அன்பானவர்களே, இன்றைக்கு, "தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி" (2 பேதுரு 1:3) என்ற வசனத்தை தியானிப்போம். தேவனுடைய வல்லமையினால் நாம் எல்லாவற்றையும் அவரிடமிருந்து பெறுகிறோம். இதற்கு முதற்படி, தேவனை அறிகிற அறிவை பெறுவதாகும். இறுதியில் அவர் தம்முடைய மகிமையையும் திவ்விய பலனையும் நமக்கு அருளிச்செய்கிறார். இவை எல்லாவற்றையும் நாம் எப்படி தேவனிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்று நீங்கள் யோசிக்கலாம். அதற்கு வேதம், "உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று" (பிலிப்பியர் 1:5) என்று பதில் கூறுகிறது.
தேவன், தம்முடைய நற்கிரியையை உங்களில் ஏற்கனவே துவங்கியுள்ளார்; அவர் அதைச் செய்து முடிப்பார். நமக்குத் தேவையான எல்லாவற்றையும் அவர் தந்தருளுவார். "ஆண்டவரே, எனக்கு உம்முடைய பரிசுத்த ஆவியை இன்னும் அதிகமாக தந்தருளும்," என்று சிலர் ஜெபிக்கலாம். ஆனால், தேவன் தம்முடைய ஆவியின் வல்லமையினால் எல்லாவற்றையும் நமக்கு ஏற்கனவே தந்திருக்கிறார். நாம் மேலும் மேலும் பரிசுத்த ஆவியை கேட்பதற்குப் பதிலாக, "விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசு" என்று வேதம் கூறுவதால், நம்முடைய விசுவாசத்தை பெலப்படுத்த அவரை அனுமதிக்கவேண்டும். "தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக" என்றும் வேதத்தில் வாசிக்கிறோம் (1 பேதுரு 5:10).
தேவன், தாம் பூரணமாய் செய்து முடித்ததையே நமக்கு அருளிச்செய்கிறார். பக்தியின் பூரணத்துவத்தையே நாம் மகிமை என்றும், விசேஷித்தது என்றும் கூறுகிறோம். "ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்" (ஆதியாகமம் 5:24) என்று வேதம் ஏனோக்கைக் குறித்துக் கூறுகிறது. ஏனோக்கின் வாழ்வில், அவனை அவருடைய மகிமையான பிரசன்னத்தால் நிரப்புவதான தேவனுடைய கிரியை நிறைவுபெற்றதுபோல, நம்மையும் அவர் மறுரூபப்படுத்துகிறார். "கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்" (2 கொரிந்தியர் 3:18) என்று வேதம் இந்த சத்தியத்தை உறுதிப்படுத்துகிறது. பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் மாத்திரமே இந்த மறுரூபமாகுதல் நடைபெற முடியும்.
இவ்வளவு பெரிய ஈவை பெற்றுக்கொள்ள நாம் தகுதியானவர்கள் அல்லாதபோதும், தேவன் தம்முடைய கிருபையின்படி, ஆவிக்குரியவிதத்தில் அனைத்தையும் நாம் அனுபவிக்கும்படி அருளிச்செய்திருக்கிறார். அவர் நம்மை, தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் என்றும், ராஜரீக ஆசாரிய கூட்டத்தினர் என்றும், பரிசுத்த ஜாதியென்றும், தம்முடைய விசேஷித்த சம்பத்தென்றும் அழைக்கிறார். இறுதியாக, நமக்குள் பரிசுத்த ஆவியானவர் தம்முடைய கிரியையை நிறைவுசெய்யும்போது, நாம் மெய்யாகவே தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனமாக, இவ்வுலகில் கோடிக்கணக்கானோரை ஆசீர்வதிப்பதற்காக வேறு பிரிக்கப்பட்டவர்களாக மாறுகிறோம். நீங்கள் பரிசுத்தத்தில் வளர்ந்து, அவருடைய சாயலுக்கு மறுரூபமாக்கப்படுவீர்களாக.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என்னுடைய வாழ்க்கைக்கும் தேவ பக்திக்கும் தேவையான அனைத்தையும் அருளிச்செய்கிற உம்முடைய தெய்வீக வல்லமைக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நான் உம்முடைய மகிமையில் நடக்கும்படி உம்மை அறிகிற அறிவினால் என் உள்ளத்தை நிரப்பும். விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமான நீர் என்னுடைய விசுவாசத்தை பெலப்படுத்தும். நீர் துவங்கியவற்றை முடிப்பீர் என்பதை அறிந்து, உம்முடைய பூரண கிரியையின்மேல் நம்பிக்கையாயிருப்பதற்கு எனக்கு உதவும். பரிசுத்த ஆவியானவர், அனுதினமும் கிறிஸ்துவின் சாயலாய், மகிமையின்மேல் மகிமையாய் என்னை மறுரூபப்படுத்துவாராக. ஏனோக்கைப்போல நான் உம்முடன் உத்தமாய் நடந்து, உம்முடைய மகிமையான சமுகத்தில் தங்கியிருக்க உதவும். தகுதியில்லாதவனா(ளா)ன என்னை அழைத்து, தெரிந்துகொண்ட உம் கிருபைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். உம்முடைய பரிசுத்தத்தையும் அன்பையும் காட்டுகிறதும், மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக விளங்குகிறதுமான பாத்திரமாக என்னை பயன்படுத்தும். நான் செய்கிற அனைத்து காரியங்களிலும் உம்மை மகிமைப்படுத்தும்படி உம்முடைய விசேஷித்த ஆவி என்மேல் தங்கவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.