அன்பானவர்களே, "கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்" (நீதிமொழிகள் 18:10) என்று வேதம் கூறுகிறபடி, கர்த்தருடைய நாமம் உங்கள்மேல் இருப்பதாக.
"கர்த்தாவே, உமக்கு ஒப்பானவன் இல்லை; நீரே பெரியவர்; உமது நாமமே வல்லமையில் பெரியது" (எரேமியா 10:6) என்று வேதம் கூறுகிறது. உண்மையாய் நாம் தேவனுடைய நாமத்தை அறிந்துகொள்ளவேண்டுமானால், அவரை நாம் அறிந்திருக்கவேண்டும். நாம் அவரை நோக்கிக் கூப்பிடும்போது, அவருடைய வசனத்தை தியானிக்கும்போது, எந்தக் காரியத்தை செய்யும் முன்பும் தொடர்ந்து ஜெபிக்கும்போது, நாம் தேவனை அறிகிற அறிவில் வளருகிறோம். அநேக சகோதரிகள், "நான் எப்படி தேவனை கிட்டிச்சேர்வது?" என்று கேட்பார்கள். நான் எப்போதும், "சகோதரி, வசனத்தை அதிகமாய் வாசியுங்கள்," என்றே கூறுவேன். நாம் தேவனைக் குறித்து அதிகமாய் அறிந்துகொள்வது மாத்திரமே அதற்கு வழியாக இருக்கிறது.
ஆகாரைக் குறித்து வாசிக்கும்போது, சாராயின் அடிமைப்பெண்ணான அவள், தன் எஜமாட்டியை விட்டு ஓடிப்போனபோது, கர்த்தர் அவளைக் கண்டார் என்று தெரிந்துகொள்கிறோம். கர்த்தருடைய தூதன் அவளுக்குத் தோன்றி, "எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்?" என்று கேட்டார். அவள், "நான் என் நாச்சியாராகிய சாராயைவிட்டு ஓடிப்போகிறேன்" என்று கூறினாள். அப்போது தூதன், "நீ உன் நாச்சியாரண்டைக்குத் திரும்பிப்போய், அவள் கையின்கீழ் அடங்கியிரு. உன் சந்ததியை மிகவும் பெருகப்பண்ணுவேன்; அது பெருகி, எண்ணிமுடியாததாயிருக்கும்" என்று கூறினார். அவளுடைய மகன் எதிர்காலத்தில் எப்படியிருப்பான் என்று கர்த்தர் விவரித்தார். வனாந்தரத்தில் ஆகார் கர்த்தரைக் கண்டாள். ஆகவேதான் அவள், "என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன்" என்று கூறினாள் (ஆதியாகமம் 16:13). கர்த்தர், ஆகாரின்மேல் அதிக கரிசனையாயிருந்தார்; அவளது சிறுமையை பார்த்தார். அவர், அவளுக்குத் தோன்றி, அவளை மறுபடியும் தம்முடைய திட்டத்திற்கு நேராக திருப்பினார். தேவன், ஆகாருக்கு தோன்றாமலிருந்திருந்தால், அவள் தன் சொந்த தேசமான எகிப்துக்குப் போயிருப்பாள்; தன் வாழ்வுக்கான தேவனுடைய சித்தத்தை இழந்திருப்பாள். அவளுடைய சிறுமையின் நேரத்தில் தேவன் தம்மை அவளுக்கு வெளிப்படுத்தி, அவளை தம்மிடம் கிட்டிச்சேர்த்தார். அவள் வனாந்தரத்தில் தேவனை அந்நியோந்நியமாக அறிந்து, அவருக்கு, 'என்னைக் காண்கிற தேவன்' என்று புது பேரிட்டாள்.
ஆம், கர்த்தருடைய நாமம் பலத்த துருகமாயிருக்கிறது. வியாகுலத்தின் மத்தியில் இருந்த ஆகாரை கண்ட தேவன், உங்களுக்கும் தம்மை காண்பிப்பார். வேதம், பழைய ஏற்பாட்டில் கர்த்தருடைய நாமங்களைக் குறித்து கூறுகிறது; புதிய ஏற்பாட்டில் அது இயேசுவின் நாமத்தைக் குறித்து கூறுகிறது. "அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார்" (மத்தேயு 1:23) என்றும், "அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்" (மத்தேயு 1:21) என்றும் வேதம் கூறுகிறது. இயேசுவின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுவது நமக்கு எவ்வளவு சிலாக்கியமாயிருக்கிறது. கர்த்தருடைய நாமத்தை சொல்லிக் கூப்பிடுகிற அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள். கர்த்தருடைய நாமம் பலத்ததும் வல்லமையுள்ளதுமாயிருக்கிறது. நீங்கள், இயேசுவின் நாமத்திற்குள் ஓடி சுகமாயிருக்கும்படி ஆண்டவர் உங்களை வழிநடத்துவாராக.
ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, உம்முடைய நாமம் எனக்கு அடைக்கலமும் பெலனும் தருகிற பலத்த துருகமாயிருக்கிறது. உம்முடைய வசனத்தை தியானித்து, உம்முடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுவதன் மூலம் உம்மைக் குறித்து அதிகமாய் அறிந்துகொள்ள எனக்கு உதவி செய்யும். நீர் ஆகாரை வனாந்தரத்தில் கண்ணோக்கியதுபோல, போராட்டங்களின் மத்தியில் இருக்கும் என்னையும் தயவோடு பார்த்து, உம்முடைய நோக்கத்திற்கு நேராக என்னை வழிநடத்தும். நான் கலங்கும்வேளைகளில் எனக்கு உம்மை வெளிப்படுத்தி, நீர் காண்கிற தேவனாயிருக்கிறீர் என்பதை உணர்த்தியருளும். எல்லா நாமங்களுக்கும் மேலான நாமமாகிய இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தை நான் நம்பும்படி என்னை நடத்தியருளும். எனக்கு நீர் இம்மானுவேலாக இருப்பதற்காகவும், உம்முடைய கிருபையின் மூலம் என்னை மீட்டுக்கொள்வதற்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நான் பாதுகாப்பை நாடி எப்போதும் உம்மிடம் ஓடிவரும்படி செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.