அன்பானவர்களே, "உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்" (1 யோவான் 4:4) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்தமாகும். இரண்டு நபர்கள் கிரியை செய்கிறார்கள்; உலகத்திலிருக்கிறவனிலும் இன்னொருவர் பெரியவராயிருக்கிறார். உலகத்திலிருக்கிறவன் பிசாசு. அவன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வந்தவன் என்று வேதம் கூறுகிறது (யோவான் 10:10). பாவம், பூமியின்மேலும் அநேகர் வாழ்வின்மேலும் பிசாசுக்கு அதிகாரம் கொடுத்திருப்பதால், உலகத்தில் நாம் உபத்திரவங்களை எதிர்கொள்ளநேரிடும் என்று இயேசு எச்சரித்துள்ளார் (யோவான் 16:33).

பாவத்தின் சம்பளம் மரணம் என்று வேதம் கூறுகிறது (ரோமர் 6:23). இதனால், சாத்தான், இருளை, பயத்தை, அழிவை பரப்பி, மக்களிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பறித்துகொள்கிறான். நம் உள்ளத்தை திறந்து, ஜீவனை தருகின்ற இயேசுவை  உள்ளே வரும்படி நாம் அழைக்கும்போது எல்லாமே மாற்றமடைகிறது. பூரண தேவனான இயேசு, மாம்ச ரூபமெடுத்து வந்து நம் பாவங்களை தம்மேல் ஏற்றுக்கொண்டார். அவர் முற்றிலும் பரிசுத்தராய் இருந்தாலும், நமக்கான தண்டனையை அவர் சுமந்து, சிலுவையில் பாடுபட்டார். அவருடைய பாவங்களுக்காக அல்ல; நம்முடைய பாவங்களுக்காக அப்படி செய்தார். நாம் இருக்கவேண்டிய இடத்தில் அவர் சாபமாகி, பாவத்தின் சம்பளமான மரணத்தை எதிர்கொண்டார். ஆனால், அவர் தேவனானபடியினால், மரணத்தால் அவரை வைத்திருக்க முடியாது; அவருடைய ஆவியானவர் மூன்றாம் நாளில் அவரை எழுப்பினார். அவர் மரணத்தையும் சாவையும் ஜெயித்து, இன்றும் ஜீவிக்கிறார். உங்களுக்குள் வந்து, தம்முடைய பிள்ளையாக, பரிசுத்தமாகவும், தேவனுக்கு ஏற்றவராகவும் உங்களை வாழப்பண்ணவுமே அவர் ஜீவனோடிருக்கிறார். இருளின் அதிகாரத்தை நசுக்கி, பாவத்தின் சாபத்தை நொறுக்கிய இயேசு இப்போது உங்களுக்குள் வாசம்பண்ணுகிறார். ஆத்துமாவுக்குக்கும், உறவுகளுக்கும், அனுதின வாழ்க்கைக்கும் மரணத்தை கொண்டு வரும் பிசாசைக் காட்டிலும் அவர் பெரியவராயிருக்கிறார். இயேசு உங்களுக்கு வெற்றியை தந்து, எல்லா சாபத்திலிருந்தும் உங்களை விடுவித்து, முற்றும் ஜெயங்கொள்ளும்படி செய்கிறார்.

இன்றைக்கு அவர் உங்கள் இருதயத்தின் வாசலண்டை உங்களுக்காக காத்து நின்றிருக்கிறார். உங்கள் இருதயத்தை திறந்து, "இயேசுவே, என் உள்ளத்திற்குள் வாரும். எனக்குள் தங்கியிரும்," என்று கூறுங்கள். அவர், "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" என்று அன்புடன் அழைக்கிறார். அவருடைய சத்தத்தைக் கேட்டு உங்கள் இருதயத்தை திறந்தால், அவர் உள்ளே பிரவேசித்து, உங்களுக்குள் வாசம்பண்ணுவார். கிறிஸ்து உங்களுக்குள் இருக்கும்போது, இருளின் எந்த வல்லமையும் உங்களை மேற்கொள்ள முடியாது. அவர் உங்களை முற்றும் ஜெயங்கொள்ளுகிறவராக மாற்றுவார். தேவன், உங்களோடு இருக்கவேண்டுமல்லவா? அதற்கு இயேசுவே வழியாயிருக்கிறார். இன்றைக்கு உங்கள் இருதயத்தை அவருக்கு திறந்திடுங்கள்.

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, என் வாழ்வில் உம் பிரசன்னம் விளங்கவேண்டும் என்று தாழ்மையுள்ள இருதயத்துடன் உம்மிடம் வருகிறேன். இருளின் வல்லமையைக் காட்டிலும் ஆண்டவர் இயேசு பெரியவர் என்று விசுவாசிக்கிறேன். தயவுசெய்து வந்து எனக்குள் வாசம்பண்ணும். என் பாவங்களை உம்மேல் ஏற்றுக்கொண்டு, எனக்காக மரித்து, வெற்றியுடன் மறுபடியும் எழுந்ததற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, உம்மிடமிருந்து என்னை பிரிக்கும் பாவத்தை சுத்திகரித்து, உமக்கு முன்பாக நான் பரிசுத்தமாகக் காணப்பட உதவும். சத்துருவானவன் கூறும் பொய்களை தள்ளி, உம்முடைய சத்தியத்தின் விடுதலையிலும், வெளிச்சத்திலும் நடக்க தீர்மானிக்கிறேன். நான் அனுதினமும் உம்முடைய உயிர்த்தெழுதலின் வல்லமையுடன் வாழும்படி, என்னை உம்முடைய ஆவியினால் நிரப்பும். நான் உம்மோடு நடப்பதைத் தடுக்கிற எல்லா சாபத்தையும், சங்கிலியையும், அரண்களையும் உடைத்தருளும். எனக்குள் இருக்கும் பயத்தை அகற்றி உம்முடைய சமாதானத்தினால் நிரப்பும்; எனக்குள் இருக்கும் சந்தேகங்களை உம்முடைய அன்பு அகற்றுவதாக. என் வாழ்க்கையை உம்மிடம் ஒப்படைக்கிறேன். நீரே என் ஆண்டவராக, இரட்சகராக, அநுகூலமான துணையாக இருப்பீராக. என்னை முற்றும்ஜெயங்கொள்ளுகிறவனா(ளா)க மாற்றுவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். எப்போதும் உம்மையே நம்பி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.