"நீ எழும்பிக் காரியத்தை நடப்பி; கர்த்தர் உன்னோடே இருப்பாராக" (1 நாளாகமம் 22:16) என்ற வாக்குத்தத்தத்தை தேவன் இன்றைக்கு உங்களுக்குத் தருகிறார். உங்களுக்கு முன்னே இருக்கக்கூடிய காரியத்தை செய்யலாமா, வேண்டாமா என்று பயப்படுகிறீர்களா? குடும்ப விஷயங்களைக் குறித்து மனம் கலங்கியிருக்கிறீர்களா? வியாபாரத்தில் என்ன முடிவுகளை எடுக்கலாம் என்று கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிறீர்களா? படிப்பு, வேலை, குடும்ப வாழ்க்கை குறித்து எதிர்காலத்தில் என்ன முயற்சிகளை செய்யலாம் என்று குழம்பியிருக்கிறீர்களா? கர்த்தர் இன்று, "எழும்பு, முன்னேறிச் செல். உனக்கு முன்னே இருக்கும் காரியத்தை நடப்பி," என்று உங்களோடு பேசுகிறார்.  

வேதாகமத்தில் யோனத்தானைக் குறித்து ஒரு சம்பவத்தை வாசிக்கிறோம் (1 சாமுவேல் 14:45). இஸ்ரவேலருக்கு விரோதமாக பெலிஸ்தர்கள் யுத்தம் செய்ய வந்தார்கள். ராஜாவாகிய சவுல் ராணுவத்தை நடத்திய போதும், ராணுவ வீரர்களைப் பயம் பிடித்தது; அவர்கள் ஓடிப் போனார்கள். ஆனால், சவுலின் மகனாகிய யோனத்தான், "அநேகம் பேரை கொண்டாகிலும் கொஞ்சம் பேரை கொண்டாகிலும் இரட்சிப்பதற்கு தேவனால் முடியும். நான் போவேன்,' என்று கூறினான். யோனத்தான், தான் தனியாக இல்லை என்பதை அறிந்திருந்தான். தேவன் அவனோடிருந்தார். அவன் கர்த்தருடைய வல்லமையை நம்பி தன்னுடைய ஆயுதாரியை அழைத்துக்கொண்டு முன்னேறிச் சென்றான். அவர்கள் 20 பேரை மாத்திரம் வெட்டினார்கள். ஆனாலும் கர்த்தர் பூமி அதிர்ச்சியை வரப் பண்ணி சத்துருவின் சேனைக்குள் குழப்பத்தை உண்டு பண்ணினார். பெலிஸ்தர்கள் ஒருவருக்கு விரோதமாய் ஒருவர் எழும்பினார்கள். அன்று இஸ்ரவேலர் பெரிய வெற்றியைக் கண்டார்கள்.

இதைக் கண்ட ஜனங்கள், "கர்த்தர் யோனத்தானோடு இருந்தார். அவன் காரியத்தை நடப்பித்தான்," என்று கூறினார்கள். ஆகவே, "நான் செய்யும் காரியம் வாய்க்குமா, நான் வெற்றிபெறுவேனா?" என்றெல்லாம் சந்தேகத்தோடு கேட்டுக்கொண்டு இருக்காமல், சவுலைப்போல மனம்தளர்ந்து போய், பயந்து காரியத்தை கை விட்டுவிடாமல் முன்னேறிச் செல்லுங்கள்.

உலகம், நீங்கள் செல்லும் பாதையில் தடைகளை உருவாக்கலாம். ஆனாலும் உறுதியாக நில்லுங்கள்.  "இயேசுவே, உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் எனக்காக முன்னால் செல்வதற்காக உமக்கு நன்றி. நீரே என்னுடைய வழி. இயேசுவே, நீர் என்னோடு இருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நான் உம்முடைய நாமத்தினால் செல்லுகிறேன். உம்முடைய நாமத்தினால் படிக்கிறேன். உம்முடைய நாமத்தைக் கொண்டு வேலையை செய்கிறேன்; என்னுடைய குடும்பத்தை நடத்துகிறேன். உம்முடைய நாமத்தைக்கொண்டு மற்றவர்களுக்கு ஊழியம் செய்கிறேன். நீர் என்னோடு இருக்கிறீர்," என்று சொல்லி நம்பிக்கையோடு முன்னேறிச் செல்லும்போது, கர்த்தர் உங்களுக்காக யாவற்றையும் செய்து முடிப்பார். ஈசாக்கை ஆசீர்வதித்ததுபோல உங்கள் கையின் பிரயாசத்தை ஆசீர்வதித்து, நூறு மடங்கு பலனை தருவார்.

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, உம்முடைய வாக்குத்தத்தை முற்றிலுமாக நம்பி உம்மிடம் வருகிறேன். நீர் எனக்கு வழிகாட்டியாக, என்னுடைய பெலனாக, அநுகூலமான துணையாக இருப்பதற்காக உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். என்னுடைய பயங்கள், சந்தேகம், கலக்கங்கள் எல்லாவற்றையும் உம்முடைய பலத்த கரங்களில் ஒப்படைக்கிறேன். ஆண்டவரே, நீர் எனக்கென்று வைத்திருக்கிற வேலையை செய்யும்படி என்னை வழி நடத்தும். உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக. நீர் எனக்கென்று ஆயத்தம் பண்ணி இருக்கிற பாதையில் நடப்பதற்கான தைரியத்தால் என்னை நிரப்பும். உம்முடைய சமுகம் எனக்கு முன்னதாகச் சென்று, கோணலானவற்றை செவ்வையாக்குவதாக. உம்முடைய நாமத்தினால் நான் எழுந்து, முன்னேறிச் செல்கிறேன். நீர் எனக்கென்று வைத்து வைத்து வைத்திருக்கிற ஜெயத்தை சுதந்தரித்துக்கொள்கிறேன். இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தில் எல்லா ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்டு உம்மை துதிக்கிறேன், ஆமென்.