அன்பானவர்களே, "அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்" (அப்போஸ்தலர் 17:28)என்று வேதம் நமக்கு நினைவுப்படுத்துகிறது. இன்றைக்கு நீங்கள், "நான் எப்படி வாழ்வேன்?" என்று திகைத்துப் போயிருக்கலாம். ஒருவேளை, உங்களுக்கு வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லாமல் இருப்பதாக நீங்கள் நினைக்கலாம். மனச்சோர்வு, பயம், வேதனை மற்றும் சந்திக்கப்படாத தேவைகளின் மத்தியில் இந்த நாளை எப்படி எதிர்கொள்வது என்று நீங்கள் அங்கலாய்த்துக் கொண்டிருக்கலாம். எல்லாமே தோல்வியாக இருப்பதுபோலவும், எதிர்காலம் பிரகாசமாய் இல்லாததுபோலவும் தோன்றலாம். ஆனாலும், "நீ இயேசுவுக்குள் பிழைத்திருப்பாய்," என்ற நிச்சயத்தை இந்த வசனம் நமக்கு தருகிறது. உங்கள் வாழ்க்கையை இயேசுவின் கரங்களில் நீங்கள் கொடுக்கும்போது, உங்களை அவரிடம் ஒப்படைக்கும்போது, உங்கள் வாழ்வு நம்பிக்கையும், பெலனும், நோக்கமும் நிறைந்ததாக மாறும். அவருக்குள் நீங்கள் பிழைப்பீர்கள். மட்டுமல்ல, அவருக்குள் நீங்கள் அசைவீர்கள். தேவன், உங்களை முன்னேறச் செய்து, சூழ்நிலைக்கு மேலாக உங்களை உயர்த்தி, விசாலமான இடத்தில் கொண்டு வந்து நிறுத்துவார்.

இப்போது, நீங்கள் முன்னேற இயலாமல், ஸ்தம்பித்துப் போய் நிற்கலாம். இயேசுவும் சிலுவையில் அறையப்பட்டு, நிந்திக்கப்பட்டு, குற்றம் சுமத்தப்பட்டார் என்பதை நினைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வேதனையை அவர் புரிந்துகொண்டு சுமக்கும்படி அவர்தாமே வேதனையை அனுபவித்தார்.

நீங்கள் சிக்கிக்கொண்டதுபோன்ற நிலை ஏற்பட்டு, முன்னேற முடியாமல் தவித்தாலும் திடன் கொள்ளுங்கள். இயேசு, தமக்குள் நீங்கள் ஸ்தம்பித்து நிற்பதில்லை என்று வாக்குப்பண்ணுகிறார். நீங்கள் தோற்கடிக்கப்படுவதில்லை. நீங்கள் பிழைத்திருப்பீர்கள். நீங்கள் அசைவீர்கள். இயேசு உங்களுக்குள் வாசம்பண்ணுவார்; உங்கள் ஆத்துமாவுக்குள், சிந்தைக்குள், சரீரத்துக்குள் தம்முடைய ஜீவனை கொண்டு வருவார். உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக.

மகாராஷ்டிராவில் ஔரங்காபாத் என்ற ஊரில் வசிக்கும் சோனம் என்ற பெண்ணுக்கு இயேசு அவ்வாறே உதவியுள்ளார். சோனத்தின் வீட்டில் எப்போதும் சண்டையும் சச்சரவும் காணப்பட்டது. சோனத்தின் பெற்றோருக்குள் முரண்பாடு ஏற்பட்டதால், பிசாசு உள்ளே புகுந்தான். சோனத்தின் அப்பாவும் அம்மாவும் தற்கொலை செய்துகொண்டார்கள். சோனத்திற்கு வாழ்வதற்கு வழியே இல்லை என்ற நிலை ஏற்பட்டது. சோனத்தின் மாமா, அவர்களை பொறுப்பெடுத்துக்கொண்டார். ஆனால், அசுத்த ஆவிகள் சோனத்தின் பின்னே வந்து அலைக்கழிக்க ஆரம்பித்தன. அப்போது, யாரோ ஒருவர், "இயேசு உன்னை நேசிக்கிறார். அவர் உனக்கு உதவி செய்வார்," என்று சோனத்திடம் கூறியுள்ளார். சோனம் அந்த நம்பிக்கையை பற்றிக்கொண்டு, "இயேசுவே, எனக்கு உதவி செய்யும்," என்று ஜெபித்தார்கள்.

