அன்பானவர்களே, உங்களுக்கு என் அன்பின் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்! இது கொண்டாடுதலின் நேரம். இது, கிறிஸ்துவின் சந்தோஷத்தை முழுமையாக நம் உள்ளங்களில் ஏற்றுக்கொள்ளும் வேளையாகும். இந்த மகிழ்ச்சியோடு, "இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்" (லூக்கா 2:11)என்ற அருமையான வசனத்தை தியானிப்போம்.

இன்று, நம்முடைய இரட்சகராகிய கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் நாளாகும். முக்கியமாக, அவர் நம்முடைய இருதயங்களில் மெய்யாகவே பிறப்பதற்கு விரும்புகிறார். இதுவே கிறிஸ்துமஸின் சாராம்சமாகும். தேவன், ஏன் மனிதனாக உலகிற்கு வந்தார் என்று நீங்கள் ஆச்சரியப்படக்கூடும். நமக்கு இரட்சகராக விளங்குவதற்கு அவர் ஏன் விரும்பவேண்டும்? அவரை தவிர வேறு யாராலும் அவருடைய ஜனங்களை சாபத்திலிருந்தும் பாவத்தின் ஆக்கினையிலிருந்தும் மீட்க முடியாததால், அவரே இரட்சகரானார்.

இயேசு கிறிஸ்து மனுக்குலத்தை கண்ணோக்கியபோது, நாம் இருளுக்குள் தவிப்பதை கண்டார். அவர், "நான் அவர்களுக்கு இரட்சகராகட்டும். இருளிலிருந்து நான் அவர்களை விடுவிக்கட்டும்," என்று கூறி, மனுஷனாக பிறந்தார். மனுஷனாக, அவர் நமக்காக தம் ஜீவனை சிலுவையில் கொடுத்தார். தம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தை சிந்தி, நமக்காக மரித்தார். இந்த இரத்தத்தினால் நாம் இரட்சிக்கப்பட்டோம்; நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன. பழைய காலத்தில் பாவ மன்னிப்புக்கென்று மிருகங்கள் பலியிடப்பட்டன. மிருகமானது பலியிடப்படும் ஒவ்வொரு வேளையும் தேவன், ஜனங்களை மன்னித்தார். ஆனால், இயேசு ஒரே பலியானபோது, அதுபோன்ற பலிகளுக்கு அவசியமில்லாமல் போயிற்று. அவருடைய பலியே முழுமையானதும் நித்தியமானதுமாக விளங்குகிறது.

இப்போது, நமக்கு உண்டாயிருக்கிற எல்லா தண்டனைக்கும், இயேசுவின் இரத்தம், "இல்லை. இவன்(ள்)என்னுடைய பிள்ளை. என் பிள்ளை விடுதலையாயிருக்கவேண்டும். நான் ஏற்கனவே தண்டனையை ஏற்றுக்கொண்டிருக்கிறேன்," என்று நமக்காக பரிந்துபேசுகிறது. அதே இரத்தம் எல்லா பாவங்களையும் கழுவி நம்மை புதிதாக்குகிறது. இயேசுவின் இரத்தத்திற்கு மாத்திரமே பாவங்களை கழுவி நம்மை புதுச்சிருஷ்டிகளாக மறுரூபமாக்கும் வல்லமை உண்டு. ஆகவே, இன்றைக்கு, ஆச்சரியமான இந்த இரட்சகரை கொண்டாடும் நாம், நம்முடைய இருதயத்தை திறந்து, நம்மை புதிதாக்கும்படி அவரிடம் கேட்போம். அன்பானவர்களே, இன்றைக்கு உங்களுக்குள் பிறக்கும்படியும், உங்கள் இரட்சகராக விளங்கும்படியும் அவரை அழைப்பீர்களா?

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, எனக்கு இரட்சகராக விளங்கும்படி இந்த உலகிற்கு வந்ததற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். எனக்காக சிலுவையில் உம் ஜீவனைக் கொடுத்து, விலையேறப்பெற்ற இரத்தத்தை சிந்தியதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். என் இருதயத்தில் பிறந்து, என்னை புதுச்சிருஷ்டியாக்கும்படி உம்மை அழைக்கிறேன். உம்முடைய இரத்தத்தால் என் பாவங்களை கழுவி, அக்கிரமங்களிலிருந்தும் இருளிலிருந்தும் என்னை விடுவித்தருளும். உம்முடைய வெளிச்சம் என்னில் பிரகாசிக்கட்டும்; என்னை வழிநடத்தட்டும்; உம்முடைய சமாதானமும் சந்தோஷமும் என் வாழ்வில் நிரம்பும்படி செய்யும். உம்முடைய அன்பை வெளிக்காட்டும் வகையில் நான் வாழ்ந்து உம்முடைய நாமத்திற்கு மகிமை கொண்டு வருவதற்கு உதவி செய்யும். எனக்காக வேண்டுதல் செய்வதற்காகவும் என்னை உம்முடைய பிள்ளை என்று அழைப்பதற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன். இந்த கிறிஸ்துமஸ், என் வாழ்வில் விளங்கும் உம்முடைய பிரசன்னத்தை கொண்டாடும் நாளாக அமையட்டும். என் இருதயத்தை முற்றிலும் உமக்கு அர்ப்பணித்து, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.