அன்பானவர்களே, தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும் ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமாக இருக்கிறார் என்று வேதம் கூறுகிறது (சங்கீதம் 46:1). இன்றைய வாக்குத்தத்த வசனத்தில், "உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக" (சங்கீதம் 5:11) என்று சொல்லப்பட்டுள்ளது. ஆம், தம்மை அடைக்கலமாகக் கொள்கிறவர்கள்பேரில் தேவன் அக்கறையாயிருக்கிறார். கர்த்தரே நமக்கு நித்திய அடைக்கலமாக இருக்கிறார். அவர் நம் ஆத்துமாவை, நம் ஜீவனை, நம் உத்தமத்தை, நம் ஆஸ்திகளை, நம் குடும்பத்தை பாதுகாப்பார்.
ஏரோது, பாலகன் இயேசுவை கொல்ல தேடும்போது, தேவன் தம் தூதனை யோசேப்பிடம் அனுப்பி, "பிள்ளையையும் அதன் தாயாகிய மரியாளையும் எகிப்துக்கு அழைத்துச்செல்," என்று தெளிவான வழிகாட்டுதலை கொடுத்தார். அதே தேவன் பிள்ளைகளை வளர்க்கும்படி உங்களை நடத்தி, அவர்களை பாதுகாக்கவும் செய்வார். அவரே நம் அடைக்கலம். அவருடைய தெய்வீக பாதுகாப்பினால் நாம் களிகூர்ந்து பாடுவோம். உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக.
நம் இளம் பங்காளரான ஆசிஷ் ஷேரனின் உயிரை தேவன் எவ்வாறு பாதுகாத்தார் என்பது குறித்த ஒரு அருமையான சாட்சியை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். ஆசிஷ், தன் பெற்றோருடன் காரில் சென்றுகொண்டிருந்தபோது, கொடிய விபத்தில் சிக்கினார். நினைவிழந்த அவருக்கு மருத்துவமனையில் நினைவு திரும்பியது. அவரது தாயார், "நீ இயேசு அழைக்கிறார் இளம் பங்காளர். ஜெப வீரர்கள் உனக்காக ஜெபித்துக்கொண்டிருக்கிறார். உனக்கு எந்த தீங்கும் நேரிடாது," என்று நினைவுப்படுத்தியுள்ளார்கள். அன்றைய தினத்திற்கான இயேசு அழைக்கிறார் வாக்குத்தத்தமான, "அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்" (சங்கீதம் 91:15) என்ற வசனத்தை ஆசிஷ் உறுதியாகப் பற்றிக்கொண்டார். அவருக்கு கை முறிந்திருந்தாலும், அதிக வேதனையில் இருந்தாலும் அவர் தேவ வாக்குத்தத்தத்தைப் பற்றிக்கொண்டார். இரண்டு வாரங்களில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவேண்டிய நிலை. ஆகவே, ஜெப உதவிக்காக ஜெப கோபுரத்திற்கு தொடர்புகொண்டார். ஜெப வீரர்கள் அவருக்காக ஜெபித்துள்ளார்கள். தேவன் கொடுத்த பெலத்துடன் அவர் உண்மையாக பாடங்களை படித்துள்ளார். 50% மதிப்பெண்களே கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தேவன் 80% மதிப்பெண்களை அவருக்கு ஆசீர்வாதமாக அளித்துள்ளார். தேவன், ஆசிஷை பாதுகாத்ததுடன் மட்டுமல்லாமல், அவரது குடும்பத்தையும் காத்தார்; ஆசிஷை செழிக்கப்பண்ணினார்.
உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக. உலகத்தில் இக்கட்டுகள் உண்டானாலும், நீங்கள் உண்மையாய் இயேசுவை அடைக்கலமாக கொள்ளும்போது, தேவன் உங்களை பாதுகாத்து, களிகூர்ந்து பாடும்படி செய்வார்
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, நீர் எனக்கு அடைக்கலமாகவும், பெலனாகவும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையாகவும் இருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நாம் உம்மை அடைக்கலமாகக் கொள்ளும்போது, சந்தோஷமாய் களிகூர்ந்து பாட முடியும் என்ற நிச்சயத்தை நீர் தருவதற்காக உம்மை துதிக்கிறேன். உம்முடைய தெய்வீக பிரசன்னத்தால் என்னுடைய ஆத்துமாவை, ஜீவனை, உத்தமத்தை, குடும்பத்தை பாதுகாத்தருளும். செய்யும் காரியங்கள் எல்லாவற்றிலும் என்னை வழிநடத்தி, யோசேப்புக்குக் காட்டியதுபோல் எனக்கும் நேர்த்தியான பாதையை காண்பித்தருளும். இக்கட்டுகள் எழும்பும்போதும், உம்முடைய பாதுகாப்பில் நான் நம்பிக்கை கொள்ள உதவியருளும். எல்லா கவலையையும் பயத்தையும் என்னைவிட்டு அகற்றி உம்முடைய சமாதானத்தினால் என் இருதயத்தை நிரப்பும். நீர் எப்போதும் எனக்கு சமீபமாய் இருக்கிறீர் என்பதை அறிந்து உமக்குள் களிகூருவதற்கு எனக்குப் போதித்தருளும். உம்முடைய கிருபைக்காகவும் கரிசனைக்காகவும் உமக்கு நன்றி செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.