அன்பானவர்களே, நம்முடைய ஆண்டவராகிய இயேசு, "இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்" (மத்தேயு 5:8) என்று கூறுகிறார். மத்தேயு 5ம் அதிகாரம் முழுவதும், ஆண்டவர், மலைப் பிரசங்கத்தில் ஒன்பது வகையான பாக்கியங்களைக் குறிப்பிடுகிறார். "இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்" என்பது, நாம் உலகத்தில் பெறக்கூடிய சிறந்த பாக்கியங்களுள் ஒன்றாகும்.

நாம் எப்படி இருதயத்தில் சுத்தமுள்ளவர்களாக மாற முடியும்? மெய்யான நீதியின் ஐக்கியத்தில் பங்குபெறுவதற்கு இயேசு நம்மை அன்போடு இவ்விதமாய் அழைக்கிறார். இயேசுவின் இந்த அழைப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ளும்போது, மெய்யாகவே பாக்கியம் பெறுவீர்கள்; இருதயத்தில் சுத்தமாவீர்கள். வெளிப்புற சுத்தத்தை நோக்காமல், நாம் உள்ளாக இருதயத்தில் சுத்தமாயிருப்பதில் கவனம் செலுத்தவேண்டும் என்று இயேசு அறிவுறுத்துகிறார். யூத மார்க்கத்தில், ஜனங்கள் தங்கள் கைகள், கால்கள் மற்றும் முழு உடலையையும் கழுவி, வெளிப்புற சுத்தத்தில் கவனம் செலுத்தினார்கள்.  தங்கள் உடலையும் உள்ளத்தையும் இது சுத்தமாக்கும் என்று அவர்கள் நம்பினார்கள். ஆனால், சுத்தம் உள்ளே இருந்து ஆரம்பிக்கவேண்டும் என்பதே இயேசு கூறியதன் மெய்யான அர்த்தமாகும். தாவீது, தேவனை நோக்கி, "தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும்" (சங்கீதம் 51:10) என்று வேண்டுகிறான். ஒரு மனுஷன், வெளிப்புறம் காணும் சுத்தத்தின் அடிப்படையில் நம்மை அனுமானிக்கலாம். ஆனால், தேவன் நம்முடைய இருதயங்களை பார்க்கிறார். நாத்தான்வேல் என்ற இஸ்ரவேலனின் இருதயத்தை இயேசு பார்த்தார். "இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்" (யோவான் 1:47) என்று அவர் கூறினார்.

தேவன், மெய்யாகவே நம்முடைய இருதயத்தின் ஆழத்தை பார்க்கிறார். ஆகவே, நம்முடைய இருதயங்களை சுத்தமாக வைத்துக்கொள்வது முக்கியம். ஆண்டவராகிய இயேசு நாத்தான்வேலிடம், "வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்று கூறினார். பரலோகத்தையும் தேவனையும் காண்பது எவ்வளவு பாக்கியம். உங்கள் இருதயம் சுத்தமாக இருந்தால், பரலோகம் உங்களுக்குத் திறக்கும். கர்த்தரின் மகிமையை நீங்கள் காணலாம்; தேவனோடு ஐக்கியம் கொள்ளலாம். ஆண்டவர் நல்லவர் என்பதை நீங்கள் ருசித்துப் பார்ப்பீர்கள்; உங்கள் அறிவுக் கண்களால் கிறிஸ்துவை காண்பீர்கள். மிக முக்கியமாக தேவனை சரீர ரூபத்தில் காண்பீர்கள். இயேசுவை முகமுகமாய் தரிசிப்பது எவ்வளவு பாக்கியம். "இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்". அன்பானவர்களே, நீங்கள் ஜெபித்து, அதைப் பெற்றுக்கொள்வீர்களா?

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, நீர் வாக்குப்பண்ணுகிறபடியே வானத்தை திறப்பீராக. நான் உம்மை முகமுகமாய் தரிசிக்கவும் உம்முடைய மகிமையை காணவும் விரும்புகிறேன். தேவதூதர்கள் ஏறுகிறதையும் இறங்குகிறதையும் பார்க்க வாஞ்சிக்கிறேன். என்னை உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை கழுவி இதற்கு பாத்திரமாக்கவேண்டுமென்று ஜெபிக்கிறேன். உம்மோடு நெருங்கி ஜீவிக்கவும் எப்போதும் உம்முடைய சத்தத்தை கேட்கவும் உதவும். சுத்தமும் உண்மையும் நிறைந்த இருதயத்தோடு ஜீவிக்கும்படியான கிருபையை எனக்கு தந்தருளும். என்னை கழுவி, சுத்தமாக்கி, நீதியுள்ள மனுஷியாக்குவதற்காக / நீதிமானாக்குவதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். ஆண்டவரே, நீர் உண்மையாய் என்னை நேசிப்பதற்காக உமக்கு நன்றி செலுத்தி, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.