அன்பானவர்களே, "கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார்" (எரேமியா 20:11) என்ற வசனத்தை இன்றைக்கு தியானிப்போம். நாம் வேதத்தை வாசித்தால், எரேமியா, எப்போது இந்த வார்த்தைகளைக் கூறினான் என்பதைக் கண்டு, இந்த வார்த்தைகளின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ள முடியும். கர்த்தர் தன்னோடு பேசிய அனைத்தையும் அவன் உண்மையாய் தீர்க்கதரிசனமாய் உரைத்தான். ஆனாலும் ஜனங்கள் பாவத்தில் மூழ்கி, தேவனுடைய கட்டளைகளுக்கு செவிகொடுக்கவும் கீழ்ப்படியவும் மறுத்துவிட்டனர். ஆலயத்து பிரதான விசாரணைக்காரனாகிய பஸ்கூரும் அவர்களோடே இருந்தான். அவன் எரேமியாவின் தீர்க்கதரிசனங்களைக் கேட்டபோது, கோபமுற்றான். எரேமியாவை பேசாமலிருக்கச் செய்ய அவன் விரும்பினான். பஸ்கூர், அவனை அடித்து துன்புறுத்தி, அவமானப்படுத்தினான். அந்தப் பாடுகளை அனுபவித்தும் எரேமியா தைரியமாக, "தேவன், பயங்கரமான பராக்கிரமசாலியாக என்னோடு இருக்கிறார். கர்த்தர் என்பது அவருடைய நாமம்," என்று கூறினான். அனைவர் முன்பாகவும் அவன் இந்த சத்தியத்தை அறிவித்தான். இவ்வாறே, உங்கள் வீட்டில், வேலை செய்யுமிடத்தில் அல்லது நீங்கள் இருக்குமிடத்தில், "நான் சரியான காரியத்தைத்தானே செய்கிறேன்; தேவனுடைய பார்வைக்கு ஏற்றதை செய்கிறேன். ஆனாலும் ஏன் பாடுபடுகிறேன். ஏன் கீழே தள்ளப்படுகிறேன். ஏன் எனக்கு உரிய அங்கீகாரமும் கிடைக்கவில்லை?" என்று ஆச்சரியப்படலாம். அதுபோன்ற தருணங்களிலும், "ஆண்டவர், பயங்கரமான பராக்கிரமசாலியாக என்னோடு இருக்கிறார்," என்று திடநம்பிக்கையுடன் அறிக்கையிடுங்கள்.

எரேமியா இவ்வாறு அறிக்கையிட்டபோது, என்ன நடந்தது? கர்த்தர் மெய்யாக அவனோடிருந்தார்; அவனுடைய யுத்தங்களை அவர் செய்தார்; அவனை பாதுகாத்தார். அற்புதங்களைச் செய்து தாம் எரேமியாவின் பட்சத்தில் இருப்பதை தேவன் நிரூபித்தார். எரேமியா உரைத்த எல்லா தீர்க்கதரிசனங்களும் நிறைவேறி, கர்த்தர் அவனோடிருந்ததை வெளிப்படுத்தின.

ஆம், அன்பானவர்களே, தேவன் பயங்கரமான பராக்கிரமசாலியாக உங்களோடு இருக்கிறார். நீங்கள் பாடனுபவிக்கலாம். நிந்திக்கப்படலாம். நகைப்புக்கு இடமாகலாம். ஆனால், ஆண்டவர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார். அவர், சாதாரண போர்வீரனல்ல; அவர் பயங்கரமான பராக்கிரமசாலி. அவர் உங்களோடிருக்கிறார்; உங்கள் பட்சத்தில் இருக்கிறார்; அவர் உங்களுக்காக யுத்தங்களை நடத்துவார். ஆகவே, தோற்றுப்போனதாக எண்ணி ஒருபோதும் தலையை தாழ்த்தாதிருங்கள். உங்கள் கண்களை ஏறெடுத்துப் பாருங்கள்; ஆண்டவர் உங்கள் அருகில் நிற்கிறார். இந்த வாக்குத்தத்தத்திற்காக அவரை ஸ்தோத்திரித்து ஜெபிப்பீர்களா?

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, பாரமுள்ள இருதயத்துடன் உம் முன்னே வருகிறேன். நீதியாய் வாழவும், உம்முடைய வழிகளில் நடக்கவும், உம்முடைய பார்வைக்கு ஏற்றவற்றை செய்யவும் நாம் பிரயாசப்பட்டுள்ளேன். ஆனாலும் எதிர்ப்பும், நிராகரிப்பும், பாடுகளுமே எனக்கு கிடைக்கின்றன. கர்த்தராகிய நீர் என்னுடன் பயங்கரமான பராக்கிரமசாலியாக இருப்பதாக கொடுத்திருக்கும் வாக்குத்தத்தத்தினால் தேறுதலடைகிறேன். என்னுடைய வேதனை, போராட்டங்கள், யுத்தங்களை உம்முடைய கரங்களில் ஒப்படைக்கிறேன். என்னை, எல்லா புயலையும் கடந்து வரும்படி செய்வீர் என்று நம்பி, நீர் என்னுடன் பயங்கரமான பராக்கிரமசாலியாக இருக்கிறீர் என்று விசுவாசத்துடன் அறிக்கையிடுகிறேன். இந்த வாக்குத்தத்தத்தை தந்ததற்காக உமக்கு நன்றி. இதை பெற்றுக்கொள்கிறேன்; சுதந்தரிக்கிறேன்; அதன்படி நடக்கிறேன் என்று அறிக்கையிட்டு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.