அற்புதவிதமாக வாசல்கள் திறந்தன. சோனம், நர்சிங் கல்லூரியில் சேர்ந்தார்கள். அங்கே உடன் படித்த இயேசு அழைக்கிறார் இளம் பங்காளராகிய தீபாளி என்ற பெண், சோனத்திற்கு இயேசு அழைக்கிறார் ஊழியத்தை அறிமுகம் செய்தார்கள். இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்திலிருக்கும ஜெப வீரர்களின் ஜெபத்தின் மூலம், சோனத்தை அலைக்கழித்து வந்த அசுத்த ஆவிகள் விலகிப்போயின; சோனத்தின் இருதயத்தை சமாதானம் நிரப்பியது. சோனத்தின் துக்கம் சந்தோஷமாக மாறியது. தொடர்ந்து ஜெபத்தின் மூலம் தேவனை தேடினார்கள்; அவர் தமது பரிசுத்த ஆவியினால் சோனத்தை நிரப்பினார்.

சோனத்தின் வாழ்வு முற்றிலும் மாறியது. பிறகு தன் படிப்புக்காக ஜெபிக்கும்படி எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். நான் ஜெபித்து பதில் அனுப்பினேன். சீக்கிரத்திலேயே அவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்று, ஒரு மருத்துவமனையில் நர்ஸாக வேலையில் சேர்ந்தார்கள். தற்போது, முன்னேறிச் செல்வதற்கும், பிழைத்திருப்பதற்கும் வேண்டிய கிருபையை பெற்று, பரிசுத்த ஆவியின் மூலமாக இயேசுவுக்குள் வாழ்கிறார்கள். சோனத்தின் வாழ்வை தேவனால் மறுரூபமாக்கி, ஆசீர்வதிக்க முடியுமானால், உங்களுக்கும் அப்படியே செய்ய அவரால் முடியும்.

இன்றைக்கு தேவன் உங்களை ஆசீர்வதிப்பார். நீங்கள் பிழைத்திருப்பீர்கள். நீங்கள் முன்னேறுவீர்கள். நீங்கள் இயேசுவுக்குள் ஜீவன் பெற்றிருப்பீர்கள்.
   
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, இயேசுவை இந்த உலகிற்கு என் இரட்சகராக அனுப்பியபடியினாலும், அவருக்குள் நான் பிழைத்திருப்பேன்; வளருவேன்; மெய்யான நோக்கத்தைப் பெற்றிருப்பேன் என்று வாக்குக்கொடுப்பதற்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். "நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்" என்று உம்முடைய வசனம் கூறுகிறது. நீரே நிறைவும் பூரணமுமானவர். நீர் எனக்குள் வாசம்பண்ணும்போது, எல்லா இடறல்களும், அவநம்பிக்கையும், ஒடுக்குதலும் அகன்றுபோகும். ஆகவே, இன்று என்னை முழுவதுமாக உம்மிடம் அர்ப்பணித்து, நீர் என்னை உம்முடைய பிரசன்னத்தினால் நிறைத்து, பூரணப்படுத்துவீர் என்று நம்புகிறேன். உம்முடைய ஒளியில் நான் வாழும்படி, உமக்குள் இருப்பதற்கு வாஞ்சிக்கிறேன். பெலத்துடன் முன்னேறவும், உம்முடைய பிரசன்னத்தின் நிறைவில் வாழவும், இயேசுவுக்குள் உம்முடைய பரிசுத்த ஆவியின் வல்லமையின் மூலமாக பிழைத்திருக்கவும் வேண்டிய கிருபையை எனக்கு தந்தருள வேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.