அன்பானவர்களே, "அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார்" (ஏசாயா 58:9) என்பதே இன்றைக்கான தேவ வாக்குத்தத்தமாகும். கர்த்தரை கண்டடைவது பெரிய காரியமாக இருப்பதால், தேவன் நமக்கு பதில் கொடுப்பார் என்பதையும், 'இதோ, நான் இருக்கிறேன்," என்று சொல்வார் என்பதையும் கேட்பது எவ்வளவு ஆச்சரியம்! அந்த வசனம், "நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார்" என்றும் கூறுகிறது.
இந்த அதிகாரம் தேவனுடைய பிள்ளைகள் குறித்தும் கர்த்தர் அவர்களைக் குறித்து எவ்வளவு மனஞ்சலித்துப்போயிருக்கிறார் என்பதையும் கூறுகிறது. ஜனத்தின் பாவங்களை தெரிவித்து, அவர்கள் செயல்பாடுகளை கண்டிக்குமாறு தேவன், ஜனத்தின் தலைவர்களுக்கு கட்டளையிடுகிறார். தேவனுக்கு முன்பு தாங்கள் உபவாசித்து பணிந்துகொண்டும் தங்கள் ஜெபங்களுக்கு பதில் கிடைக்கவில்லை என்று ஜனங்கள் கூறுகிறார்கள். அவர்கள் நியாயத்தையும் நீதியையும் அசட்டைபண்ணியதோடு, உண்மையில்லாமல் தேவனண்டை சேர்ந்ததினால் பதில் கிடைக்கவில்லை. உபவாசத்தின்போதும் அவர்கள் வழக்கில் ஈடுபட்டு, தங்கள் வேலைக்காரர்களை கொடுமைப்படுத்திவிட்டு, தங்கள் ஜெபங்கள் கேட்கப்படவில்லை என்று கேள்விகேட்கிறார்கள்.
அன்பானவர்களே, அவ்வாறு நாம் தேவனை அணுகும் சூழ்நிலைகளும் உள்ளன. ஆனால், ஆண்டவர் நமக்கு பதிலளிக்க வாஞ்சையாயிருக்கிறார். "இதோ, நான் இருக்கிறேன்," என்று அறிவித்து, நம்முடைய விருப்பங்களைக் காட்டிலும் நீதியை தேடும்படி கூறுவதற்கு அவர் விரும்புகிறார். தேவனுடைய நீதியை தொடர்வதே நம்மை நிறைவாக்கும். நன்மை செய்து, கர்த்தருக்குப் பயந்து, நீதியாய் நடப்பது அவருக்குப் பிரியமாயிருக்கும்; அப்போது நம்முடைய ஜெபங்களுக்கு நிச்சயமாகவே பதில் கிடைக்கும். இன்றைக்கு அவர் நமக்குள் நீதி இருக்கவேண்டுமென்று விரும்புகிறார்; அது மற்றவர்களுக்கு முன்பாக பிரகாசிக்கும்படி அவர் செய்வார். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
ஜெபம்:
பரம தகப்பனே, இன்றைக்கு உம் முன்னே வந்து, நான் கூப்பிடும்போது நீர் பதிலளிப்பீர்; நான் சத்தமிடும்போது, நீர், இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவீர் என்ற வாக்குத்தத்தத்தை உமக்கு நினைப்பூட்டுகிறேன். என்னுடைய சொந்த தோல்விகளாலும் தவறுகளாலும் பாரப்பட்ட இருதயத்துடன் சிலவேளைகளில் உம்மிடம் வருகிறேன் என்பதை அறிந்திருக்கிறேன். நான் மற்றவர்களை குற்றம்சாட்டியதற்கு, பொல்லாங்காய் பேசியதற்கு, நியாயத்தை அசட்டைபண்ணியதற்கு வருந்தி மனந்திரும்புகிறேன். ஆண்டவரே, என் இருதயம் உமக்கு தூரமாயிருந்து, வெற்று சடங்காச்சாரங்களுடனும், வழக்கங்களுடனும் உம்மிடம் சேருவதற்காக என்னை மன்னித்தருளும். உம்முடைய நீதியை உண்மையாய் தேடவும், மற்றவர்களுக்கு நன்மை செய்யவும், உம்மிடம் பயபக்தி கொண்டிருக்கவும் எனக்கு உதவும். என்னுடைய செய்கைகள் உம்முடைய அன்பையும் நியாயத்தையும் காட்டுவதாக; அவை உம்முடைய பார்வைக்கு பிரியமாயிருப்பதாக. தகப்பனே, "இதோ, நான் இருக்கிறேன்," என்று கூறும் உம்முடைய சத்தத்தைக் கேட்க நான் வாஞ்சையாய் இருக்கிறேன். உம்முடைய பரிபூரண திட்டத்திற்கேற்ப என்னுடைய ஜெபங்களுக்கு பதில் கிடைக்கும்படி, உம்முடைய சித்தத்திற்கேற்ப விருப்பங்களை நான் கொண்டிருக்க எனக்குக் கற்றுத்தாரும். இன்றைக்கும் என்றைக்கும் உம்முடைய நீதி என் மூலமாக பிரகாசிக்கவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.