அன்பானவர்களே, "தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே" (எபேசியர் 1:4) என்று வேதம் கூறுகிறது. தேவனுடைய திட்டத்தில் நீங்கள் கூடுதலாக சேர்க்கப்படவில்லை; தற்செயலாகவும் அதில் இணைந்திடவில்லை. "தேவன் எவர்களை முன்னறிந்தாரோ ...முன்குறித்திருக்கிறார்" (ரோமர் 8:29) என்று வேதம் கூறுகிறபடியே நீங்கள் முன்குறிக்கப்பட்டு அதில் இடம் பெற்றிருக்கிறீர்கள். உங்களுக்காக புதிய திட்டங்களை தேவன் வகுக்கவில்லை. உங்கள் வாழ்க்கையைக் குறித்த எல்லாமும், உலக தோற்றத்திற்கு முன்பே திட்டம்பண்ணப்பட்டுள்ளது. உங்களது ஒவ்வொரு நகர்வையும், நீங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு இக்கட்டையும், உங்கள் வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் அவர் அறிந்திருக்கிறார். தேவன் உங்கள்பேரில் வைத்திருக்கும் அன்பு எவ்வளவு ஆழமும், அளப்பரியதுமாயிருக்கிறது!
உலகம் உண்டாவதற்கு முன்பே அவர் அன்பினிமித்தம் உங்களை சிருஷ்டித்துள்ளார். பூரண அன்புடன், ஒரு நோக்கத்துடன் உங்களை உருவாக்கியுள்ளார். இந்த சத்தியங்கள் அறிவதற்கு எவ்வளவு ஆச்சரியமாயிருக்கிறது. ஆனாலும், ஆண்டவர், விசுவாசிக்கவேண்டிய பொறுப்பை உங்கள்மேல் வைத்திருக்கிறார். தேவன் உங்களை நேசிக்கிறார் என்பதை நீங்கள் மெய்யாக விசுவாசித்தால், காலத்திற்கு முன்பே அவர் உங்களை அறிந்திருக்கிறார் என்று நீங்கள் நம்பினால், அவருக்கு முன்பாக பரிசுத்தமாகவும் குற்றமற்றவராகவும் காணப்படும்படி நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதையும் புரிந்துகொள்வீர்கள். நீங்கள் உங்களுக்குச் சொந்தமானவரல்ல. நீங்கள் தேவனுடைய சிருஷ்டிப்பாக, அவருடைய நோக்கத்திற்காக பிரித்தெடுக்கப்பட்டவராக இருக்கிறீர்கள்.
"கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்" (எபேசியர் 2:8) என்று வேதம் கூறுகிறது. தேவனை நாம் விசுவாசித்தால், அவருக்குள் பாதுகாப்பாக இருக்கிறோம். உபத்திரவ நேரங்களில், "நான் ஏன் இந்த உலகில் பிறந்தேன்?" என்று எளிதாக கேட்டுவிடுகிறோம். இக்கட்டான நேரங்களில், "நான் எதற்காக இருக்கிறேன்?" என்று கேட்கிறோம். திடன் கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு விசேஷித்தவர் என்று தேவன் அறிந்திருக்கிறார். அன்பானவர்களே, உங்கள் வாழ்க்கையைக் குறித்து அவர் தெய்வீக திட்டத்தை வைத்திருக்கிறார். யோவான்ஸ்நானனை பார்த்தோமானால், கர்த்தர் அவன் வாழ்க்கையைக் குறித்து விசேஷித்த நோக்கத்தை வைத்திருந்தார். "அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள்" (லூக்கா 1:14) என்று வேதத்தில் எழுதப்பட்டுள்ளது. "அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான்" என்று அடுத்த வசனம் கூறுகிறது. யோவான்ஸ்நானன் அவன் தாயின் கர்ப்பத்தில் உருவாகிறதற்கு முன்பே இந்த காரியங்கள் அவனைப் பற்றி ஜீவபுஸ்தகத்தில் அழகாக எழுதப்பட்டுள்ளன.
அவ்வாறே, தேவன் உங்கள் வாழ்க்கையைக் குறித்து மகத்துவமான திட்டத்தை வைத்திருக்கிறார். ஆம், தேவனே உங்களை முன்குறித்து தெரிந்தெடுத்திருக்கிறார். நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் உருவாக்கப்பட்ட அவருடைய கைவேலையாயிருக்கிறீர்கள். நீங்கள் கடந்துசெல்லும்படி தேவன் ஏற்கனவே ஆயத்தம்பண்ணியுள்ள நற்கிரியைகளுக்காகவே நீங்கள் உண்டாக்கப்பட்டிருக்கிறீர்கள். அவர் உங்களைக் குறித்து எவ்வளவாய் நினைவாயிருக்கிறார்; எவ்வளவு அதிகமாய் உங்களை அறிந்திருக்கிறார்; எவ்வளவு ஆழமாய் உங்களை நேசிக்கிறார் என்று யோசித்துப்பாருங்கள். "நீயே எனக்கு சொந்த ஜனமாயிருக்கிறாய். நீ என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவன்(ள்). நீ என்னை தெரிந்துகொள்ளவில்லை; நீ அதிக கனிளைக் கொடுக்கும்படி நான் உன்னை தெரிந்துகொண்டேன்," என்று அவர் கூறுகிறார். ஆம், அன்பானவர்களே, உங்கள் வாழ்க்கையைக் குறித்து ஒரு நோக்கம் இருக்கிறது. தேவனை விசுவாசித்து, அவரண்டை வாருங்கள். அவரை கிட்டிச்சேருங்கள்; அவர் உங்களை தம்மிடமாய் இழுத்துக்கொள்வார்.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, உலகம் தோன்றுவதற்கு முன்பே நீர் என்னை தெரிந்துகொண்டதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். உம்முடைய அன்பு அளவற்றது; என்னைக் குறித்த உம் நினைவுகள் பூரணமானவை. உமக்கு முன்பாக பரிசுத்தமாகவும், குற்றமில்லாமலும் அன்பிலே நடப்பதற்கு எனக்கு உதவும். உம்முடைய நோக்கத்தை நான் எப்போதும் நம்பும்படி என் விசுவாசத்தை பெலப்படுத்தும். நான் இக்கட்டை எதிர்கொள்ள நேரிடும்போது, நான் உமக்கு விசேஷித்தவன்(ள்) என்பதை நான் மறந்துபோகாமலிருக்க உதவும். யோவான்ஸ்நானனை குறித்து நீர் ஒரு திட்டம் வைத்திருந்ததுபோல, எனக்கென்று விசேஷித்த திட்டத்தை நீர் வைத்திருக்கிறீர் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் நற்கிரியை செய்ய இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்ட உம்முடைய கையின் கிரியையாயிருக்கிறேன். நான் செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் கனிகொடுத்து உம்முடைய நாமத்தை மகிமைப்படுத்தும்படி செய்யும். ஆண்டவரே, நான் முழு இருதயத்தோடும் உம்மை தேடுகிறபடியால், என்னை உம்மண்டை கிட்டிச் சேர்க்கவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.