி பரிசுத்த ஆவியானவரை அழைத்திடுங்கள்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, இன்றைக்கு உம்முடைய பிரசன்னத்தை எனக்குள் கொண்டிருக்கும் அருமையான சிலாக்கியத்தை அருளிச்செய்வதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். பெந்தெகொஸ்தே நாளில் உம்முடைய ஆவியை சீஷர்கள்மேல் ஊற்றியதுபோல, இப்போது உம்முடைய ஆவியை என்மீது ஊற்றவேண்டுமென்று ஜெபிக்கிறேன். ஆண்டவரே, என்னை உம்முடைய வல்லமையினால் நிரப்பும். எனக்குள் இருக்கும் பெலவீனமெல்லாம் மறைந்துபோகட்டும். எனக்குள் இருக்கும் பயம், பாதுகாப்பில்லாததுபோன்ற உணர்வு, நானே வெட்கப்படக்கூடிய என் சுபாவம் எல்லாவற்றையும் உம்மிடம் அர்ப்பணிக்கிறேன். ஆண்டவரே, என் வாழ்க்கையை தலைகீழாக மாற்றும். என் வார்த்தைகள், செய்கைகள், நான் செய்யும் சிறுஊழியம் எல்லாவற்றிலும் உம்முடைய தெய்வீக வல்லமை நிறைந்திருப்பதாக. நீர் உண்மையுள்ளவராயிருப்பதற்காக நன்றி செலுத்துகிறேன். இன்றைக்கு உம்முடைய பரிசுத்த ஆவியை, உம்முடைய பெலனை, உம்முடைய ஞானத்தை பெற்றுக்கொள்கிறேன். நீர் எனக்கென்று வைத்திருக்கிற எல்லாவற்றையும் பெற்றுக்கொள்கிறேன். என் வாழ்க்கை உமக்கு மகிமையை கொண்டுவருவதாக இருக்கவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.