அருமையான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். "அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்" (1 சாமுவேல் 2:9) என்ற வாக்குத்தத்த வசனத்தை இன்றைக்கு தியானிக்கும்படி தெரிந்துகொண்டிருக்கிறோம். இங்கே 'அவர்' என்று குறிப்பிடப்படுகிறவர் யார்? "அவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்" என்று வேதம் சொல்லுகிறது (ஏசாயா 43:3,5). இப்போது, அந்த வசனத்தை மறுபடியும் நம்பிக்கையுடன், "கர்த்தர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்" என்று வாசித்து சுதந்தரித்துக்கொள்ளுங்கள். தேவன் தருகிற இந்த வாக்குத்தத்தம் எவ்வளவு அருமையானது!

"கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக; நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களை விட்டுப் பிரித்தெடுத்தேன்" (லேவியராகமம் 20:26) என்று கர்த்தர், இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறுகிறார். இஸ்ரவேலர், கர்த்தரே தெரிந்தெடுத்த ஜனங்களாயிருந்தார்கள். "நீங்கள் பரிசுத்தவான்களாயிருக்கும்படி நான் உங்களை மற்ற ஜனங்களை விட்டுப் பிரித்தெடுத்தேன்," என்று அவர் கூறியுள்ளார். மெய்யாகவே, இது மகிமையான அழைப்பாகும்.

அவ்வண்ணமே, ஆண்டவர் இன்றைக்கு தம்முடைய சொந்த ஜனமாக இருக்கும்படி உங்களை அழைக்கிறார்; தம்முடைய தெரிந்தெடுப்பின் மூலமும், பரிசுத்தத்தாலும் உங்கள் வாழ்க்கையை ஆசீர்வதிக்க விரும்புகிறார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, சிலுவையில் சிந்திய விலையேறப்பெற்ற இரத்தத்தின் மூலமே பரிசுத்தமாகுதல் நடக்கிறது (எபிரெயர் 13:12).

அன்பானவர்களே, நீங்கள் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்டிருக்கிறீர்களா? அவருடைய இரத்தத்தினால் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறீர்களா? பரிசுத்தமாக வாழ்வதற்கு உங்களை அர்ப்பணித்தால் மாத்திரமே ஆண்டவர் உங்கள் பாதங்களை பாதுகாப்பார்; எல்லா தீமைக்கும் உங்களை விலக்கிக் காப்பார். "உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார். உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள்" (சங்கீதம் 91:11,12) என்று வேதம் கூறுகிறது. எவ்வளவு பெரிய ஆசீர்வாதத்தை நாம் பெற்றுக்கொள்ள முடிகிறது! நீங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்டிருக்கிறீர்களா? அவரோடு நெருங்கி ஜீவிக்கிறீர்களா? இல்லையெனில், ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவிடம் உங்கள் வாழ்க்கையை ஒப்படைத்து, அவரிடம் மன்னிப்பு கேளுங்கள்; சிலுவையில் அவர் சிந்திய விலையேறப்பெற்ற இரத்ததினால் உங்களை கழுவும்படி வேண்டிக்கொள்ளுங்கள். ஆண்டவருக்கு முன்பு நீங்கள் பரிசுத்தத்தில் நடக்கும்போது, நீங்கள் எப்பக்கத்திலும் பாதுகாக்கப்படுவீர்கள். இப்போது நாம் ஜெபித்து, இந்த ஆசீர்வாதங்கள் எல்லாவற்றையும் பெற்றுக்கொள்வோமா?

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, நீர் கொடுத்துள்ள அருமையான வாக்குத்தத்தத்திற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். நீர் நீதிமான்களின் தேவனாயிருக்கிறீர். நான் இன்னொரு முறையாய் என்னை உம்முடைய அன்பின் கரங்களுக்குள் முற்றிலுமாய் ஒப்படைக்கிறேன். நான் புதிதாக்கப்படும்படியாய் என் அக்கிரமங்களை தயவாய் மன்னித்து, உம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் என்னை கழுவியருளும். நான் உறுதியாய் உம்மைப் பற்றிக்கொள்ளவும், ஒருபோதும் உலகத்தின் இன்பத்தையோ, ஆறுதலையோ நோக்காதிருக்கவும் எனக்கு உதவும். என்னை உட்புறமாய் மறுரூபமாக்கி, உமக்குள் புதுச்சிருஷ்டியாக மாற்றும். உமக்கு முன்பாக பரிசுத்தத்தில் நடப்பதற்கு வேண்டிய கிருபையையும் பெலனையும் அருளிச்செய்யும். என் பாதங்கள் இடறுவதற்கு நீர் அனுமதிக்கமாட்டீர் என்றும், என் வாழ்வையும், என் கால்களையும் நீர் காக்கிறீர் என்றும் அறிந்திருக்கிறேன். உம்முடைய பிரசன்னத்தில் நான் சுகமாய் தங்கும்படி பாதுகாப்பதற்காக உமக்கு நன்றி செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.